Friday, November 20, 2009

ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ள மெகா கோடீஸ்வரர்கள்

0 comments

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 2 மடங்காக உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.

இந்தியாவின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் ஆசியா பொருளாதார இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி. இது இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்காகும். அதாவது, 25 சதவீதம்.

கடந்த ஆண்டின் போர்ப்ஸ் பட்டியலின்படி, ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. இப்போது அது 54 ஆக உயர்ந்துள்ளது. இது 100 சதவீதம் அதிகம். கடந்த சில மாதங்களில் பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதும், பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக நீடிப்பதும் புதிய பணக்காரர்கள் உருவாக காரணமாக அமைந்தது.

இதுபற்றி போர்ப்ஸ் ஏசியா ஆசிரியர் நஸ்ரீன் கர்மாலி கூறுகையில், "இந்திய கோடீஸ்வரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான நாட்கள் திரும்பியுள்ளன. இந்த ஆண்டு பட்டியலில் புதுமுகங்கள் சேர்ந்திருப்பது, இந்திய பங்குச் சந்தையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கிறது" என்றார்.

உலகின் வேறெந்த நாடுகளையும் விட அதிக கோடீஸ்வரர்களை குறுகிய காலத்தில் உருவாக்கும் வளமும், வாய்ப்புகளும் இந்தியாவில் மட்டுமே உள்ளன. புதிய கோடீஸ்வரர்கள் எல்லா துறைகளில் இருந்தும் உருவாகி இருப்பதே இதற்கு சாட்சி என்றும் நஸ்ரீன் கூறினார்.

போர்ப்ஸ் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து இந்த ஆண்டும் நாட்டின் முதல் பணக்காரராக நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி. இங்கிலாந்து வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல், ரூ.1.41 லட்சம் கோடியுடன் 2வது இடத்தில் உள்ளார். முகேஷின் தம்பி அனில் அம்பானி ரூ.82,500 கோடி சொத்துடன் 3வது இடத்தில் இருக்கிறார்.

சென்னை அலுவலகத்தை மூடுகிறது சோனி எரிக்ஸன்

0 comments
உலகில் உள்ள தனது சில முக்கிய கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது சோனி எரிக்ஸன் நிறுவனம். இதன் மூலம் 2000 பணியாளர்களைக் குறைக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கிளையும் அடங்கும். இதன் மூலம் சென்னையில் மட்டும் 420 பேர் பணியிழப்புக்கு உள்ளாகின்றனர்.

முக்கோண ஆராய்ச்சிப் பூங்கா - Research Triangle Park - எனும் பெயரில் உலகில் சில முக்கிய இடங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தியிருந்தது சோனி எரிக்ஸன்.

இப்போதைய நிதி நெருக்கடியான சூழலில் செலவுக் குறைப்பே பிரதானம் என்பதால், தனது முக்கிய கிளைகள் சிலவற்றை பிற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கிறது சோனி.

அதன்படி வட அமெரிக்காவிலிருந்த சில அலுவலகங்களை மொத்தமாக அட்லாண்டா நகருக்கு மாற்றியுள்ளது. இன்னும் சிலவற்றை கலிபோர்னியாவிலுள்ள ரெட்வுட் ஷோர்ஸ் பகுதிக்கு மாற்றிவிட்டது.

இந்தியாவில் சென்னையில் இருந்த சோனி எரிக்ஸன் அலுவலகம் மூடப்படுகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள லுண்ட் நகருக்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளால் சோனி எரிக்ஸன் நிறுவனத்தில் உள்ள 2000 பணியாளர்கள் வேலை இழக்கிறார்கள். வரும் 2010 ஆண்டு மூன்றாவது காலாண்டுக்குள் இந்த செலவுக்குறைப்பு நடவடிக்கை முடிந்துவிடுமாம்.
சென்னை அலுவலகம் மூடப்படுவதால் உள்ளூரில் 420 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள்.

3 ஜி சேவை... நாளை முதல் தமிழகத்தில்

0 comments

சென்னையில் நாளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஜி மொபைல் சேவை அறிமுகமாகிறது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

வீடியோ கான்பரன்ஸிங் உள்ள பல நவீன வசதிகளை அளிக்கும் அடுத்த தலைமுறைக்கான மொபைல் சேவையை கடந்த பிப்ரவரி மாதமே அறிமுகப்படுத்தியது பிஎஸ்என்எல்.

ஆனால் இந்த திட்டம் வட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதுகுறித்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் விவரம் கேட்டும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களுக்குத் தெரியாது என்று கூறி வந்தனர்.

இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த திட்டத்தை சென்னையில் நாளை முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கான தொடக்க விழா அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த 3ஜி தொழில் நுட்பம் மூலம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு தவிர இன்டர் நெட், டெலிவிஷன் நிகழ்ச்சிகள், திரைப்படம் போன்ற பல வசதிகளை அனுபவிக்க முடியும்.

இந்த 3ஜி தொழில் நுட்ப வசதியை தற்போதுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக அவர்கள் புதிய இணைப்பு எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.120 ரீசார்ஜ் செய்தும், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தியும் 3ஜி தொழில் நுட்ப வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் பி.எஸ். என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் லோக்கலில் பேச நிமிடத்திற்கு ரூ.1-ம், எஸ்.டி.டி பேச ரூ.1.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக லோக்கலுக்கு நிமிடத்திற்கு ரூ.30 பைசா, எஸ்.டி.டி.க்கு ரூ.50 பைசாவும் இப்போதைக்கு குறைக்கப்படுகிறது. புதிய கட்டண திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Related Posts with Thumbnails