தெலங்கானா பிரச்னை தொடர்கதையாக இருப்பதால், ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அலுவலகங்களை மாற்ற திட்டமிட்டுள்ளன.
ஆந்திராவின் ஐதராபாத்தில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா மற்றும் எச்சிஎல் ஆகிய நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு பிரிவினரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இதனால் கடந்த ஒன்றரை மாதமாக ஐ.டி.தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் அலுவலகங்களை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து அந்நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
"ஐதராபாத்தில் செயல்படும் டாப் 5 ஐடி நிறுவனங்கள், சென்னை, பெங்களூரில் வாடகைக்கு அலுவலகம் வேண்டும் என கேட்டுள்ளன" என ஸ்ரீராம் பிராப்பர்டிஸ் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்தார்.
"இரண்டு ஐடி நிறுவனங்கள் 100 அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தமாக லீசுக்கு வேண்டும் என தெரிவித்துள்ளன" என அக்ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டி பாபு தெரிவித்தார்.
No comments:
Post a Comment