நவ. 17: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி பவுன் விலை ரூ.11,920 ஆக இருந்தது. இது நவம்பர் 2-ம் தேதி ரூ.12,104 ஆக அதிகரித்தது. இதன் மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பவுன் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இப்போது ரூ.13 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.1,605. திங்கள்கிழமை விலை: ஒரு பவுன் ரூ.12,784. ஒரு கிராம் ரூ.1,598. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது என்கின்றனர் வியாபாரிகள். முதல் முறையாக, ஒரே மாதத்தில் பவுனுக்கு ரூ.900 அளவுக்கு உயர்வு ஏற்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment