வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளது கூகுள் நிறுவனம். சமீபத்திய செய்திகளின்படி இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் சம்பாதித்த 1.6 பில்லியன் பவுண்டுகளுக்கு (1 பவுண்ட் = ரூ 76) வரி செலுத்தவில்லையாம்.
இதுகுறித்த செய்தியை சண்டே டைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள்.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் கூறியுள்ளது டைம்ஸ். பிரிட்டிஷ் வங்கிகளில் உள்ள தனது வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டிக்கு செலுத்திய வரிதானாம் இது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் லிபரல் டெமாக்கரடிக் கட்சியின் துணைத் தலைவர் வின்ஸ் கேபிள், "கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். சம்பாதித்த பணத்துக்கு நேர்மையாக பணம் செலுத்துவதில் என்ன தயக்கம்? தனது சமூகப் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது கூகுள்" என்றார்.
"நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில் அதிக வருவாய் ஈட்டும் கூகுள் போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால், அந்த வரிச் சுமை சாதாரண மக்களின் தொண்டையில் கத்தியாய் நிற்கும்" என்றும் கேபிள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment