ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3,000 விலையில் கம்ப்யூட்டர் விற்பனையை இந்த மாதம் தொடங்க நிவியோ திட்டமிட்டுள்ளது.
"டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை ரூ.3,000க்கு விற்பனை செய்ய ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்" என நிவியோ தலைவர் சச்சின் துகல் கூறினார். ஏற்கனவே, மைக்ரோசாப்ட், ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் பிசி வசதியை நிவியோ அளிக்கவுள்ளது.
நிவியோ கம்பேனியன் என்ற கருவியை ரூ.4,999ல் அது அறிமுகம் செய்தது.
கூகுல் $750 மில்லியன் கொடுத்து வாங்கப்படும் பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்ட நிறுவனம்.
கூகுள் நிறுவனம் $750 மில்லியன் டாலர் விலைக்கு AdMob என்ற மொபைல் விளம்பர சேவை நிறுவனத்தை வாங்கி உள்ளது. 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஒரு பள்ளி மாணவனால் உருவாக்கப்பட்டது.
மொபைல் தொழில்நுட்பம் மிகவும் வளராத காலத்தில் பல இன்னல்களை சந்தித்து வளர்ந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று. iPhoneன் வரவுக்குப் பின்பு பல நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
AdMobஐ வாங்குவதன் மூலம் ஒரு நல்ல மொபைல் விளம்பர வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளம்பர தொழில்நுட்பத்தை கூகுள் வாங்குகிறது.
முதியோர் எளிமையான முறையில் மொபைல் போன்களை கையளும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் லேண்ட் லைன் போன் வடிவில் மொபைல் போன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து பி.எஸ்.என்.எல். துணைக் கோட்டப் பொறியாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். நிறுவனம் மொபைல் போன்களை முதியோர் எளிமையான முறையில் கையாளும் நோக்கத்தில் லேண்ட் லைன் போன் வடிவில் அதே இயக்கத்தில் ஜி.எஸ்.எம். பிக்ஸ்ட் ஒயர்லெஸ் மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போனில் சிம் கார்டுகளை செருகி பேசலாம். தரைவழி தொலைபேசியை எவ்வாறு கையாளுகின்றோமோ அதே போல் எளிமையாக இதை இயக்க முடியும்.
பிரீ பெய்ட், போஸ்ட் பெய்ட் 2 வகையான சிம் கார்டுகளில் எதை வேண்டுமானாலும் இதில் உபயோகிக்கலாம். மொபைல் போனில் உள்ள ஒலியின் தரத்தை விட இதன் ஒலி தெளிவாகவும் நன்றாகவும் இருக்கும். எல்லா பி.எஸ்.என்.எல். நிறுவனங்களிலும் தற்போது இந்த போன் கிடைக்கும். பிரீ பெய்ட் சேவையில் ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற திட்டம் தற்போது அமலில் உள்ளது. இந்த சேவையைப் பெற ரூ.45க்கான பூஸ்டர் கார்டை உபயோகிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு வட்டத்திற்குள் பேசும் போது ஒரு வினாடிக்கு ஒரு பைசா கணக்கிடப்படும். இதைத் தவிர ரூ.49க்கான பூஸ்டர் கார்டை உபயோகிக்கும் போது எந்த மொபைல் போனுக்கு பேசினாலும், எஸ்.டி.டி பேசினாலும் ஒரு நிமிடத்திற்கு 49 பைசா திட்டம் நடைமுறையில் உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் துணைக் கோட்டப் பொறியாளர்.
அக்சென்சர் மற்றும் குளோபல் டெக்னாலஜி இணைந்து இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்தியாவில் இந்த நிறுவனங்களின் பணியாளர் எண்ணிக்கை 42000 ஆக உள்ளது. இந்த புதிய பணியாளர்களையும் சேர்த்து 50000 பேராக தங்கள் தொழிலாளர் பலத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக அக்சென்சர் தலைவர் வில்லியம் டி கிரீன் தெரிவித்துள்ளார்.
வில்லியம் கிரீன் மேலும் கூறுகையில், "உலகம் மெல்ல மெல்ல சரிவிலிருந்து மீளத் துவங்கிவிட்டதன் அறிகுறிகள் தெரிகின்றன. குறிப்பாக இந்தியாவில் நிலைமைகள் மிகவும் சாதகமாக உள்ளன. எனவே இந்தியாவில் மட்டும் 8000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது. அனலிடிக்ஸ் பிரிவில் இந்த பணியாளர்களை ஈடுபடுத்தப் போகிறோம். இந்தியாவில் இந்த பணிக்கு பெரிய அளவில் ஸ்கோப் இருக்கிறது.." என்றார்.
அக்சென்சரின் நடப்பு ஆண்டு வருவாய் 21.58 பில்லியன் டாலர்கள். இந்த ஆண்டு மருந்துகள் உற்பத்தி மற்றும் தொலைபேசித் துறை வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளது அக்சென்சர்.
பொறியியல் பட்டதாரிகளில் 75 சதவீதம் பேருக்கு வேலைக்கான தகுதியில்லை என்று தொழில் துறை அமைப்பான நாஸ்காம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் இந்திய உயர் கல்வி குறித்த 6வது உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. அதில் இடம்பெற்ற குழு விவாதத்தில் வெளியான தகவல்களை அசோசேம் அமைப்பு, அறிக்கையாக வெளியிட்டது. நிகழ்ச்சியில் புனே பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சகஸ்ரபாது கூறுகையில், பொறியியல் பட்டதாரிகளுக்கு எளிதில் வேலை கிடைக்காததற்கு காரணம், படிப்பை முடித்து வெளிவரும்போது வேலைக்கான தகுதியோ, முன்அறிவோ இல்லாததே. இது முன்னணி கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் பொருந்தும் என்றார். நம்நாட்டின் பெரும்பாலான கல்லூரிகளின் கல்வித் திட்டமே பாட அடிப்படையிலானது. தொழிற் பயிற்சி, நேரடி அனுபவம் கிடையாது என்பதே காரணம் என்றார் அவர்.
அமெரிக்கப் பொருளாதாரம் சரியான திசையில் பயணிப்பதாக அதிபர் ஒபாமா சொல்லி வாய் மூடும் முன்பே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் காணாத உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 190000 பேர் வேலை இழந்துள்ளனர்.
இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம்.
"நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்" என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.
இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மொத்தம் 509 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இது 3.03 சதவிகித உயர்வாகும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் தெரிவித்துள்ளது.
இந்த உயர்வின் மூலம் இந்தியாவின் டெலிடென்சிட்டி 43.5 சதவிகிதமாக உள்ளது.
கம்பியில்லாத தொலைபேசி மற்றும் மொபைல் இணைப்புகள் பெற்றுள்ளோர் எண்ணிக்கை மட்டும் 471.73 மில்லியனாக உள்ளது.
மொபைல் சேவையைப் பொறுத்தவரை முதலிடத்தில் இருப்பது தனியார் நிறுவனமான பார்தி ஏர்டெல் 110.5 மில்லியன் சந்தாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 86.11 மில்லியன் சந்தாரர்களுடன் இரண்டாம் இடத்திலும், வோடபோன் 82.84 மில்லியன் சந்தாரர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
அனைத்து வசதிகளும் கொண்ட அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 58.75 மில்லியன் சந்தாதாரர்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
டாடா நிறுவனம் 5-ம் இடத்தில் உள்ளது. இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 46.79 மில்லியன்.
பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளோர் எண்ணிக்கை 7.22 மில்லியன். அதேநேரம் லேண்ட்லைன் இணைப்பு பெற்றவர்களில் 37.31 மில்லியன் சந்தாதாரர்கள் அவற்றை திரும்ப சரண்டர் செய்துள்ளர்.