சர்வதேச செல்போன் அடையாள (ஐஎம்இஐ) எண் இல்லாத சுமார் 1.7 கோடி செல்போன்களின் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது.
சீனா மற்றும் கொரியாவில் தயாரான செல்போன்கள் மலிவான விலையில் கிடைப்பதால் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் இதில் 15 இலக்கங்களுடன் கூடிய ஐஎம்இஐ எண் இருப்பதில்லை. இதை தீவிரவாதிகள் பயன்படுத்தியதால் அவர்களை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களின் இணைப்பை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. வாடிக்கையாளர் நலன் கருதி நவம்பர் 30ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இறுதி நாளான நேற்று முன்தினம் செல்போன் நிறுவனங்கள் மேலும் அவகாசம் தர வேண்டும் என திடீரென கோரிக்கை வைத்தன. இதை மத்திய அரசு நிராகரித்து விட்டது. திட்டமிட்டபடி, ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன் இணைப்பை துண்டிக்க தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டது. இதன்படி, சுமார் 1.7 கோடி செல்போன்களின் இணைப்புகள் நேற்று முன்தினம் நள்ளிரவோடு துண்டிக்கப்பட்டன.
ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணை அழைக்கும்போதோ, எஸ்எம்எஸ் அனுப்பும்போதோ அல்லது பெறும்போதோ ஐஎம்இஐ எண்ணை தொலைத் தொடர்புத் துறை கண்காணிக்க முடியும். இதன் அடிப்படையில், இந்த எண் இல்லாத மற்றும் போலி எண்கள் கொண்ட செல்போன்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.சில செல்போன் நிறுவனங்கள், ஐஎம்இஐ எண் இல்லாத வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இதுகுறித்து ஏற்கனவே தகவல் கொடுத்துள்ளன.இந்த எண் இல்லாதவர்கள், இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் ரூ.199 செலுத்தி, ஐஎம்இஐ எண்ணைப் பெற்றுக் கொண்டு அதே செல்போனை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment