Friday, November 27, 2009

தொழில் நுட்பத்தின் பெயர்கள்

0 comments


தொழில் நுட்பங்கள் மற்றும் அவை தரும் சாதனங்கள் சிலவற்றிற்குப் பெயர் வந்த நிகழ்வுகளைக் காணலாம்.

1. பென்டியம் (Pentium): ஐ 286, 386 மற்றும் 486 என்று இன்டெல் நிறுவனம் தான் வடிவமைத்த சிப்களுக்கு வரிசையாகப் பெயர் சூட்டி வந்தது. 486 ஐ அடுத்து வர இருந்த சிப்பிற்கு ஐ 586 என்று தான் பெயர் வைக்க இன்டெல் எண்ணியிருந்தது. இதனைத் தனக்கு மட்டும் சொந்தமான ஒரு ட்ரேட் மார்க்காக வைக்கத் திட்டமிட்டிருந்தது.
ஏனென்றால் பிற நிறுவனங்கள் (ஏ.எம்.டி. ஏ.எம்486 என) இதே போல பெயரினைத் தங்கள் சிப்களுக்கு வைக்கத் தொடங்கி இருந்தன. ஆனால் அமெரிக்காவின் நீதி மன்றங்கள் எண்களை தனிப்பட்ட நிறுவனம் ஒன்றின் ட்ரேட் மார்க்காக வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை. எனவே இன்டெல் நிறுவனம் லெக்ஸிகன் பிராண்டிங் என்னும் அமைப்பினைத் தனக்கு ஒரு பெயர் தருமாறு கேட்டுக்கொண்டது. அப்போதுதான் பென்டியம் (Pentium) என்ற பெயர் சொல்லப்பட்டது. இதில் "Pente" என்ற சொல் கிரேக்க மொழியில் ஐந்து என்ற பொருளைத் தரும். “ium” என்ற சொல் பின் ஒட்டு; ஆண், பெண் பெயர்ச்சொல் என்ற பேதமின்றி பொதுவான ஒரு ஒட்டாகும். இந்த இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டு பென்டியம் (Pentium) உருவானது.

2. வாக்மேன் (Walkman): இப்போது வாக் மேன் என்றால் யாரும் நடக்கும் மனிதனை நினைக்க மாட்டார்கள். சட்டைப் பை அல்லது இடுப்பு பெல்ட்டில் மாட்டிக் கொண்டு இயர் போனைக் காதில் வைத்துப் பாட்டுக் கேட்கும் சாதனத்தைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவிற்கு அச்சாதனத்தினை மட்டுமே குறிக்கும் சொல்லாக வாக்மேன் உருவாகிவிட்டது. வாக்மேன் 1979ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை சோனி நிறுவனம் அதிக நேரம் தன் நிறுவனத் துணைத் தலைவர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது கேட்பதற்காக வடிவமைத்தது. நடக்கும்போது சுதந்திரமாக இசையைக் கேட்பதற்காக இது பின்னர் உருவானது. அதனால் தான் வாக்மேன் என்ற பெயரை இதற்குத் தந்தனர். ஆனால் ஜப்பானில் தான் இது வாக்மேன். அமெரிக்காவில் சவுண்ட் அபவுட் (Soundabout) என்று அழைக்கப்பட்டது. ஸ்வீடனில் ப்ரீஸ்டைல் (Freestyle) எனவும், பிரிட்டனில் ஸ்டவ் அவே (Stowaway) என்றும் பெயரிடப்பட்டன. ஆனால் காலப் போக்கில் வாக்மேன் என்ற பெயரே நிலைத்தது.

3. ஐபாட் (iPod) : ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் (Hub) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு Pod மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ (டி) சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள்.

4. பிளாக்பெரி (BlackBerry) : 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile) நிறுவனம்,தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு லெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. பெயரில் இமெயில் என்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது எதிர்பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது. சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது. அப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது. மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிளாக்பெரி ((BlackBerry) என்ற பெயர் சாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது.

5. ஆண்ட்ராய்ட் (Android) : கூகுள் நிறுவனத்தின் மொபைலுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை 2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாகவில்லை. ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே மர்மமான முறையில் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியம் வெளியான நிகழ்வு, இன்டர்நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.

6. பயர்பாக்ஸ் (Firefox) : எல்லா நிறுவனங்களைப் போல மொஸில்லாவும் தன் பிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது. முதலில் பயர்பேர்ட் (Fire Bird) என்றுதான் இதற்குப் பெயர் சூட்டியது. ஆனால் இந்த பெயர் இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப் பட்டிருந்ததால் பயர்பாக்ஸ் எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பது செங்கரடிப் பூனையின் பெயர். ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களைக் கேட்டபோது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.

7. ட்விட்டர் (Twitter) : சிறிய பறவைகள் SUT எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத் ததாகக் குறிப்பிட்டார். உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு, கண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று அனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே.

8.திங்க்பேட் (Thinkpad): 1992 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் மக்களின் நம்பிக்கைக்குரிய லேப் டாப் கம்ப்யூட்டராக இதனை வடிவமைத்தது. இதற்குப் பெயர் தர முனைந்த போது, ஐபிஎம் நிறுவனத்தின் ஒரு பிரிவினர் திங்க்பேட் என்ற எளிய சொல்லால் இதனைக் குறிப்பிடலாம் என்று கருத்து தெரிவித்தது. ஆனால் ஐபிஎம் தன் உற்பத்திப் பொருட்களுக்கு எப்போதும் எண்களைக் கொண்டே பெயர்களை அமைத்ததனால் அப்படியே இதற்கும் வைத்திட வேண்டும் என எண்ணியது. மேலும் திங்க்பேட் மற்ற மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்படுமோ என்று கவலையும் கொண்டது. ஆனால் எந்தக் குழப்பமும் இன்றி மிக அழகான பெயராக மக்கள் மனதில் திங்க் பேட் என்ற பெயர் ஊன்றியது.


9. விண்டோஸ் 7 (Windows7): விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் பெயரினையே விட்டுவிடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருட்களின் பெயரின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித் தன்மையைக் காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது. ஆனால் இந்த பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; எனவே இந்த பெயர் இப்படித்தான் இருக்கும்; இந்த பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.


10. அமேஸான் கிண்டில் (Amazon Kindle):  இ–புக் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஸான் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. பழைய நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்தது. இந்த சொல்லின் மூலப் பொருள் மெழுகுவத்தி என்பதாகும். இந்த சொல்லைத் தந்து ஹிப்மா கூறுகையில், “நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப் பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது” என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.

கூகுள் பிரைவசி

0 comments

நாம் கூகுள் தரும் எந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் வைத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று நாம் அறிவோம். ஜிமெயில், யு–ட்யூப், கூகுள் செக் அவுட், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர், ஐகூகுள், பிகாசா வெப் ஆல்பம்ஸ், கூகுள் டாக் என எத்தனையோ இணைய வசதிகளைக் கூகுள் நமக்குத் தருகிறது. அப்போது நம்மைப் பற்றிய தகவல்களையும் பெறுகிறது. அது மட்டுமின்றி நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது, அது பற்றிய புள்ளி விபரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்கிறது.

ஒரு சிலர் கூகுள் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான தகவல்களைப் பெற்று வைத்துக் கொள்கிறது என்று கருதுகின்றனர். ஒரு சிலர் இது நம் தனி உரிமையைக்குள் தலையை விடும் செயல் என்றும் எண்ணுகின்றனர்.

இதனை எண்ணிப் பார்த்தோ என்னவோ, கூகுள் சென்ற மாதம் தன்னிடத்தில் தன் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஓர் ஏற்பாட்டினைச் செய்து தந்துள்ளது. தான் வைத்துள்ள தகவல்களை பயனாளர்கள் எடிட் செய்திடவும் வழி தருகிறது. இத்தகைய தகவல்கள் தங்கவைத்திடும் இடத்திற்கு கூகுள் பிரைவசி டேஷ்போர்டு எனப் பெயர் கொடுத்துள்ளது. இதில் நுழைந்து நாம் கூகுள் வைத்துக் கொள்ளக்கூடாத தகவல்களை எடிட் செய்திடலாம்.


http://www.google.com/dashboard என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் நம்முடைய கூகுள் இமெயில் முகவரி கொடுக்கப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கப்படுகிறது. பின் நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுளின் பல்வேறு சாதனங்கள் வாரியாகத் தரப்படுகின்றன. நம் மின்னஞ்சல் கடிதங்கள் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளும் முகவரிகள் எண்ணிக்கை, படங்கள், காலண்டர், வெப் ஹிஸ்டரி என அனைத்தும் பகுதி பகுதியாகத் தரப்படுகின்றன. ஆனால் அனைத்துமே ஒருவர் ஏற்கனவே தான் அறிந்து தந்த தகவல்களாகத்தான் இருக்கின்றன. இதில் என்ன நல்ல செய்தி என்றால், மற்ற இணைய சேவைத் தளங்கள் போல் அல்லாமல், கூகுள் இவற்றையும் எடிட் செய்திட நமக்கு உரிமை தருகிறது. எந்த தகவலையாவது கூகுள் கொண்டிருக்கக்கூடாது என நாம் எண்ணினால், அதனை நீக்கவும் இடம் உள்ளது.

பி.எஸ்.என்.எல்., '3 ஜி' மொபைல் இணைப்பு : 'பேன்சி' எண்களுக்கு போட்டா போட்டி

0 comments

பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வெளியிட்ட, "3 ஜி' மொபைல் இணைப்பின், "பேன்சி எண்' பெறுவதற்கான ஏலத்தில் பலத்த போட்டி நிலவுகிறது. பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி, "3 ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, "சிம்கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர," 2 ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி, "3 ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதே எண்ணுடன் கூடிய, கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு வழங்கப்படுகிறது.



சமீபத்தில், "2 ஜி' சேவையில், 250 "பேன்சி' எண்கள் ஏலம் விடப்பட்டன. தான் விரும்பிய மொபைல் போன் எண் ணிற்காக, ஒருவர் அதிகபட்சமாக 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏலம் எடுத்துள்ளார். "2 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில், சென்னை தொலைபேசிக்கு, நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, "3 ஜி' மொபைல் இணைப்பு எண்களில், "பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய, "3 ஜி' இணைப்புகள் அனைத்தும், "94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை "பேன்சி' எண்களாக குறிக்கப்படுகின்றன. சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றிற் கென குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் 1,000 ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2,000 ரூபாயும், கடைசி ஐந்து எண்களுக்கு 3,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.



தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகை குறைந்தபட்ச இருப்புத் தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள், இந்த தொகையில் இருந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், சென்னையில், "3 ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள், "பேன்சி' எண்களாக பிரிக்கப்பட்டு, அவற் றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரிபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.300 வைத் திருக்க வேண்டும். ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரும் 1ம் தேதி வரை, ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். பதிவிற்குப் பின், ஏலத்திற்கான எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்காக ஒரு ரூபாய் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



சென்னை தொலைபேசி தவிர, தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலை பேசி எண்கள் ஏலம் நடந்து வருகிறது. தற்போது நடந்துவரும், "3 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட, சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில், "" 3 ஜி' ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால், அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால், 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள், திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால், அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.

மீண்டும் தள்ளிப் போனது 3 ஜி ஏலம்

0 comments
பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் மீண்டும் தள்ளிப் போகிறது.

வருகிற 2010 ஜனவரி 14-ம் தேதி இந்த ஏலம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த ஏலம் சில கராரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

பாதுகாப்புத் துறையின் அனுமதி காரணமாகவே டிசம்பர் 7-ம் தேதி நடப்பதாக இருந்த இந்த ஏலம் முன்பு தள்ளிப் போடப்பட்டது.

குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த அலைக்கற்றைகளை அனுமதிப்பதால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று பாதுகாப்புத் துறை கருதுவதால், அந்தப் பகுதிகளில் இந்த மின் அலைகள் இல்லாமல் சரி செய்யும் வேலை இன்னும் முடியவில்லையாம். இதனால்தான் இந்தத் தாமதமாம்.

ஆனால் எப்படியும் வருகிற பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த ஏலம் நடக்கும் என தொலைத் தொடர்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிதியாண்டுக்குள் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்காவிட்டால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Posts with Thumbnails