Friday, January 22, 2010

ராமலிங்க ராஜூ: ஒரு 'ஐடி ராஜாவின்' எழுச்சியும் வீழ்ச்சியும்

0 comments

தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியையே உண்டாக்கியவர் ராமலிங்க ராஜு.

சத்யம் என்ற நிறுவனத்தை சர்வ சாதாரணமாகத் துவங்கிய ராஜு, மிகக் குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் 'ப்ளூ சிப்' நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியவர். மிகச் சில வருடங்களில் 2 பில்லியன் டாலர் நிறுவனமாக சத்யம் உருவானது ராஜுவின் அபார திறமையால்தான். சொல்லப் போனால் அவருக்கு நிகரான ஒரு கார்ப்பரேட் நிர்வாகியே இல்லை என்கிறார்கள்.

ராஜுவின் குடும்பத் தொழில் ரியல் எஸ்டேட் தான். அதனால்தான் சத்யம் என்ற ஐடி நிறுவனத்தைத் துவங்கிய பிறகு அவர் மேடாஸ் இன்ப்ரா என்ற ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தையும் துவங்கினார். சத்யம் நிறுவனத்தின் நிதியை இந்த மேடாஸுக்கு அவ்வப்போது மாற்றினார்.

இன்னொரு பக்கம் சத்யம் நிறுவனப் பங்குகளின் விலையை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்க, இல்லாத லாபத்தை உருவாக்கிக் காட்டினார்.

2008ம் ஆண்டில் உலகம் முழுக்க ஐ.டி நிறுவனங்கள் பெரிதாக அடிவாங்க, அந்த நேரத்திலும் போலி லாபம் காட்டவும், சத்யம் நிறுவன பணத்தை மேடாஸுக்கு மாற்றவும் அவர் முயன்ற போதுதான் மாட்டிக் கொண்டார்.

அதுவரை அவரைப் பற்றி ஆஹா ஓஹோவென எழுதி பெரும் பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த மீடியா, அப்படியே தூக்கிப் போட்டு உடைத்து அந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கியது.

பின்னர் எத்தனையோ கதைகள்... ஆதாரங்கள் ராஜுவைப் பற்றியும், ராஜுவுக்கு எதிராகவும்...

ஆனால்- இவற்றுக்கெல்லாம் அப்பால், 5 கண்டங்களில் 66 நாடுகளில் சத்யம் என்ற ஒரு பிஸினஸ் சாம்ராஜ்யத்தை ராஜு உருவாக்கியிருந்த விதம், அதில் அவர் காட்டிய முனைப்பும் வேகமும் ஒவ்வொரு தொழிலதிபரும், இளைஞரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அனுபவம்.

அவரது மேடாஸ் நிறுவனம் நிறுவனம் பற்றி பல்வேறு மாறுபட்ட செய்திகள் உலா வந்தாலும், ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை அந்த நிறுவனம் வென்ற விதம் வளரும் நிறுவனங்களுக்கு ஒரு பாடம் என்கிறார்கள்.

ராஜு பெற்ற அபார வெற்றியின் பின்னணி... அவரது வீழ்ச்சிக்கான காரணங்கள்... நிறுவனச் சட்டங்களை அவர் தனக்கு சாதகமாக வளைத்த விதம், நிறுவன பங்குதாரர்கள், ஊழியர்கள் கண்களை மறைத்து அவர் செய்த பிஸினஸ் ஜாலங்கள்... இவை அனைத்தையும் இப்போது 'The Double Life Of Ramalinga Raju!' என்று ஒரு புத்தகமாக எழுதியுள்ளார் கிங்ஷக் நாக்.

இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ரெஸிடென்ட் எடிட்டர் ஆவார்.

ராஜூவைப் பற்றி இதுவரை மீடியாவில் வெளிவராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் கலக்கலாய் எழுதியிருக்கிறார் நாக்.

முழுசாகப் படிக்க இந்த புத்தகம் ஆன்லைனிலும் விலைக்குக் கிடைக்கிறது.

Tuesday, January 19, 2010

யுனிநார் வாடிக்கையாளர் ஒரே மாதத்தில் 12 லட்சம்

0 comments

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது சேவைகளைத் துவக்கிய யுனிநார் 2010 ஜனவரிக்குள் அகில இந்திய அளவில் 12 லட்சத்திறகும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் அதன் சந்தாதாரர் எண்ணிக்கை 2லட்சத்து 2ஆயிரமாக உள்ளது என யுனிநார் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.


ஒரு நிமிடத்திற்கு லோக்கல் காலுக்கு 29 பைசாவும் எஸ்டிடி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு 49 பைசா கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 3ம் தேதி உ.பி (மேற்கு), உ.பி (கிழக்கு), பீகார், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் யுனிநார் சேவை தொடங்கியது. அதன் ஜி.எஸ்.எம் சேவை ஜனவரி மாத இறுதியில் துவக்கப்பட உள்ளது.


கடந்த ஆண்டின் கடைசி மாதத்தில் மட்டும் தமிழ்நாடு வட்டத்தில் 2 லட்சத்துக்கு அதிகமான சந்தாதாரர்களும் இந்திய அளவில் 12 லட்சத்துக்கு கூடுதலாகவும் சந்தாதாரர்கள் உள்ளனர்.

Thursday, January 7, 2010

'ஐ போனுக்கு' போட்டியாக கூகுளின் 'நெக்ஸஸ் ஒன்'

0 comments

ஆப்பிள் நிறுவனத்துக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தனது சொந்தத் தயாரிப்பான நெக்ஸஸ் ஒன் செல்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

பென்சிலை விட மெல்லிசாக உள்ள இந்த செல்போனகள் இரண்டு வித விலைகளில் கிடைக்கின்றன.

முதல் வகை செல்போன் விலை 179 டாலர். இதில் குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட்வொர்க்கைத்தான் பயன்படுத்த வேண்டும். இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் வாங்க வேண்டும். இடையில் வேறு நிறுவனத்துக்கு மாறக்கூடாது.

அடுத்த வகை போன் 529 டாலர். இதில் விருப்பப்பட்ட நெட்வொர்க்கை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஐபோன்களுக்கு எதிராக இந்த நெக்ஸஸ் ஒன்னை களமிறக்கியுள்ளது கூகுள்.

ஒரு கம்ப்யூட்டரில் இணைய தளம் மூலம் என்னென்ன வசதிகளெல்லாம் உங்களுக்குக் கிடைக்குமோ அத்தனையும் இந்த நெக்ஸஸ் ஒன்னில் கிடைக்கும் என்பதுதான் இதன் சிறப்பு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியேற திட்டம்

0 comments

தெலங்கானா பிரச்னை தொடர்கதையாக இருப்பதால், ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அலுவலகங்களை மாற்ற திட்டமிட்டுள்ளன.


ஆந்திராவின் ஐதராபாத்தில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா மற்றும் எச்சிஎல் ஆகிய நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு பிரிவினரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.


இதனால் கடந்த ஒன்றரை மாதமாக ஐ.டி.தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் அலுவலகங்களை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து அந்நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.


"ஐதராபாத்தில் செயல்படும் டாப் 5 ஐடி நிறுவனங்கள், சென்னை, பெங்களூரில் வாடகைக்கு அலுவலகம் வேண்டும் என கேட்டுள்ளன" என ஸ்ரீராம் பிராப்பர்டிஸ் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்தார்.


"இரண்டு ஐடி நிறுவனங்கள் 100 அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தமாக லீசுக்கு வேண்டும் என தெரிவித்துள்ளன" என அக்ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டி பாபு தெரிவித்தார்.

Thursday, December 31, 2009

ஜாம்டெல்லை வாங்க பிஎஸ்என்எல் முயற்சி

1 comments


ஜாம்பியாவின் அரசு தொலைபேசி நிறுவனமான ஜாம்டெல்ஸை வாங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல்.

ஜாம்டெல் தனது 75 சதவிகித பங்குகளை விற்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச நிறுவனங்கள் அதை ஏலத்தில் எடுக்க போட்டியிட்டன.

இதில் இறுதி ஏலதாரர்களாக இந்திய அரசின் பிஎஸ்என்எல், அங்கோலாவின் யுனிடெல், லிபியாவைச் சேர்ந்த லாப் கிரீன்காம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றொரு இந்திய அரசு நிறுவனமான எம்டிஎன்எல்லும் இதற்கு முயற்சித்தது. ஆனால் இறுதி நேரத்தில் பின்வாங்கிவிட்டது.

ஏலத்துக்குப் பிறகு ஜாம்டெல் நிறுவனத்தின் 75 சதவிகித பங்குகள் எந்த நிறுவனத்துக்கு தரப்படும் என்பதை வரும் ஜனவரி 11-ம் தேதி ஜாம்பியா அரசு அறிவிக்கிறது.

Tuesday, December 29, 2009

இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 500 மில்லியன்

0 comments

இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்துடன் 500 மில்லியன் என்ற இலக்கைத் தாண்டியது.

தொலைபேசித் ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்படி நவம்பர் மாத முடிவில் 543.20 மில்லியன் மக்கள் இந்தியாவில் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நவம்பர் வரை 44.87 சதவிகிதமாக இருந்த தொலைத் தொடர்பு அடர்த்தி (Teledensity), இப்போது 46.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

செல்போன் பயன்பாட்டைப் பொறுத்தவர் 506 மில்லியன் மக்கள் இணைப்புகளைப் பெற்றுள்ளனர். அதிக வாடிக்கையாளர் கொண்ட செல்போன் நிறுவனங்களில் இப்போதும் தனியார் நிறுவனமான ஏர்டெல்தான் முதலிடம் வகிக்கிறது. 116 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.

பிஎஸ்என்எல் இன்றும் நான்காவது இடத்திலேயே உள்ளது. அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 60.78 மில்லியன்.

பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் 7.40 மில்லியனிலிருந்து 7.67 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Monday, December 28, 2009

3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2010 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது

0 comments

3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.

இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.

இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts with Thumbnails