கம்ப்யூட்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான டெல் நிறுவனம் தனது மலேஷிய கிளையில் 700 பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த கிளையில் 4,500 பணியாளர்கள் உள்ளனர். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டர்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேட்டஸ்ட் பாம் டாப் (Palm top) இங்கு தயாரிக்கப்படுகின்றன.
உலகமெங்கும் இந்த நிறுவனத் தயாரிப்புகளுக்கு நல்ல தேவை இருந்தாலும், சமீப காலமாக டெல் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. சர்வதேச மந்தத்தை சமாளிக்க முடியாத நிலையில் பல செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.
நிலைமையைச் சமாளிக்க வரும் ஜூலைக்குள் 700 ஊழியர்களை நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல் நிறுவனத்தின் பினாங் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள். ஜனவரி தொடங்கி ஜூலைக்குள் இந்தப் பணி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜாஸ்மின் பேகம் அறிவித்துள்ளார்.
மேலும் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மட்டும் கம்ப்யூட்டர் தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.