3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.
இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.
இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.
இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.