Thursday, November 12, 2009

உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை கிரடிட், டெபிட் கார்டால் வங்கிகளுக்கு சிக்கல்


இந்த ஆண்டில் புதிதாக எந்த பொருளாதாரச் சிக்கலும் ஏற்படாது. ஆனால் 2010ம் ஆண்டில் வங்கிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பெரும் வேலை இல்லாத் திண்டாட்டம் வங்கிகளை பாதிக்கக்கூடும். அத்துடன் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நுகர்வுக் கடன்கள் மூலம் வங்கிகளுக்கு பிரச்சினை வரலாம் என உலக வங்கித் தலைவர் ராபர்ட் ஜோலிக் கூறினார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ராபர்ட் ஜோலிக் கலந்து கொண்டார். மாநாட்டு அரங்கில் செய்தியாளர்களுடன் பேசிய போது, 2010ல் ஆண்டில் வங்கிகள் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: இதுவரை, உலக நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரம் உதவியாக இருந்திருக்கிறது.

அமெரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக நாடுகள் ஏற்றுமதி செய்தன. இனி அத்தகைய நிலை இராது. அமெரிக்காவின் தேவைகள் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் பொழுது இந்த மாற்றத்தை வெற்றிகரமாக சமாளித்தாக வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்து ஒரே நேரத்தில் விடுபட முடியாது. நாட்டுக்கு நாடு காலம், நேரம், முறை முதலியன மாறுபடக்கூடும். அதனால் உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்தால் சிக்கல்கள் குறையும். தேக்க நிலையில் இருந்து விடுபட புதிய ஊக்குவிப்புச் சலுகைகள் தேவை இல்லை. 2010ம் ஆண்டிலும் சலுகைகள் தொடரலாம் என்றார்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails