காப்புரிமையை மீறிய மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ரூ.1,363 கோடி அபராதத்தை அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது எம்எஸ் ஆபீஸ் பேக்கேஜ். இதன் ஒரு பகுதியான ‘வேர்டு’ ஆவணங்களை உருவாக்குவதில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேர்டு சாப்ட்வேரில் அதன் காப்புரிமையை மீறி, தங்களது தயாரிப்பான எக்ஸ்எம்எல் எனப்படும் சாப்ட்வேரின் அம்சங்களையும் சேர்த்து விற்பனை செய்து வருவதாக கனடாவின் ஐ4ஐ இன்க், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், வேர்டு சாப்ட்வேரின் காப்புரிமை மீறப்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.1363 கோடி இழப்பீடு தர உத்தரவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
‘‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செயலால், சிறிய நிறுவனமான ஐ4ஐ சந்தை மதிப்பு 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எம்எல் பிராண்ட் மதிப்பு குறைந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளது’’ என மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ4ஐ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: - தினகரன்