Friday, January 22, 2010

ராமலிங்க ராஜூ: ஒரு 'ஐடி ராஜாவின்' எழுச்சியும் வீழ்ச்சியும்


தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியையே உண்டாக்கியவர் ராமலிங்க ராஜு.

சத்யம் என்ற நிறுவனத்தை சர்வ சாதாரணமாகத் துவங்கிய ராஜு, மிகக் குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் 'ப்ளூ சிப்' நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியவர். மிகச் சில வருடங்களில் 2 பில்லியன் டாலர் நிறுவனமாக சத்யம் உருவானது ராஜுவின் அபார திறமையால்தான். சொல்லப் போனால் அவருக்கு நிகரான ஒரு கார்ப்பரேட் நிர்வாகியே இல்லை என்கிறார்கள்.

ராஜுவின் குடும்பத் தொழில் ரியல் எஸ்டேட் தான். அதனால்தான் சத்யம் என்ற ஐடி நிறுவனத்தைத் துவங்கிய பிறகு அவர் மேடாஸ் இன்ப்ரா என்ற ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தையும் துவங்கினார். சத்யம் நிறுவனத்தின் நிதியை இந்த மேடாஸுக்கு அவ்வப்போது மாற்றினார்.

இன்னொரு பக்கம் சத்யம் நிறுவனப் பங்குகளின் விலையை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்க, இல்லாத லாபத்தை உருவாக்கிக் காட்டினார்.

2008ம் ஆண்டில் உலகம் முழுக்க ஐ.டி நிறுவனங்கள் பெரிதாக அடிவாங்க, அந்த நேரத்திலும் போலி லாபம் காட்டவும், சத்யம் நிறுவன பணத்தை மேடாஸுக்கு மாற்றவும் அவர் முயன்ற போதுதான் மாட்டிக் கொண்டார்.

அதுவரை அவரைப் பற்றி ஆஹா ஓஹோவென எழுதி பெரும் பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த மீடியா, அப்படியே தூக்கிப் போட்டு உடைத்து அந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கியது.

பின்னர் எத்தனையோ கதைகள்... ஆதாரங்கள் ராஜுவைப் பற்றியும், ராஜுவுக்கு எதிராகவும்...

ஆனால்- இவற்றுக்கெல்லாம் அப்பால், 5 கண்டங்களில் 66 நாடுகளில் சத்யம் என்ற ஒரு பிஸினஸ் சாம்ராஜ்யத்தை ராஜு உருவாக்கியிருந்த விதம், அதில் அவர் காட்டிய முனைப்பும் வேகமும் ஒவ்வொரு தொழிலதிபரும், இளைஞரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அனுபவம்.

அவரது மேடாஸ் நிறுவனம் நிறுவனம் பற்றி பல்வேறு மாறுபட்ட செய்திகள் உலா வந்தாலும், ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை அந்த நிறுவனம் வென்ற விதம் வளரும் நிறுவனங்களுக்கு ஒரு பாடம் என்கிறார்கள்.

ராஜு பெற்ற அபார வெற்றியின் பின்னணி... அவரது வீழ்ச்சிக்கான காரணங்கள்... நிறுவனச் சட்டங்களை அவர் தனக்கு சாதகமாக வளைத்த விதம், நிறுவன பங்குதாரர்கள், ஊழியர்கள் கண்களை மறைத்து அவர் செய்த பிஸினஸ் ஜாலங்கள்... இவை அனைத்தையும் இப்போது 'The Double Life Of Ramalinga Raju!' என்று ஒரு புத்தகமாக எழுதியுள்ளார் கிங்ஷக் நாக்.

இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ரெஸிடென்ட் எடிட்டர் ஆவார்.

ராஜூவைப் பற்றி இதுவரை மீடியாவில் வெளிவராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் கலக்கலாய் எழுதியிருக்கிறார் நாக்.

முழுசாகப் படிக்க இந்த புத்தகம் ஆன்லைனிலும் விலைக்குக் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails