கூகுள் ஜிமெயில் தளத்தில் பல ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது பலருக்கு சிரமமாயுள்ளது. இந்த சிரமத்தைப் போக்க, கூகுள் ஜிமெயில் தளத்தில் பயன்படுத்த எனத் தனியே கீ போர்ட் ஒன்று உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 19.99 அமெரிக்க டாலர். விரைவில் இந்தியாவிலும் இது வரலாம்.
இது 19 கீகள் கொண்டு நம்பர் கீ பேட் போல அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கீயிலும் ஒரு ஷார்ட் கட் வழி அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு மெசேஜை ஸ்டார் இட்டு அமைப்பது, சர்ச் ஒன்றைத் தொடங்குவது, மெசேஜ் த்ரெட்களுக் கிடையே செல்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த ஷார்ட் கட் கீகள் வழி அமைத்துக் கொடுக்கின்றன. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதனை செட் செய்வதற்கு எனத் தனியே டிரைவர் புரோகிராம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஜிமெயில் இணைய தளம் சென்று அதில் ஷார்ட் கட் கீகளை இயக்கும் விருப்பத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.
ஜிமெயில் இணைய தளம் இல்லாத போது, இந்த ஷார்ட் கட் கீகளில் என்ன கீகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்த கீகளாக இவை செயல்படும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், இதனை வடிவமைத்து, உருவாக்கித் தந்தது கூகுள் நிறுவனம் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சார்லி மேசன் என்பவராவார்.
ஏற்கனவே நீங்கள் ஜிமெயில் ஷார்ட் கட் கீகளை நன்கு பயன்படுத்துபவராக இருந்தால் இந்த கீ போர்டு தேவையில்லை. இருப்பினும் விரைவான செயல்பாடு இதன் மூலம் கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இந்த கீ போர்டு உதவியாக இருக்கும்.
ஜிமெயிலில் ஏறத்தாழ 69 கீ போர்டு ஷார்ட் கட் கீகள் இருக்கின்றன என்று எண்ணுகையில் இந்த கீ போர்டு நம் வேலையை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் இது கிடைக்கும் நாளை எதிர்பார்ப்போம்.