பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வெளியிட்ட, "3 ஜி' மொபைல் இணைப்பின், "பேன்சி எண்' பெறுவதற்கான ஏலத்தில் பலத்த போட்டி நிலவுகிறது. பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி, "3 ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, "சிம்கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர," 2 ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி, "3 ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதே எண்ணுடன் கூடிய, கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு வழங்கப்படுகிறது.
சமீபத்தில், "2 ஜி' சேவையில், 250 "பேன்சி' எண்கள் ஏலம் விடப்பட்டன. தான் விரும்பிய மொபைல் போன் எண் ணிற்காக, ஒருவர் அதிகபட்சமாக 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏலம் எடுத்துள்ளார். "2 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில், சென்னை தொலைபேசிக்கு, நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, "3 ஜி' மொபைல் இணைப்பு எண்களில், "பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய, "3 ஜி' இணைப்புகள் அனைத்தும், "94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை "பேன்சி' எண்களாக குறிக்கப்படுகின்றன. சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றிற் கென குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் 1,000 ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2,000 ரூபாயும், கடைசி ஐந்து எண்களுக்கு 3,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.
தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகை குறைந்தபட்ச இருப்புத் தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள், இந்த தொகையில் இருந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், சென்னையில், "3 ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள், "பேன்சி' எண்களாக பிரிக்கப்பட்டு, அவற் றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரிபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.300 வைத் திருக்க வேண்டும். ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரும் 1ம் தேதி வரை, ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். பதிவிற்குப் பின், ஏலத்திற்கான எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்காக ஒரு ரூபாய் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை தொலைபேசி தவிர, தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலை பேசி எண்கள் ஏலம் நடந்து வருகிறது. தற்போது நடந்துவரும், "3 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட, சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில், "" 3 ஜி' ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால், அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால், 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள், திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால், அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.
No comments:
Post a Comment