இணைய தளத்தில் வெளியிட காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்த கூகுள் நிறுவனம், விதிமீறலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.6.72 லட்சம் அபராதம் செலுத்த பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது உலகம் முழுவதும் அரிய புத்தகங்களை ஸ்கேன் செய்து அனைவரும் இணைய தளத்தில் படிக்கும் வசதி ஏற்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. ‘டிஜிட்டல் புக்’ என்ற பெயரிலான அந்த வசதிக்காக இதுவரை 1 லட்சம் பிரெஞ்சு மொழி புத்தகங்களை ஸ்கேன் செய்துள்ளது.
காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் வெளியிடக் கூடாது என்று கூகுளுக்கு பல பதிப்பகங்கள், நூலாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வந்தது.
இதை எதிர்த்து பிரான்ஸ் பதிப்பாளர் லா மார்டினர், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பாரீஸ் நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. ‘டிஜிட்டல் புக் வசதிக்காக காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்தது சட்ட மீறல். அந்தப் பணியில் ஈடுபட்ட நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.6.72 லட்சத்தை கூகுள் அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கு தொடர்ந்த லா மார்டினருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூ.2.02 கோடி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி கூகுள் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் அப்பீல் செய்யும்’ என்றார்.
இதேபோல கூகுளின் ‘டிஜிட்டல் புக்’ வசதிக்கு அமெரிக்கா, ஜெர்மனி காப்புரிமை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் இடம்பெறச் செய்வதை கூகுள் கைவிடத் தவறினால் அவர்களும் வழக்கு தொடர்ந்து பல கோடி இழப்பீடு கோர திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த தீர்ப்பு குறித்து பிரான்ஸ் பதிப்பக உரிமையாளர் சங்க அதிகாரி கூறுகையில், ‘‘இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. என்ன நினைத்தாலும் செய்யலாம் என்று உலகின் ராஜாவாக தன்னை நினைத்த கூகுளுக்கு சரியான பாடம் இது’’ என்றார்.
No comments:
Post a Comment