இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 2 மடங்காக உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.
இந்தியாவின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் ஆசியா பொருளாதார இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி. இது இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்காகும். அதாவது, 25 சதவீதம்.
கடந்த ஆண்டின் போர்ப்ஸ் பட்டியலின்படி, ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. இப்போது அது 54 ஆக உயர்ந்துள்ளது. இது 100 சதவீதம் அதிகம். கடந்த சில மாதங்களில் பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதும், பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக நீடிப்பதும் புதிய பணக்காரர்கள் உருவாக காரணமாக அமைந்தது.
இதுபற்றி போர்ப்ஸ் ஏசியா ஆசிரியர் நஸ்ரீன் கர்மாலி கூறுகையில், "இந்திய கோடீஸ்வரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான நாட்கள் திரும்பியுள்ளன. இந்த ஆண்டு பட்டியலில் புதுமுகங்கள் சேர்ந்திருப்பது, இந்திய பங்குச் சந்தையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கிறது" என்றார்.
உலகின் வேறெந்த நாடுகளையும் விட அதிக கோடீஸ்வரர்களை குறுகிய காலத்தில் உருவாக்கும் வளமும், வாய்ப்புகளும் இந்தியாவில் மட்டுமே உள்ளன. புதிய கோடீஸ்வரர்கள் எல்லா துறைகளில் இருந்தும் உருவாகி இருப்பதே இதற்கு சாட்சி என்றும் நஸ்ரீன் கூறினார்.
போர்ப்ஸ் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து இந்த ஆண்டும் நாட்டின் முதல் பணக்காரராக நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி. இங்கிலாந்து வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல், ரூ.1.41 லட்சம் கோடியுடன் 2வது இடத்தில் உள்ளார். முகேஷின் தம்பி அனில் அம்பானி ரூ.82,500 கோடி சொத்துடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
No comments:
Post a Comment