ஜாம்பியாவின் அரசு தொலைபேசி நிறுவனமான ஜாம்டெல்ஸை வாங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல்.
ஜாம்டெல் தனது 75 சதவிகித பங்குகளை விற்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச நிறுவனங்கள் அதை ஏலத்தில் எடுக்க போட்டியிட்டன.
இதில் இறுதி ஏலதாரர்களாக இந்திய அரசின் பிஎஸ்என்எல், அங்கோலாவின் யுனிடெல், லிபியாவைச் சேர்ந்த லாப் கிரீன்காம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றொரு இந்திய அரசு நிறுவனமான எம்டிஎன்எல்லும் இதற்கு முயற்சித்தது. ஆனால் இறுதி நேரத்தில் பின்வாங்கிவிட்டது.
ஏலத்துக்குப் பிறகு ஜாம்டெல் நிறுவனத்தின் 75 சதவிகித பங்குகள் எந்த நிறுவனத்துக்கு தரப்படும் என்பதை வரும் ஜனவரி 11-ம் தேதி ஜாம்பியா அரசு அறிவிக்கிறது.
இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்துடன் 500 மில்லியன் என்ற இலக்கைத் தாண்டியது.
தொலைபேசித் ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்படி நவம்பர் மாத முடிவில் 543.20 மில்லியன் மக்கள் இந்தியாவில் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
நவம்பர் வரை 44.87 சதவிகிதமாக இருந்த தொலைத் தொடர்பு அடர்த்தி (Teledensity), இப்போது 46.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
செல்போன் பயன்பாட்டைப் பொறுத்தவர் 506 மில்லியன் மக்கள் இணைப்புகளைப் பெற்றுள்ளனர். அதிக வாடிக்கையாளர் கொண்ட செல்போன் நிறுவனங்களில் இப்போதும் தனியார் நிறுவனமான ஏர்டெல்தான் முதலிடம் வகிக்கிறது. 116 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.
பிஎஸ்என்எல் இன்றும் நான்காவது இடத்திலேயே உள்ளது. அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 60.78 மில்லியன்.
3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.
இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.
இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.
இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ல் தனது ஆண்டு சம்பளமாக 1 டாலரை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதேபோல வருடாந்திர போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் 2009-ம் ஆண்டு அவருக்கு தரப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தை 1976-ல் நிறுவியவர் ஜாப்ஸ். இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர் 1997-ல் மீண்டும் இணைந்தார். அன்று முதல் தனது சம்பளமாக ஆண்டுக்கு 1 டாலர் மட்டுமே பெறுகிறார் ஜாப்ஸ்.
உலகின் டாப் சிஇஓ என ஹார்வர்டு பிஸினஸ் ரிவிவ் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ம் ஆண்டு தனது பயணப்படியாக 4000 டாலரை மட்டுமே பெற்றுள்ளார்.
இதற்கு முந்தைய ஆண்டில் இவர் பெற்ற பயணப்படி 871000 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஸ்டீவ் தலைமையில் இயங்கும் மற்ற நிர்வாகிகள் நால்வருக்கு தலா 1 லட்சம் டாலர் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 5.5 மில்லியன் பங்குகள் உள்ளன. இது தவிர, வால்ட் டிஸ்னியிலும் அவருக்கு 7.4 மில்லியன் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டும் 4.5 பில்லியன் டாலர்கள்.
ஸ்டீவின் காலத்தில்தான் ஆப்பிள் பங்குதாரர்களுக்கு மிக அதிகபட்ச வருவாய் கிடைத்தது.
காப்புரிமையை மீறிய மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ரூ.1,363 கோடி அபராதத்தை அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது எம்எஸ் ஆபீஸ் பேக்கேஜ். இதன் ஒரு பகுதியான ‘வேர்டு’ ஆவணங்களை உருவாக்குவதில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேர்டு சாப்ட்வேரில் அதன் காப்புரிமையை மீறி, தங்களது தயாரிப்பான எக்ஸ்எம்எல் எனப்படும் சாப்ட்வேரின் அம்சங்களையும் சேர்த்து விற்பனை செய்து வருவதாக கனடாவின் ஐ4ஐ இன்க், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், வேர்டு சாப்ட்வேரின் காப்புரிமை மீறப்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.1363 கோடி இழப்பீடு தர உத்தரவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
‘‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செயலால், சிறிய நிறுவனமான ஐ4ஐ சந்தை மதிப்பு 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எம்எல் பிராண்ட் மதிப்பு குறைந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளது’’ என மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ4ஐ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14-ம் தேதி நடக்கப்போகிறதாம். இதனை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா இன்று டில்லியியில் அறிவித்துள்ளார்.
3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விடுவதன் மூலம் ரூ 25000 கோடியைத் திரட்டத் மத்திய அரசு திட்டமிட்டு, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் தரப்படவும் , ஏலத் தொகை மற்றும் ஏலத் தேதியை முடிவு செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு வை(eGoM) மத்திய அரசு அமைத்துள்ளது.
தேச நலன் கருதி எல்லைப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை செயலிழக்கச் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கால அவகாசம் கோரியிருந்தது .
இதனால் இந்த ஆண்டு நடப்பதாக இருந்த 3 ஜி ஏலம் 2010-க்கு தள்ளிப் போனது.
இந்த நிலையில் 3 ஜி ஏலத் தேதி தொடர்பாக அமைச்சர்கள் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. ஒருமணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ராசா, திட்டமிட்டபடி ஜனவரி 14-ம் தேதி ஏலம் நடக்கும் என்றும், அதற்குள் பாதுகாப்புத் துறை ஸ்பெக்ட்ரம் அலைகளை எல்லைப் புறங்களில் அப்புறப்படுத்திவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏலத்தில் வெல்லும் 4 நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளது கூகுள் நிறுவனம். சமீபத்திய செய்திகளின்படி இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் சம்பாதித்த 1.6 பில்லியன் பவுண்டுகளுக்கு (1 பவுண்ட் = ரூ 76) வரி செலுத்தவில்லையாம்.
இதுகுறித்த செய்தியை சண்டே டைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள்.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் கூறியுள்ளது டைம்ஸ். பிரிட்டிஷ் வங்கிகளில் உள்ள தனது வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டிக்கு செலுத்திய வரிதானாம் இது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் லிபரல் டெமாக்கரடிக் கட்சியின் துணைத் தலைவர் வின்ஸ் கேபிள், "கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். சம்பாதித்த பணத்துக்கு நேர்மையாக பணம் செலுத்துவதில் என்ன தயக்கம்? தனது சமூகப் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது கூகுள்" என்றார்.
"நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில் அதிக வருவாய் ஈட்டும் கூகுள் போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால், அந்த வரிச் சுமை சாதாரண மக்களின் தொண்டையில் கத்தியாய் நிற்கும்" என்றும் கேபிள் கூறியுள்ளார்.
இணைய தளத்தில் வெளியிட காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்த கூகுள் நிறுவனம், விதிமீறலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.6.72 லட்சம் அபராதம் செலுத்த பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது உலகம் முழுவதும் அரிய புத்தகங்களை ஸ்கேன் செய்து அனைவரும் இணைய தளத்தில் படிக்கும் வசதி ஏற்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. ‘டிஜிட்டல் புக்’ என்ற பெயரிலான அந்த வசதிக்காக இதுவரை 1 லட்சம் பிரெஞ்சு மொழி புத்தகங்களை ஸ்கேன் செய்துள்ளது.
காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் வெளியிடக் கூடாது என்று கூகுளுக்கு பல பதிப்பகங்கள், நூலாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வந்தது.
இதை எதிர்த்து பிரான்ஸ் பதிப்பாளர் லா மார்டினர், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பாரீஸ் நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. ‘டிஜிட்டல் புக் வசதிக்காக காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்தது சட்ட மீறல். அந்தப் பணியில் ஈடுபட்ட நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.6.72 லட்சத்தை கூகுள் அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கு தொடர்ந்த லா மார்டினருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூ.2.02 கோடி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி கூகுள் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் அப்பீல் செய்யும்’ என்றார்.
இதேபோல கூகுளின் ‘டிஜிட்டல் புக்’ வசதிக்கு அமெரிக்கா, ஜெர்மனி காப்புரிமை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் இடம்பெறச் செய்வதை கூகுள் கைவிடத் தவறினால் அவர்களும் வழக்கு தொடர்ந்து பல கோடி இழப்பீடு கோர திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த தீர்ப்பு குறித்து பிரான்ஸ் பதிப்பக உரிமையாளர் சங்க அதிகாரி கூறுகையில், ‘‘இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. என்ன நினைத்தாலும் செய்யலாம் என்று உலகின் ராஜாவாக தன்னை நினைத்த கூகுளுக்கு சரியான பாடம் இது’’ என்றார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும்.
ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspxஎன்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போனை இங்கிலாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 200 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட அதன் விலை ரூ.14.7 கோடி. லிவர்பூலைச் சேர்ந்த தங்க நிறுவனம் கோல்டு ஸ்டிரைக்கர் இன்டர்நேஷனல். அதன் ஆர்டரின் கீழ் ஸ்டாட் ஹியூஜஸ் என்ற நிறுவனம், உலகின் விலை உயர்ந்த செல்போனை தயாரித்துள்ளது. 3ஜி தொழில்நுட்பம் கொண்ட அந்த ஐபோனில் 200 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
முற்றிலும் 22 காரட் தங்கத்தில் தயாரானது. முன்பக்கத்தில் 136 வைரங்களும், 53 வைரங்களில் ஐபோன் நிறுவனமான ஆப்பிளின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. இந்த போனை தயாரிக்க 10 மாதங்கள் ஆகின. 7 கிலோ எடை கொண்ட உறுதியான கிரானைட்பேக்கிங்கில் அது விற்பனைக்கு அனுப்பப்பட்டது. கிரானைட் கற்களில் உலகின் மிகத் தரமானதாக காஷ்மீர் கோல்டு கிரானைட் கருதப்படுகிறது. அதில் இந்த பேக்கிங் செய்யப்பட்டுள்ளது.
நீங்கள், உங்கள் வேலைகளை ஞாபகம் வைத்துக்கொள்ள சிறு தாள்களில் குறிப்பெழுதி உங்கள் மேசை மற்றும் கணினி திறையில் ஒட்டி வைப்பவரா? அல்லது அனைத்தையும் ஒரு ஏட்டில் எழுதி வைப்பவரா அல்லது அவ்வேலைகளை செய்யும் மென்பொருளில் சேமிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு புதிய குறிப்பு ஒட்டி (ஸ்டிக்கி நோட்ஸ்) இதோ.
நீங்கள் முழு நேரமும் இணையத்தில் இருப்பவர் (வேலை நிமித்தமோ அல்லது பொழுது கழிப்பதற்கோ) என்று வைத்துக்கொள்வோம். இதற்காக நீங்கள் சிரமம் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு எளிமையான, இணையத்துடன் கூடிய ஒரு சிறு குறிப்பு ஒட்டி.
இதற்கென நீங்கள் அந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும்என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தொடர்பை சுட்டி (Sticky Screen) அங்கு தோன்றும் குறிப்புகளுக்கு பதில் உங்களுக்கு தேவையான குறிப்புகளை தட்டிக்கொள்ளவும். பிறகு அப்பக்கத்தை உங்கள் முகப்பு பக்கமாக சேமிக்கவும். அவ்வளவுதான் நீங்கள் ஒவ்வொறு முறை புதிய டேப் கிளிக் செய்யும் பொழுதெல்லாம் இந்த குறிப்புகள் உங்கள் திறையில் தெரியும்.
பங்களாதேஷ் நாட்டின் நான்காவது பெரிய செல்போன் நிறுவனமான வாரிட் டெலிகாமை வாங்குகிறது இந்தியாவின் பார்தி ஏர்டெல்.
அபு தாபியைச் சேர்ந்த தாபி நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த வாரிட் மொபைல். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பங்களாதேஷ் மொபைல் போன் மார்க்கெட்டில் நுழைகிறது பார்தி ஏர்டெல்.
வாரிட் டெலிகாமின் 70 சதவிகித பங்குகளை பார்திக்கு விற்க சம்மதித்துவிட்ட தாபி நிறுவனம், இதற்கு முறைப்படி பங்களைதேஷ் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது.
கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பார்தி, படிப்படியாக 900 மில்லியன் டாலர் வரை பங்களாதேஷில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளது.
வாரிட் நிறுவனம் 2007-ல் பங்களாதேளஷில் கால்பதித்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக அந்நாட்டின் பெரிய செல்போன் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
பார்தி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவது, பங்களாதேஷ் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் இப்போது 52 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கம்ப்யூட்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான டெல் நிறுவனம் தனது மலேஷிய கிளையில் 700 பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த கிளையில் 4,500 பணியாளர்கள் உள்ளனர். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டர்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேட்டஸ்ட் பாம் டாப் (Palm top) இங்கு தயாரிக்கப்படுகின்றன.
உலகமெங்கும் இந்த நிறுவனத் தயாரிப்புகளுக்கு நல்ல தேவை இருந்தாலும், சமீப காலமாக டெல் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. சர்வதேச மந்தத்தை சமாளிக்க முடியாத நிலையில் பல செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.
நிலைமையைச் சமாளிக்க வரும் ஜூலைக்குள் 700 ஊழியர்களை நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல் நிறுவனத்தின் பினாங் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள். ஜனவரி தொடங்கி ஜூலைக்குள் இந்தப் பணி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜாஸ்மின் பேகம் அறிவித்துள்ளார்.
மேலும் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மட்டும் கம்ப்யூட்டர் தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை, சூளைமேடு வன்னியர் தெருவைச் சேர்ந்த கவுதமி என்பவர் சென்னை ஆற்காடு சாலையில் உள்ள கிருஷ்ணா அண்ட் கோ நிறுவனம் மீது மயிலாப்பூரில் உள்ள தெற்கு நுகர்வோர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கிருஷ்ணா நிறுவனம் தனக்கு கம்யூட்டர் சப்ளை செய்ததில் குறைபாடு உள்ளது. இதனால், தனக்கு ரூ.4 லட்சத்து 80,000 இழப்பு ஏற்பட்டது. என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருஷ்ணா நிறுவனம் பாதிக்கப்பட்ட கவுதமிக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்க உத்தரவிட்டனர். கிருஷ்ணா அண்ட் கோ மேல் முறையீடு செய்தது. நீதிபதி எம்.தணிகாசலம், உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். கிருஷ்ணா அண்ட் கோ நிறுவனம் குறைபாடான கம்யூட்டரை சப்ளை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று தீர்ப்பளித்தது.???????????
கூகுள் ஜிமெயில் தளத்தில் பல ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பது பலருக்கு சிரமமாயுள்ளது. இந்த சிரமத்தைப் போக்க, கூகுள் ஜிமெயில் தளத்தில் பயன்படுத்த எனத் தனியே கீ போர்ட் ஒன்று உருவாக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 19.99 அமெரிக்க டாலர். விரைவில் இந்தியாவிலும் இது வரலாம்.
இது 19 கீகள் கொண்டு நம்பர் கீ பேட் போல அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கீயிலும் ஒரு ஷார்ட் கட் வழி அமைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு மெசேஜை ஸ்டார் இட்டு அமைப்பது, சர்ச் ஒன்றைத் தொடங்குவது, மெசேஜ் த்ரெட்களுக் கிடையே செல்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த ஷார்ட் கட் கீகள் வழி அமைத்துக் கொடுக்கின்றன. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். இதனை செட் செய்வதற்கு எனத் தனியே டிரைவர் புரோகிராம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஜிமெயில் இணைய தளம் சென்று அதில் ஷார்ட் கட் கீகளை இயக்கும் விருப்பத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.
ஜிமெயில் இணைய தளம் இல்லாத போது, இந்த ஷார்ட் கட் கீகளில் என்ன கீகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அந்த கீகளாக இவை செயல்படும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், இதனை வடிவமைத்து, உருவாக்கித் தந்தது கூகுள் நிறுவனம் இல்லை. திரைப்பட தயாரிப்பாளர் சார்லி மேசன் என்பவராவார்.
ஏற்கனவே நீங்கள் ஜிமெயில் ஷார்ட் கட் கீகளை நன்கு பயன்படுத்துபவராக இருந்தால் இந்த கீ போர்டு தேவையில்லை. இருப்பினும் விரைவான செயல்பாடு இதன் மூலம் கிடைக்கும் என்று எண்ணுபவர்களுக்கு நிச்சயம் இந்த கீ போர்டு உதவியாக இருக்கும்.
ஜிமெயிலில் ஏறத்தாழ 69 கீ போர்டு ஷார்ட் கட் கீகள் இருக்கின்றன என்று எண்ணுகையில் இந்த கீ போர்டு நம் வேலையை எளிதாக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் இது கிடைக்கும் நாளை எதிர்பார்ப்போம்.
முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனமான நோக்கியா, தனது பின்லாந்து கிளையின் ஊழியர்களில் கணிசமானோரை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
வருகிற 2010-ம் ஆண்டில் இந்த பணி நீக்கம் தொடங்கும் என்றும் ஆண்டு முழுவதும் 90 நாட்களுக்கு ஒருமுறை 20 சதவிகித ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா நிறுவனத்துக்கு பின்லாந்தில் சலோ என்ற நகரில் ஒரே ஒரு தொழிற்சாலை உள்ளது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள்.
"மார்க்கெட் நிலவரம் மோசமாக உள்ளது.இப்போதைக்கு எல்லா பணியாளர்களுக்கும் வேலை தருவது சாத்தியமல்ல. முதலில் நிறுவனத்தைக் காப்பதுதான் முக்கியமாக உள்ளது" என்றார் நோக்கியாவின் செய்தி தொடர்பாளர்.
வசூலாகாத கடனை சமாளித்து சொத்தாக மாற்றும் வகையில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு உதவும் ரேவிஷ் பி சர்வ் என்ற இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.வசூலாகாத கடன் நிர்வகிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனம் ரேவிஷ். அதன் சார்பில் www.reyvishbserve.com என்ற இணைய தளம் தொடங்கப்பட்டு உள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஆகியவை தங்களிடம் உள்ள வசூலாகாத கடன் விவரங்களை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.வசூலாகாத கடன்களை (என்பிஏ) சொத்தாக மாற்றும் வகையில் கடன் வசூலிப்பில் புதிய தொழில்நுட்பங்களை ரேவிஷ் பி சர்வ் இணைய தளம் அளிக்கிறது.
கடன் வசூலிப்பில் அவை வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த இணைய தளத்துடன் அரசு வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளன. வசூலாகாத கடனுக்கான அசையும், அசையா சொத்துகளை சட்டரீதியாக பிரச்னையின்றி ஏலம் விட்டு என்பிஏ&வை குறைக்க ரேவிஷ் பி சர்வ் உதவுகிறது. கடன் வசூலிப்பு நடைமுறைகளை விளக்குவதுடன், சர்பாசி சட்டப்படி ஏலம் நடத்துதல், தீர்ப்பாய உத்தரவு பெற்று ஏலம் விடுதல், வங்கி சாரா நிதி நிறுவனங்களால் பறிமுதலான வாகனங்கள், சொத்துகளை ஆன்லைன் ஏலம் விடுதல் ஆகியவற்றிலும் ரேவிஷ் பி சர்வ் சிறந்து விளங்குகிறது.
கூகுள் குரோம் உலாவிக்கான விரிவாக்கங்கள் (Extension) தற்பொழுது இணையத்தில் அதிகமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் நமது உற்பத்தி திறனை மேம்படுத்த, வேண்டியதை தேர்ந்தெடுக்கும் வசதிகள் மிக அதிகமாக உள்ளன.
திரையை கைப்பற்ற (Screen Capture) நம்மிடம் ஏற்கனவே Screenshot Captor, Grab Them All, Screengrab for Firefox மற்றும் aviary.com போன்றவைகள் உள்ளன. ஆனால் இவையெல்லாம் நெருப்பு நரி உலாவிக்கான விரிவாக்கங்கள். ஆனால் தற்பொழுது Aviary screen capture (திரை கைப்பற்றுதல்) என்றொரு கூகுள் க்ரோமுக்கான விரிவாக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் க மேன்மையான முடிவுகளை பெற முடியும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ இன்ஃபோடெக் நிறுவனம் நியூயார்க்கைச் சேர்ந்த சிமான்டெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தகவல்கள் காணாமல் போவதைத் தடுத்தல் மற்றும் பின்புல வசதி மூலம் தகவல்களை மீட்டெடுத்தல் மற்றும் கட்டமைப்பு சேவைகளை அளித்தல் உள்ளிட்ட பணிகளில் விப்ரோ நிறுவனத்துக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை சிமான்டெக் அளிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விப்ரோ வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் மிகவும் பத்திரமாக கிடைக்கவும், தகவல் தொகுப்புகளை மீட்டெடுக்கவும் வழி ஏற்படும்.
சிமான்டெக் நிறுவனத்தின் தகவல் தொகுப்பு மீட்கும் தீர்வானது தகவல் தொகுப்பு ஒருங்கிணைப்பில் மிக முக்கியமாக செயலாற்றும். பின்புல தகவல் மீட்பு கட்டமைப்பு சேவை மற்றும் தகவல் இழப்பு தடுப்பு சேவை ஆகியவற்றை மிகச் சிறப்பாக விப்ரோ கையாள இந்த ஒப்பந்தம் உதவும்.
செல்போன் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியின் ஒரு கட்டமாக வோடபோன் நிறுவனம் தனது இரு திட்டங்களுக்கான ரோமிங் கட்டணத்தைக் குறைத்துள்ளது.
போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீ பெய்ட் ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் இது பொருந்தும். வோடபோனின் டிராவல் பிளான் மற்றும் டிக்கெட் பிளான் ஆகிய இரு பிரிவுகளில் இந்த ரோமிங் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
டிராவல் பிளான் திட்டப்படி வாடிக்கையாளர்கள் இனிமேல் ஒரு நிமிடத்திற்கு 70 பைசா ரோமிங் கட்டணமாக செலுத்த வேண்டும். டிக்கெட் பிளான் திட்டத்தில், ஒரு விநாடிக்கு 1.5 பைசா செலுத்த வேண்டும்.
ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், ரூ. 61 ரீசார்ஜ் செய்து டிராவல் பிளானையும், ரூ. 62 ரீசார்ஜ் செய்து டிக்கெட் பிளானையும் பயன்படுத்தலாம்.
இந்த இரு திட்டங்களுக்கான வாலிடிட்டி ரீசார்ஜ் செய்யும் நாளிலிருந்து 365 நாட்களாக இருக்கும்.
இந்திய மொழிகளில் குறுந்தகவல் (SMS)எழுதுதல் மற்றும் அனுப்புதல்
இது ஒரு கைபேசி மென்பொருள் பற்றிய தகவல். இம்மென்பொருளில் நீங்கள் பல்வேறு இந்திய மொழிகளான இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, வாங்க மொழி மற்றும் பஞ்சாபி மொழிகளில் குறுந்தகவல் செய்தி அனுப்பலாம். இதில் நீங்கள் வழக்கமான ஆங்கில மொழியை உங்கள் பிராந்திய மொழி உச்சரிப்பிலேயே தட்டச்சு செய்யலாம். உதாரணமாக நீங்கள் தகவலை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இந்தியில் அனுப்பலாம்.
இதற்காக நீங்கள் தட்டச்சு எதுவும் கற்றுக்கொள்ள தேவையில்லை. இச்சேவை தற்பொழுது இந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மொழிகளில் விரைவில் சேவையை விரிவாக்கப்படுமென கூறப்படுகிறது.
இது ஜாவா வசதியுள்ள கைபேசிகளில் மட்டுமே வேலைசெய்யும் அதாவது பெரும்பாலான நோக்கியா போன்களில் செயல்படும். இச்சேவை தற்பொழுது சோதனை பதிப்பாக மாதம் ரூ.149/- க்கு கிடைக்கிறது கிடைக்கிறது.
இதனை சோதித்து பார்க்க நீங்கள் Quillpad என தட்டச்சு செய்து அதனை 57333 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.
குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால், http://carbon.hexxeh.net/chromiumos/ என்ற முகவரியில் கிடைக்கும், பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
சீன செல்போன்களுக்கு அசல் ஐஎம்இஐ எண் பெறுவதற்கான காலக்கெடு முடிந்த பிறகு பெறப்படும் எண்கள் சில நாட்களில் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களுக்கு இணைப்பை ரத்து செய்ய போன் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டது.
அதற்கான காலக்கெடு கடந்த 30ம் தேதி முடிந்தது. அதற்கு முன் சில மாதங்களாக சீன செல்போன்களுக்கு அசலான ஐஎம்இஐ எண்ணைப் பெற செல்போன் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வசதியும் கடந்த 30ம் தேதியோடு முடிந்த நிலையில், சில நிறுவனங்கள் ரூ.300 முதல் ரூ.500 வரை பெற்றுக் கொண்டு தொடர்ந்து ஐஎம்இஐ எண் அளித்து வருகின்றன.
நிபுணர் ஒருவர் கூறுகையில், காலக்கெடு முடிந்த பிறகு ஐஎம்இஐ எண் அளிப்பது சட்ட விரோதம். இப்போது பெறப்படும் எண்களுக்கு செல்போன் நிறுவனங்கள் சங்கம் பொறுப்பேற்காது. அவை சில நாட்களில் ரத்தாகி விடும் என்றார்.
இன்னிலையில் ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் தங்களது தயாரிப்பில் உள்ள ஐஎம்இஐ எண் நம்பகமானதுதான் என தமது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் உறுதி அளித்துள்ளது.
மேலும் ஸ்பைஸ் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அருகில் உள்ள விநியோகஸ்தரிடம் சென்று இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். 3 ஜி மொபைல் போன் எண்களை ஏலத்தில் விட்டதில் சென்னையில் 8 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ கால் வசதி கொண்ட 3 ஜி சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல். சென்னையில் அறிமுகப்படுத்தியது.
இந்த சேவையை தங்களுக்குப் பிடித்தமான பேன்ஸி எண்களுடன் பெற போட்டி போட்டனர் வாடிக்கையாளர்கள். எனவே வாடிக்கையாளரின் இந்த ஆர்வத்தை காசாக்கும் முயற்சியில் இறங்கிய பிஎஸ்என்எல், 292 'பேன்சி' எண்களை ஏலத்தில் விட முடிவு செய்தது.
ஏற்கனவே, 2 ஜி சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்த அனுபவம் பிஎஸ்என்எல்லுக்கு உண்டு.
எனவே 3 ஜி எண்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் ஒவ்வொரு பேன்சி எண்ணுக்கும் குறைந்த பட்ச தொகையாக ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது.
இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 55555 என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டன.
இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
பெரும் சர்ச்சைக்கும் சந்தேகப் பார்வைக்கும் ஆளான டெலினார்- யூனிடெக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான யூனினார் தனது மொபைல் சேவையைத் துவங்கியது.
நார்வேயைச் சேர்ந்த நிறுவனம் டெலினார். இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கின் 74 சதவீதப் பங்குகளை சர்ச்சைக்குரிய முறையில் வாங்கியது இந்த நிறுவனம். பின்னர் யூனிடெக்கின் பெயரைப் பயன்படுத்தி பல பெயர்களில் இந்தியாவில் கூட்டாக மொபைல் சேவையைத் துவங்க லைசென்சுக்கு விண்ணப்பித்தது.
போட்டியிட்ட பிற நிறுவனங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த நிறுவனத்துக்குதான் 2 ஜி அலைவரிசையை ஒதுக்கியது மத்திய தொலைத் தொடர்புத் துறை.
பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வெறும் ரூ.1651 கோடிக்கு யூனிடெக் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதுமட்டுமல்ல, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெறும்வரை டெலினார் நிறுவனத் தொடர்பு பற்றி பேசாமல் இருந்த யூனிடெக், அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அடுத்த சில வாரங்களுக்குள் டெலினாருடன் கூட்டணி சேர்ந்ததாக அறிவித்து, தனது 60 சதவிகித பங்குகளையும் டெலினாருக்கு மாற்றியது. யாரும் பிரச்சனை செய்யக் கூடாது என்பதால், யூனினார் என்ற புது நிறுவனத்தை கணக்கில் கொண்டு வந்தது.
இதனைக் கவனித்த இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத் துறை யூனிடெக்கின் மொபைல் சர்வீசுக்கு அனுமதி தருவதை நிறுத்தி வைத்தன.
அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இது மிகமிக முக்கியாமானது. இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது இந்த டெலினார் நிறுவனம். இவர்களிடம் 2 ஜி அலைவரிசையை ஒப்படைத்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆவது என்று பாதுகாப்புத் துறை எழுப்பிய கேள்விக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்.
மாறாக உயர்மட்ட அளவில் நடந்த பேரங்களுக்குப் பின் யூனினார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் தான் அமைச்சர் ராஜாவின் அலுவலகம் சிபிஐ சோதனைக்கு உள்ளானதும், ராஜா விசாரிக்கப்பட்டதும் நினைவிருக்கும்.
இப்போது அதே யூனினார் நிறுவனம் கோலாகலமாக தனது மொபைல் சர்வீஸைத் துவங்கியுள்ளது.
இந்த புதிய மொபைல் சேவையில் உள்ளூர் கட்டணம் வெறும் 29 பைசாதான். எஸ்டிடி கட்டணம் 49 பைசா.
எடுத்த எடுப்பிலேயே 7 தொலைத் தொடர்பு வட்டங்கள், 1000 டீலர்கள், ரூ 2620 முதலீடு என பிற நிறுவனங்களை ஆட்டம் காண வைக்கும் வேகத்துடன் வருகிறது யூனினார்.
கடந்த சில தினங்களாக 'ஐ.எம்.இ.ஐ. எனப்படும் ரகசிய எண்கள் இல்லாத செல்போனா... இனி செல்லாது செல்லாது' என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
ஆனால், இப்போது அந்தத் தடை செல்லுபடியாகவில்லை. காரணம் அரசு பரிந்துரைத்து, செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்திய செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் முழுமையாக பலனளிக்கவில்லையாம்.
ரகசிய குறியீட்டெண்கள் இல்லாத செல்போன்கள் தேச விரோத சக்திகளின் செயலுக்கு துணைபோகும்... எனவே அவற்றை அடியோடு செயலிழக்க வைக்கப் போகிறோம் என மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி ஐஎம்இஐ எண்கள் இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கும் நிலை தோன்றியது. நவம்பர் 30-ம் தேதிக்குள் எல்லா செல்போன் சேவை நிறுவனங்களும், இந்த செயலிழப்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல வாடிக்கையாளர்களும் நவம்பர் 30க்குள் தங்கள் இணைப்பை ஐ.எம்.இ.ஐ. உள்ள மொபைலுக்கு மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் தங்களிடம் உள்ள போன்கள் ஐ.எம்.இ.ஐ. எண் உள்ளதுதானா என அறிய எஸ்எம்எஸ் ஒன்றையும் அனுப்பச் சொல்லியிருந்தனர்.
இந்த வகையில் அனைத்து செல்போன் நிறுவனங்களுமே கணிசமாக லாபம் பார்த்தனவாம்.
இந் நிலையில், சிலர் ஐ.எம்.இ.ஐ. இல்லாத மொபைலுக்கு, ரகசிய எண் தருவதாக தலா ரூ. 200 வசூலித்த கதையும் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளதாம். இதையெல்லாம் செய்ய முடியாத சிலர், வருவது வரட்டும் என்று அப்படியே விட்டுவிட்டனர்.
ஆனால் நவம்பர் 30க்குப் பிறகு இயங்காது என்று கருதப்பட்ட, ரகசிய எண்கள் இல்லாத செல்போன்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் பழையபடியே இயங்கின. அரசுத் துறை மொபைல் சர்வீஸான செல் ஒன் இணைப்பு பெற்ற போன்களும் கூட இயங்கின என்பது கூடுதல் செய்தி.
இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அரசு எங்களுக்குப் பரிந்துரைத்த தொழில்நுட்பத்தைப் பிரயோகித்துவிட்டோம். ஆனால் அது முழுமையாக வேலை செய்யவில்லை. ஆனால் இதற்காக அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொழில்நுட்ப சிக்கலை சரி செய்து மீண்டும் தடை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இந் நிலையில் ஐஎம்இஐ எண்கள் உள்ள, சீனா மற்றும் கொரிய மொபைல்களை இனி தருவிக்க மொபைல் விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாம்.
இதற்கிடையே, ஐஎம்இஐ எண்கள் இல்லாத போன்களுக்குரியவர்கள் அந்த எண்ணைப் பெற விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு, புதுவைக்கான செல்போன் டீலரான அமீத் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எண்கள் பெற ஒரு வார கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐஎம்இஐ எண் இல்லாததால் துண்டிக்கப்பட்ட போன் வைத்திருப்பவர்கள் இந்த எண்ணைப் பெற விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகப் பெருக அவர்களுக்கு எண்கள் ஒதுக்குவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றன மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்.
இப்பிரச்சனையைச் சமாளிக்க இதுவரை 10 இலக்க எண்களாக இருந்த மொபைல் எண்களை இனி 11 இலக்கத்துக்கு மாற்றப்போகிறார்களாம்.
இதுகுறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
ஆனாலும், இது தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் எவ்விதமான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என்றும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில், கடந்த அக்டோபர் வரை, புதிதாக 1.70 கோடி பேர், மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ளனர். மொத்தம் 48 கோடி பேரிடம் மொபைல் போன் இணைப்புகள் உள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.
சர்வதேச செல்போன் அடையாள (ஐஎம்இஐ) எண் இல்லாத சுமார் 1.7 கோடி செல்போன்களின் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது.
சீனா மற்றும் கொரியாவில் தயாரான செல்போன்கள் மலிவான விலையில் கிடைப்பதால் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் இதில் 15 இலக்கங்களுடன் கூடிய ஐஎம்இஐ எண் இருப்பதில்லை. இதை தீவிரவாதிகள் பயன்படுத்தியதால் அவர்களை கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன்களின் இணைப்பை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. வாடிக்கையாளர் நலன் கருதி நவம்பர் 30ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இறுதி நாளான நேற்று முன்தினம் செல்போன் நிறுவனங்கள் மேலும் அவகாசம் தர வேண்டும் என திடீரென கோரிக்கை வைத்தன. இதை மத்திய அரசு நிராகரித்து விட்டது. திட்டமிட்டபடி, ஐஎம்இஐ எண் இல்லாத செல்போன் இணைப்பை துண்டிக்க தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டது. இதன்படி, சுமார் 1.7 கோடி செல்போன்களின் இணைப்புகள் நேற்று முன்தினம் நள்ளிரவோடு துண்டிக்கப்பட்டன.
ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணை அழைக்கும்போதோ, எஸ்எம்எஸ் அனுப்பும்போதோ அல்லது பெறும்போதோ ஐஎம்இஐ எண்ணை தொலைத் தொடர்புத் துறை கண்காணிக்க முடியும். இதன் அடிப்படையில், இந்த எண் இல்லாத மற்றும் போலி எண்கள் கொண்ட செல்போன்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.சில செல்போன் நிறுவனங்கள், ஐஎம்இஐ எண் இல்லாத வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இதுகுறித்து ஏற்கனவே தகவல் கொடுத்துள்ளன.இந்த எண் இல்லாதவர்கள், இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் ரூ.199 செலுத்தி, ஐஎம்இஐ எண்ணைப் பெற்றுக் கொண்டு அதே செல்போனை பயன்படுத்தலாம்.
எஸ்எம்எஸ் கட்டணங்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 1 பைசா மட்டுமே என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
மொபைல் சர்வீஸ் நிறுவனங்களில் அழைப்புக் கட்டணத்தை விட அதிக காஸ்ட்லியானதாக இருந்தது எஸ்எம்எஸ்தான். ஆனால் இந்த எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைந்த அலைவரிசை இருந்தாலே போதுமாம். இதற்கான கட்டணம் ஒரு பைசாவுக்கும் குறைவுதான். ஆனால் பல நிறுவனங்கள் இன்றைக்கும் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை எஸ்எம்எஸ் கட்டணமாக வசூலித்துக் கொண்டு வருகின்றன.
இந்த உண்மையை பத்திரிகைகள் சமீபத்தில் வெளிக் கொணர்ந்தன. இதனால் தொலைத் தொடர்பு ஆணையம் ட்ராய், 'பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எம்எஸ் கட்டணத்தை அதிகளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது உண்மைதான். விரைவில் குறைத்துவிடுவோம்' என்று சமாளித்திருந்தது.
ஆனால் மக்களுக்கு உண்மை தெரிந்து கடும் கோபத்திலிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட ரிலையன்ஸ், நேற்று (29-11-2009) எஸ்எம்எஸ் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.
இந்த அறிவிப்பின்படி இனி 1 எஸ்எம்எஸ் 1 பைசா மட்டுமே. ஒரு நாள் முழுக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 1 செலுத்தினால் போதும். எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பித் தள்ளலாம். ஒரு மாதம் முழுக்க எல்லையில்லை எஸ்எம்எஸ் அனுப்ப ரூ 11 செலுத்தினால் போதுமாம்.
பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோனும் இப்போது எஸ்எம்எஸ் கட்டண யுத்தத்தில் களமிறங்குகின்றன.
சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி செல்போன் சேவை விரிவாக்கப்பட்டு வருவதையடுத்து, முன்னணி மொபைல் கருவி தயாரிப்பு நிறுவனங்கள் 3 ஜி வசதி கொண்ட மொபைல் தயாரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.
சென்னை அருகே பெரும் தொழிற்சாலைகளை அமைத்துள்ள நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் மற்றும் மோட்டாரோலா நிறுவனங்கள் இனி 3 ஜி மொபைலை அதிகம் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
நோக்கியாவின் புதிய ஆலை படப்பை அடுத்துள்ள ஒரகடத்தில் அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 3 ஜி மொபைல் உற்பத்தி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த நிறுவனத்தின் இன்னொரு ஆலையில் இப்போது 2 ஜி மொபைல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த, ஆண்டு 3 ஜி ஏலத்தை மத்திய அரசு முடிக்கும் தறுவாயில் மேலும் அதிக மொபைல்கள் தேவைப்படும். எனவே இந்த தேவையைச் சமாளிக்க ரூ 300 கோடியை கூடுதலாக முதலீடு செய்கிறது நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்.
மோட்டாரோலா நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.
இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.
முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.
கமப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை உள்பட பல்வேறு தேர்வு மையங்களில் நடந்த கேட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக கேட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் முதன் முறையாக நவம்பர் 28ம் தேதி ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆனால் கம்ப்யூட்டர் சர்வர்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சென்னை, பெங்களூரு, லக்னோ, சண்டிகார் ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு ரத்தானது.
கேட் தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் , தேர்வு எழுத முடியாதவர்களுக்கு புதிதாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான புதிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும். இதுபோன்ற பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்படாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், கேட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வர் கோளாறால் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அடுத்த ஒன்பது நாட்களுக்கான தேர்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்ளலாம் என்றார்.
முன்னர், கேட் தேர்வு பேப்பர் - பென்சில் தேர்வாக நடந்து வந்தது. தற்போது அதை ஆன்லைன் தேர்வாக மாற்றி அமைத்ததால், அத்தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு முறையை மாற்றியமைத்ததால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கேட் தேரவு எழுதுபவர்கள் சதவீதமும் குறைந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவின் 692 இணையதளங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 511 இணைய தளங்கள் அரசு இணைய தளங்களாகும். தகவல் தொழில் நுட்ப இலாகாவின் இணைய தளத்தின் மீது மட்டும் 63 தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றில் 21 சீனாவின் கைவரிசையாகும். மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கணினி நெருக்கடிகள் ஆய்வுக்குழு, இத்தகவலை தெரிவித் துள்ளது.
இணைய தளங்களை தாக்கி அழிக்க பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் முக்கியமானது இணைய தள நிர்வாகியின் பாஸ்வேர்டை திருடுதல் அல்லது அந்த இணைய தளத்தின் யூசர் பாஸ்வேர்டை திருடுதலாகும். இப்பாஸ் வேர்டுகள் கிடைத்துவிட்டால் இணைய தளத்தில் உள்ள தகவல்களை எல்லாம் ஒரு நொடியில் நீக்கிவிட்டு அந்த இடத்தில் குப்பைத் தகவல்களை நிரப்ப¤ விடலாம்.
மற்றொரு முறை, இணைய தளத்தை வழங்கும் சர்வரில் நுழைந்து குறிப்பிட்ட இணைய தளத்தை மட்டும் சீரழித்து விடுவதாகும். இணைய தளங்களை அழிப்பவர்கள் ராணுவம், துணை நிலை ராணுவம், பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளங்களின் மீது கூட தாக்குதல் நடத்தி உள்ளனர். கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களை கூட விட்டுவைக்கவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டார்
தொழில் நுட்பங்கள் மற்றும் அவை தரும் சாதனங்கள் சிலவற்றிற்குப் பெயர் வந்த நிகழ்வுகளைக் காணலாம்.
1. பென்டியம் (Pentium): ஐ 286, 386 மற்றும் 486 என்று இன்டெல் நிறுவனம் தான் வடிவமைத்த சிப்களுக்கு வரிசையாகப் பெயர் சூட்டி வந்தது. 486 ஐ அடுத்து வர இருந்த சிப்பிற்கு ஐ 586 என்று தான் பெயர் வைக்க இன்டெல் எண்ணியிருந்தது. இதனைத் தனக்கு மட்டும் சொந்தமான ஒரு ட்ரேட் மார்க்காக வைக்கத் திட்டமிட்டிருந்தது.
ஏனென்றால் பிற நிறுவனங்கள் (ஏ.எம்.டி. ஏ.எம்486 என) இதே போல பெயரினைத் தங்கள் சிப்களுக்கு வைக்கத் தொடங்கி இருந்தன. ஆனால் அமெரிக்காவின் நீதி மன்றங்கள் எண்களை தனிப்பட்ட நிறுவனம் ஒன்றின் ட்ரேட் மார்க்காக வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை. எனவே இன்டெல் நிறுவனம் லெக்ஸிகன் பிராண்டிங் என்னும் அமைப்பினைத் தனக்கு ஒரு பெயர் தருமாறு கேட்டுக்கொண்டது. அப்போதுதான் பென்டியம் (Pentium) என்ற பெயர் சொல்லப்பட்டது. இதில் "Pente" என்ற சொல் கிரேக்க மொழியில் ஐந்து என்ற பொருளைத் தரும். “ium” என்ற சொல் பின் ஒட்டு; ஆண், பெண் பெயர்ச்சொல் என்ற பேதமின்றி பொதுவான ஒரு ஒட்டாகும். இந்த இரண்டு சொற்களும் சேர்க்கப்பட்டு பென்டியம் (Pentium) உருவானது.
2. வாக்மேன் (Walkman): இப்போது வாக் மேன் என்றால் யாரும் நடக்கும் மனிதனை நினைக்க மாட்டார்கள். சட்டைப் பை அல்லது இடுப்பு பெல்ட்டில் மாட்டிக் கொண்டு இயர் போனைக் காதில் வைத்துப் பாட்டுக் கேட்கும் சாதனத்தைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவிற்கு அச்சாதனத்தினை மட்டுமே குறிக்கும் சொல்லாக வாக்மேன் உருவாகிவிட்டது. வாக்மேன் 1979ல் அறிமுகப்படுத்தப் பட்டது. இதனை சோனி நிறுவனம் அதிக நேரம் தன் நிறுவனத் துணைத் தலைவர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது கேட்பதற்காக வடிவமைத்தது. நடக்கும்போது சுதந்திரமாக இசையைக் கேட்பதற்காக இது பின்னர் உருவானது. அதனால் தான் வாக்மேன் என்ற பெயரை இதற்குத் தந்தனர். ஆனால் ஜப்பானில் தான் இது வாக்மேன். அமெரிக்காவில் சவுண்ட் அபவுட் (Soundabout) என்று அழைக்கப்பட்டது. ஸ்வீடனில் ப்ரீஸ்டைல் (Freestyle) எனவும், பிரிட்டனில் ஸ்டவ் அவே (Stowaway) என்றும் பெயரிடப்பட்டன. ஆனால் காலப் போக்கில் வாக்மேன் என்ற பெயரே நிலைத்தது.
3. ஐபாட் (iPod) : ஆப்பிள் நிறுவனம் தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் (Hub) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர். இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு Pod மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ (டி) சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள்.
4. பிளாக்பெரி (BlackBerry) : 2001 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile) நிறுவனம்,தன் புதிய இமெயில் சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு லெக்ஸிகன் பிராண்டிங் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. பெயரில் இமெயில் என்பது இருக்கக் கூடாது என்றும் திட்டமிட்டது. இமெயில் என்பது எதிர்பார்ப்பில் ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல் என்று கருதியது. சந்தோஷத்தையும் அமைதியையும் தரும் சொல்லாக இருக்க வேண்டும் என விரும்பியது. அப்போது ஒருவர் அந்த இமெயில் சாதனத்தின் கீகள் ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். உடனே லெக்ஸிகன் பிராண்டிங் பழங்களின் பெயர்களை ஆய்வு செய்தது. மெலன், ஸ்ட்ரா பெரி போன்ற அனைத்து பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியில் பிளாக்பெரி ((BlackBerry) என்ற பெயர் சாதனத்தின் நிறத்தை ஒத்து வருவதாக முடிவு செய்து அந்த பெயர் தரப்பட்டது.
5. ஆண்ட்ராய்ட் (Android) : கூகுள் நிறுவனத்தின் மொபைலுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை 2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாகவில்லை. ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே மர்மமான முறையில் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியம் வெளியான நிகழ்வு, இன்டர்நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.
6. பயர்பாக்ஸ் (Firefox) : எல்லா நிறுவனங்களைப் போல மொஸில்லாவும் தன் பிரவுசர் தொகுப்பிற்கு என்ன பெயர் வைப்பது என்று சிறிது காலம் திண்டாடியது. முதலில் பயர்பேர்ட் (Fire Bird) என்றுதான் இதற்குப் பெயர் சூட்டியது. ஆனால் இந்த பெயர் இன்னொரு ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு வைக்கப் பட்டிருந்ததால் பயர்பாக்ஸ் எனப் பெயர் சூட்டப் பட்டது. பயர்பாக்ஸ் என்பது செங்கரடிப் பூனையின் பெயர். ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என மொஸில்லாவின் மூத்த அறிஞர்களைக் கேட்டபோது, இந்தப் பெயர் நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகவும் அதே போல நல்லதாகவும் உள்ளது என்று கூறினார்கள்.
7. ட்விட்டர் (Twitter) : சிறிய பறவைகள் SUT எனத் தங்களுக்குள் கூவி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். ஜாக் டோர்சி (Jack Dorsey) இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை உருவாக்கிய போது மக்கள் சிறிய அளவில் தகவல்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள இதனை வடிவமைத் ததாகக் குறிப்பிட்டார். உடன் பணியாற்றிய பிஸ் ஸ்டோன் (Biz Stone) பறவைகள் பரிமாறிக் கொள்ளும் ஒலிக்கான சொல்லை இந்த அப்ளிகேஷனுக்கு வைத்தார். நாடு, கண்டம் சாராத அனைத்து பறவைகளும் பேசிக் கொள்ளும் மொழியின் ஒலி இன்று அனைத்து நாட்டு மக்களும் பேசிப் பகிர்ந்து கொள்ளும் தளத்தின் பெயராக அமைந்தது பொருத்தமே.
8.திங்க்பேட் (Thinkpad): 1992 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் மக்களின் நம்பிக்கைக்குரிய லேப் டாப் கம்ப்யூட்டராக இதனை வடிவமைத்தது. இதற்குப் பெயர் தர முனைந்த போது, ஐபிஎம் நிறுவனத்தின் ஒரு பிரிவினர் திங்க்பேட் என்ற எளிய சொல்லால் இதனைக் குறிப்பிடலாம் என்று கருத்து தெரிவித்தது. ஆனால் ஐபிஎம் தன் உற்பத்திப் பொருட்களுக்கு எப்போதும் எண்களைக் கொண்டே பெயர்களை அமைத்ததனால் அப்படியே இதற்கும் வைத்திட வேண்டும் என எண்ணியது. மேலும் திங்க்பேட் மற்ற மொழிகளில் எப்படி மொழி பெயர்க்கப்படுமோ என்று கவலையும் கொண்டது. ஆனால் எந்தக் குழப்பமும் இன்றி மிக அழகான பெயராக மக்கள் மனதில் திங்க் பேட் என்ற பெயர் ஊன்றியது.
9. விண்டோஸ் 7 (Windows7): விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் பெயரினையே விட்டுவிடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருட்களின் பெயரின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித் தன்மையைக் காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது. ஆனால் இந்த பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; எனவே இந்த பெயர் இப்படித்தான் இருக்கும்; இந்த பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.
10. அமேஸான் கிண்டில் (Amazon Kindle): இ–புக் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக் நூல்கள் படிக்கும் வழக்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டுவந்த சாதனம் இது. இதனை வடிவமைத்த குழுவைச் சேர்ந்த ஒரு தம்பதியரை, மைக்கேல் க்ரோனன் மற்றும் கரேன் ஹிப்மா, அமேஸான் நிறுவனம் இந்த சாதனத்திற்குப் பெயர் ஒன்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சாதனம் எதற்கெல்லாம், எந்த வழிகளில் எல்லாம் பயன்படும் என்று இவர்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். எந்த தொழில் நுட்பத்தையும் நினைவு படுத்தும் வகையில் பெயர் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் வகையிலும், பல நல்ல பொருளைத் தருவதாகவும் இருக்க வேண்டும் என எண்ணினார்கள். எனவே Kindle என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு எரிவதைத் தூண்டுவது, ஒளிறச் செய்வது, நல்லவற்றிற்குத் தூண்டுவது, கொழுந்துவிட்டு எரியச் செய்வது என்று பல பொருள் உண்டு. பழைய நார்ஸ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு இந்த சொல் வந்தது. இந்த சொல்லின் மூலப் பொருள் மெழுகுவத்தி என்பதாகும். இந்த சொல்லைத் தந்து ஹிப்மா கூறுகையில், “நூல்களில் நாம் பெறும் தகவல்களும் செய்திகளும் தீயைப் போன்றவை; பக்கத்திலிருப் பவர்களிடமிருந்து இதனைப் பெறுகிறோம். மேலும் அதனைத் தூண்டுகிறோம். பின் அவற்றை மற்றவர்களுக்குத் தருகிறோம். இப்படியே அது அனைவரின் சொத்தாக மாறுகிறது” என்றார். உண்மைதான், பொருத்தமான பெயர்தான்.
நாம் கூகுள் தரும் எந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் வைத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று நாம் அறிவோம். ஜிமெயில், யு–ட்யூப், கூகுள் செக் அவுட், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர், ஐகூகுள், பிகாசா வெப் ஆல்பம்ஸ், கூகுள் டாக் என எத்தனையோ இணைய வசதிகளைக் கூகுள் நமக்குத் தருகிறது. அப்போது நம்மைப் பற்றிய தகவல்களையும் பெறுகிறது. அது மட்டுமின்றி நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது, அது பற்றிய புள்ளி விபரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்கிறது.
ஒரு சிலர் கூகுள் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான தகவல்களைப் பெற்று வைத்துக் கொள்கிறது என்று கருதுகின்றனர். ஒரு சிலர் இது நம் தனி உரிமையைக்குள் தலையை விடும் செயல் என்றும் எண்ணுகின்றனர்.
இதனை எண்ணிப் பார்த்தோ என்னவோ, கூகுள் சென்ற மாதம் தன்னிடத்தில் தன் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஓர் ஏற்பாட்டினைச் செய்து தந்துள்ளது. தான் வைத்துள்ள தகவல்களை பயனாளர்கள் எடிட் செய்திடவும் வழி தருகிறது. இத்தகைய தகவல்கள் தங்கவைத்திடும் இடத்திற்கு கூகுள் பிரைவசி டேஷ்போர்டு எனப் பெயர் கொடுத்துள்ளது. இதில் நுழைந்து நாம் கூகுள் வைத்துக் கொள்ளக்கூடாத தகவல்களை எடிட் செய்திடலாம்.
http://www.google.com/dashboard என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் நம்முடைய கூகுள் இமெயில் முகவரி கொடுக்கப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கப்படுகிறது. பின் நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுளின் பல்வேறு சாதனங்கள் வாரியாகத் தரப்படுகின்றன. நம் மின்னஞ்சல் கடிதங்கள் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளும் முகவரிகள் எண்ணிக்கை, படங்கள், காலண்டர், வெப் ஹிஸ்டரி என அனைத்தும் பகுதி பகுதியாகத் தரப்படுகின்றன. ஆனால் அனைத்துமே ஒருவர் ஏற்கனவே தான் அறிந்து தந்த தகவல்களாகத்தான் இருக்கின்றன. இதில் என்ன நல்ல செய்தி என்றால், மற்ற இணைய சேவைத் தளங்கள் போல் அல்லாமல், கூகுள் இவற்றையும் எடிட் செய்திட நமக்கு உரிமை தருகிறது. எந்த தகவலையாவது கூகுள் கொண்டிருக்கக்கூடாது என நாம் எண்ணினால், அதனை நீக்கவும் இடம் உள்ளது.
பி.எஸ்.என்.எல்., சென்னை தெலைபேசி சமீபத்தில் வெளியிட்ட, "3 ஜி' மொபைல் இணைப்பின், "பேன்சி எண்' பெறுவதற்கான ஏலத்தில் பலத்த போட்டி நிலவுகிறது. பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி, "3 ஜி' மொபைல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, "சிம்கார்டு' வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர," 2 ஜி' சேவையில் இருப்போரும் மொபைல் எண்ணை மாற்றாமல், கட்டணம் ஏதுமின்றி, "3 ஜி' சேவைக்கு மாறுவதற்கான வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதே எண்ணுடன் கூடிய, கூடுதல் திறனுடைய புதிய சிம்கார்டு வழங்கப்படுகிறது.
சமீபத்தில், "2 ஜி' சேவையில், 250 "பேன்சி' எண்கள் ஏலம் விடப்பட்டன. தான் விரும்பிய மொபைல் போன் எண் ணிற்காக, ஒருவர் அதிகபட்சமாக 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏலம் எடுத்துள்ளார். "2 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில், சென்னை தொலைபேசிக்கு, நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது, "3 ஜி' மொபைல் இணைப்பு எண்களில், "பேன்சி' எண்களை பெறுவதற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய, "3 ஜி' இணைப்புகள் அனைத்தும், "94455' என துவங்குமாறு அமைந்துள்ளது. இந்த எண்களை தொடர்ந்து வரும் அடுத்த 5 எண்கள் தொடர் எண்களாகவோ, ஒரே எண்களாகவோ அமையும் பட்சத்தில் அவை "பேன்சி' எண்களாக குறிக்கப்படுகின்றன. சாதாரணமாக இந்த எண்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவற்றிற் கென குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடைசி மூன்று எண்கள் ஒன்றாக இருப்பின் 1,000 ரூபாயும், கடைசி நான்கு எண்களுக்கு 2,000 ரூபாயும், கடைசி ஐந்து எண்களுக்கு 3,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.
தற்போது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகை குறைந்தபட்ச இருப்புத் தொகையாகவும், ஏலம் கேட்க விரும்புபவர்கள், இந்த தொகையில் இருந்து 100ன் மடங்கில் ஏலத்தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், சென்னையில், "3 ஜி' மொபைல் எண்களில் 293 எண்கள், "பேன்சி' எண்களாக பிரிக்கப்பட்டு, அவற் றிற்கான ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்க பதிவுக்கட்டணம் 50 ரூபாயாகவும், பிரிபெய்டு போனில் இருந்து விண்ணப்பிப்பவர்கள், குறைந்த பட்ச இருப்புத் தொகை ரூ.300 வைத் திருக்க வேண்டும். ஏலத்தில் இருந்து விலக நினைப்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரும் 1ம் தேதி வரை, ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம். பதிவிற்குப் பின், ஏலத்திற்கான எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்காக ஒரு ரூபாய் 50 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை தொலைபேசி தவிர, தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் தொலை பேசி எண்கள் ஏலம் நடந்து வருகிறது. தற்போது நடந்துவரும், "3 ஜி' மொபைல் எண்கள் ஏலத்தில் ஒரு எண் குறைந்த பட்சமாக 25 ஆயிரம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டால் கூட, சென்னை தொலைபேசிக்கு 73 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி அதிகாரி ஒருவர் கூறுகையில், "" 3 ஜி' ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் திடீரென விலகிக் கொண்டால், அவரிடம் இருந்து எந்த தொகையும் பிடிக்கப்படமாட்டாது. அவர் குறிப்பிட்ட தொகை அதிகபட்சமாக இருந்தால், 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஏலத்தில் அதிக தொகை எடுப்பவர்கள், திடீரென விலகும் நிலையில், அடுத்து இருப்பவர், விலகியவர் குறித்த தொகையை தந்தால், அவர் விரும்பிய எண் கிடைக்கும்,'' என்றார்.
பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் மீண்டும் தள்ளிப் போகிறது.
வருகிற 2010 ஜனவரி 14-ம் தேதி இந்த ஏலம் நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த ஏலம் சில கராரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பாதுகாப்புத் துறையின் அனுமதி காரணமாகவே டிசம்பர் 7-ம் தேதி நடப்பதாக இருந்த இந்த ஏலம் முன்பு தள்ளிப் போடப்பட்டது.
குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த அலைக்கற்றைகளை அனுமதிப்பதால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று பாதுகாப்புத் துறை கருதுவதால், அந்தப் பகுதிகளில் இந்த மின் அலைகள் இல்லாமல் சரி செய்யும் வேலை இன்னும் முடியவில்லையாம். இதனால்தான் இந்தத் தாமதமாம்.
ஆனால் எப்படியும் வருகிற பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த ஏலம் நடக்கும் என தொலைத் தொடர்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிதியாண்டுக்குள் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்காவிட்டால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல்லின் சென்னை தொலைபேசி சமீபத்தில் அறிமுகப்படுத்திய 3 ஜி போனுக்கு சென்னைவாசிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல்லின் வாடிக்கையாளர் சேவை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், இந்த புதிய தலைமுறை தொழில்நுட்பத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி பேசும் வசதியை விரும்பு அந்த இணைப்பைப் பெறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.
இன்டர்நெட், சினிமா பார்த்தல், டி.வி. சேனல்கள் பார்த்தல் என சகல வசதிகளும் நிறைந்த சேவை இது. குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் காதலர்களிடையே இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருக்கிற மொபைலை தலைமுழுகிவிட்டு, எப்படியாவது புதிய 3 ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்கள் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் இவர்கள்.
இந்த கருவிகளை வைத்திருப்போர் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று 3 ஜி சிம் கார்டுகள் பெறலாம். விலை ரூ.59 மட்டுமே.
ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
திட்டம் அறிமுகப்படுத்திய 2 நாட்களில் 700 பேர் 3ஜி இணைப்பை பெற்றுள்ளனர் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
திட்ட அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்புக்கு 50 பைசாவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்குள் 1 லட்சம் வாடிக்கையாளர்களை இத்திட்டத்தில் சேர்க்க பி.எஸ்.என்.எல். இலக்காக கொண்டு செயல்படுகிறது. இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப் போகிறார்களாம்.
இந்தியாவில் 2.5 லட்சம் பேருக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக இன்போசிஸ் நிறுவன இயக்குனர் மோகன்தாஸ் பை கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:வேலைவாய்ப்பு நிலைமையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு போல மோசமான நிலைமை இந்த ஆண்டு தொடராது. 2 முதல் 2.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 100 புதிய வேலை வாய்ப்புகள் ஒரு ஐடி கம்பெனியில் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
அதில் 65 இடங்கள் புதிதாக கல்வி முடித்தவர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 35 இடங்கள் அனுபவம் உள்ளவர்களுக்கு கிடைக்கும்.சென்ற ஆண்டு மொத்தம் 16,000 பேரை வேலைக்கு எடுத்தோம். இந்த ஆண்டு 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுப்போம். வேலையிலிருந்து இடையில் நிற்போர் இன்போசிஸைப் பொருத்தமட்டில் 10 சதவீதம். ஊழியர்களுக்கு 7 முதல் 8 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது என மோகன்தாஸ் தெரிவித்தார்.
எஸ்எம்எஸ் ரேட்டா அடியோடு குறைக்க தொலைத்தொடர்பு ஆணையம் ட்ராய் முடிவு செய்துள்ளது.
எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல் சேவைக்கு பல்வேறு மொபைல் சர்வீஸ் நிறுவனங்களும் கணிசமான கட்டணம் வசூலித்து வருகின்றன.
பல மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள், கால் சார்ஜைவிட அதிகமாக எஸ்எம்எஸ் கட்டணம் வசூலித்து வருகின்றன.
ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 50 காசு முதல் 1 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கும் ரேட் கட்டர் எனும் பெயரில் ஒரு தொகையை வசூலிக்கிறார்கள் (கட்டண குறைப்புக்காக). ஆனால் இதன்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று சோதித்துப் பார்க்கும் பொறுமையோ, நேரமோ யாருக்கும் இல்லை என்பதால் மொபைல் நிறுவனங்கள் காட்டில் வசூல் மழை.
உண்மையில் ஒரு எஸ்எம்எஸ்ஸின் விலை ஒரு பைசா அல்லது அதில் 10-ல் ஒரு பகுதிதானாம். காரணம் ஒரு குறுந்தகவலுக்கு அதிகபட்சம் 1 KB க்கும் குறைவான இடத்தையே எடுத்துக் கொள்கிறது. ஒரு KB-க்கு ஒரு பைசாதான் கட்டணம் எனும்போது, அதைவிட குறைவான இடமே தேவைப்படும் எஸ்எம்எஸ்ஸுக்கு ஒரு பைசாவுக்கும் குறைவாகத்தானே கட்டணம் வசூலிக்க வேண்டும்?
இதை வைத்துப் பார்க்கையில் குறைந்தது 40 முதல் 100 மடங்கு வரை ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பத்திரிகைகள் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இதனால் எஸ்எம்எஸ் கட்டணங்களை குறைத்தே தீர வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது ட்ராய். விரைவி்ல் ஒரு எஸ்எம்எஸ் 1 பைசா அல்லது, குறிப்பிட்ட கட்டணத்துக்கு வாழ்நாள் முழுவதும் எஸ்எம்எஸ் வசதி என்ற அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.
இன்னும் ஓரிரு தினங்களில் இந்த அறிவிப்பு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது .
இன்போஸிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அவுட்சோர்ஸிங் பிரிவு தலைமை நிர்வாகி அமிதாப் சௌத்ரி அந்நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 2006-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார் அமிதாப் சௌத்ரி. இன்போஸிஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவுக்கு தலைமை செயல் அலுவலராக அவர் பொறுப்பேற்றார்.
திடீரென்று இப்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு காரணம் என்னவென்று அவர் தெரிவிக்கவில்லை.
இன்போஸிஸ் பிபிஓ முழுக்க முழுக்க இன்போஸிஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். நாட்டிலேயே இரண்டாவது பெரிய பிபிஓ யூனிட் இதுதான்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 26 சதவிகிதம் இதன் வருவாய் உயர்ந்திருந்தது. அமெரிக்காவின் மெக்காமிஷ் சிஸ்டம் நிறுவனத்தை சமீபத்தில்தான் இன்போஸிஸ் பிபிஓ வாங்கியது.
சைபர் கிரைம் எனப்படும் இணையதளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், பல வழக்குகளில் புலன் விசாரணைக்கு இணைய தள பயன்பாடு, இமெயில் கடிதங்கள் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. இந்நிலையில், விசாரணையின்போது ஒருவரது இமெயிலை பின்தொடரவும், திறந்து படிக்கவும் மத்திய உள்துறையிடம் போலீசார் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதனால், விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதற்காக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான அனுமதியை நாடாளுமன்றம் சமீபத்தில் அளித்தது. சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததும், வழக்குக்குத் தொடர்புடைய யாருடைய இமெயிலையும் மாநில உள்துறை அனுமதி பெற்று படிக்கும் அதிகாரம் போலீஸ் ஐஜிக்கு கிடைத்து விடும்.
எனினும், யாருடைய இமெயில் கண்காணிக்க வேண்டியுள்ளது என்பதை பணி தொடங்கிய 3 நாட்களுக்குள் மாநில உள்துறையின் செயலருக்கு போலீஸ் ஐஜி தெரிவிக்க வேண்டும். மாநில உள்துறை செயலரே அதற்கான அனுமதியை அளிக்க முடியும். அனுமதியை போலீசார் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (ட்ராய் ) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரூ19/- செலுத்தி நமது எண்ணுடன் நம் அலைபேசி சேவை நிறுவனத்தை மாற்றலாம் என்று அறிவித்துள்ளது.
இதன்படி ஒருவரது அலைபேசி எண் மற்றும் அவரது தொடர்புகள் மாறாமல் தங்கள் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ள முடியும்.
அதற்காக தொடர்பு பரிவர்த்தனை கட்டணமாக ரூ. 19/- மட்டும் அல்லது அதற்கு குறைவான கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவர் தமது சேவை நிறுவனத்தை மற்ற குறைந்த பட்சம 90 நாட்கள் அச்சேவையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ட்ராய் அறிவுறிதியுள்ளது.
சேவை மாற்றுதல், பயனாளர் விண்ணப்பம் கொடுத்த நான்கு நாட்களுக்குள் மாற்றி முடிக்க வேண்டும்.
டிசம்பர் 2009 இறுதிக்குள் இச்சேவையை வழங்குமாறு ட்ராய் அலைபேசி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
தங்களது நிறுவன சாப்ட்வேர்களை திருட்டுத்தனமாக காப்பி செய்து விற்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருட்டு சாப்ட்வேர் ஒழிப்புப் பிரிவினர் பெரும் ரெய்டில் ஈடுபட்டு ஏராளமான திருட்டு சாப்ட்வேர்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.
எமிரேட்ஸில் உள்ள கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திருட்டு சாப்ட்வேர் லோட் செய்யப்பட்டிருந்த கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் திருட்டு சாப்ட்வேர் சிடிக்கள் சிக்கின.
துபாய் மற்றும் ஷார்ஜாவில் இந்த ரெய்டுகள் நடந்தன என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
உலகெங்கும் உலவி வரும் தங்களது நிறுவன திருட்டு சாப்ட்வேர்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே எமிரேடிஸ் நடந்த ரெய்டு என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இந்த ரெய்டு குறித்து எமிரேட்ஸ் அரசின் பொருளாதாரத் துறை இயக்குநர் முகம்மது அகமது பின் அப்துல் அஜீஸ் அல் ஷிஹி கூறுகையில், வர்த்தகத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் இந்த திருட்டு சாப்ட்வேர் பெரும் தொல்லையாகும். இதன் விளைவு பொருளாதாரத்தில் எதிரொலிக்கும். எனவே இதை வேட்டையாட வேண்டியது அவசியமாகும் என்றார்.
தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் தலைமைப் பண்புகளை வளர்ப்பதில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல் 12 இடத்தில் உள்ள கம்பெனி களில் இந்தியாவை சேர்ந்த கம்பெனிகள் 5 உள்ளன.
ஹெவிட் நிறுவனம், ஆர்பிஎல் குரூப், அமெரிக்க பத்திரிகையான பார்ச்சூன் ஆகியவை இணைந்து ஆசிய பசிபிக் நாடுகளின் கம்பெனிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளன. அந்த அறிக்கையில் முதல் 12 இடங்களைப் பிடித்துள்ள கம்பெனிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.
பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ. அடுத்த இரண்டு கம்பெனிகளும் சீனாவினுடையது. இப்பட்டியலில் உள்ள மற்ற இந்திய கம்பெனிகள் ஹிந்துஸ்தான் யூனி லீவர், ஆதித்யா பிர்லா குரூப், இன்போசிஸ் மற்றும் விப்ரோ.
உலக அளவில் முதல் 25 கம்பெனி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் 3 இந்த¤ய கம்பெனிகள் உள்ளன. இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதிலும் இந்நிறுவனங்கள் தங்களுடைய வளர்ச்சியை உறுதி செய்து கொண்டுள்ளன.
ஏர்டெல் நிறுவனம் புதிதாக தற்பொழுது இணையதள வடிவமைப்பு சேவையை துவங்கியுள்ளது. இதன்மூலம் தனது அகண்ட அலைவரிசை பயன்பாட்டாளர்களுக்கு சிறிய வணிகரீதியான இணையதள சேவையை எளிமையான WYSIWG தொகுப்பி (Editor) மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. இச்சேவை தற்பொழுது தனது அகண்ட அலைவரிசை சேவைக்காக பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்க முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது டி.எஸ்.எல். பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி இச்சேவையை பெறமுடியும்.
இச்சேவையில் ஐந்து பக்கங்கள் கொண்ட இணையதளம் முதற்கொண்டு அளவில்லா பக்கங்கள் கொண்ட இணையதளம் வரை மூன்று வகையான திட்டங்கள் உள்ளது. இது நிரந்தர தொகை மற்றும் மாத சந்தாவாகவும் வழங்கப்படுகிறது.
பயன்கள்:
உபயோகிக்க எளிது. இணையதளத்தை எளிமையான மூன்று வழிகளில் முன்வடிவு (Template) மூலம் எளிதாக உருவக்க முடியும்.
இணையதள வர்த்தகம் செய்வது, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலமாக செய்வதற்கு எளைமையன வழிமுறைகளை கொண்டுள்ளது.
இணையதள போக்குவரத்தை கண்கானிக்க எளிதானது
இணையதள வடிவமைப்பு, களப்பெயர் பதிவு, போன்றவை அனைத்தும் ஒரே சேவையில் கிடைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு http://www.amitbhawani.com/blog/develop-new-site-airtel-website-builder/
ரூபாய் தாள்கள் சீக்கிரம் சேதமாகி விடுவதால், அத்தனை சீக்கிரம் அழியாத பாலிமர் ரூபாய் நோட்டுக்களை புழகத்தில் விட மத்திய அரசு தயாராகி வருகிறது.
முதல்கட்டமாக 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா எழுத்து மூலம் அளித்த பதிலில், "ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காக சோதனை அடிப்படை யில் ஒரு பில்லியன் பாலிமர், பத்து ரூபாய் நோட்டுத் தாள்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சோதனை அடிப்படையில் பாலிமர் நோட்டுகளை வாங்கும் பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
பத்து ரூபாய் நோட்டுகளில் பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கள்ள நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறையும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாதான் முதன் முதலில் பாலிமர் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது.
அந்த வெற்றியைப் பார்த்து இன்று பல ஐரோப்பிய நாடுகளும் பாலிமரை நோட்டுக்களை அறிமுகப்படுத்தி, நோட்டடிக்கும் செலவைக் குறைத்தன.
அட பக்கத்து நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் கூட இந்த பாலிமர் நோட்டுதான் புழக்கத்தில் உள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரோமிங் கட்டணம் 60 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், இந்திய செல்போன் வாடிக்கையாளர்களில் 23 சதவீதத்திற்கும் மேற்பட்டோரைக் கொண்டுள்ளது.
தற்போது செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும் ஏர் டெல் தரப்பிலிருந்து பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரோமிங் கட்டணத்தில் 60 சதவீதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது ஏர்டெல்
இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள மெகா கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 2 மடங்காக உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் தெரிவிக்கிறது.
இந்தியாவின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் ஆசியா பொருளாதார இதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி. இது இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்காகும். அதாவது, 25 சதவீதம்.
கடந்த ஆண்டின் போர்ப்ஸ் பட்டியலின்படி, ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. இப்போது அது 54 ஆக உயர்ந்துள்ளது. இது 100 சதவீதம் அதிகம். கடந்த சில மாதங்களில் பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதும், பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக நீடிப்பதும் புதிய பணக்காரர்கள் உருவாக காரணமாக அமைந்தது.
இதுபற்றி போர்ப்ஸ் ஏசியா ஆசிரியர் நஸ்ரீன் கர்மாலி கூறுகையில், "இந்திய கோடீஸ்வரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான நாட்கள் திரும்பியுள்ளன. இந்த ஆண்டு பட்டியலில் புதுமுகங்கள் சேர்ந்திருப்பது, இந்திய பங்குச் சந்தையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கிறது" என்றார்.
உலகின் வேறெந்த நாடுகளையும் விட அதிக கோடீஸ்வரர்களை குறுகிய காலத்தில் உருவாக்கும் வளமும், வாய்ப்புகளும் இந்தியாவில் மட்டுமே உள்ளன. புதிய கோடீஸ்வரர்கள் எல்லா துறைகளில் இருந்தும் உருவாகி இருப்பதே இதற்கு சாட்சி என்றும் நஸ்ரீன் கூறினார்.
போர்ப்ஸ் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து இந்த ஆண்டும் நாட்டின் முதல் பணக்காரராக நீடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி. இங்கிலாந்து வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல், ரூ.1.41 லட்சம் கோடியுடன் 2வது இடத்தில் உள்ளார். முகேஷின் தம்பி அனில் அம்பானி ரூ.82,500 கோடி சொத்துடன் 3வது இடத்தில் இருக்கிறார்.
உலகில் உள்ள தனது சில முக்கிய கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது சோனி எரிக்ஸன் நிறுவனம். இதன் மூலம் 2000 பணியாளர்களைக் குறைக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கிளையும் அடங்கும். இதன் மூலம் சென்னையில் மட்டும் 420 பேர் பணியிழப்புக்கு உள்ளாகின்றனர்.
முக்கோண ஆராய்ச்சிப் பூங்கா - Research Triangle Park - எனும் பெயரில் உலகில் சில முக்கிய இடங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தியிருந்தது சோனி எரிக்ஸன்.
இப்போதைய நிதி நெருக்கடியான சூழலில் செலவுக் குறைப்பே பிரதானம் என்பதால், தனது முக்கிய கிளைகள் சிலவற்றை பிற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கிறது சோனி.
அதன்படி வட அமெரிக்காவிலிருந்த சில அலுவலகங்களை மொத்தமாக அட்லாண்டா நகருக்கு மாற்றியுள்ளது. இன்னும் சிலவற்றை கலிபோர்னியாவிலுள்ள ரெட்வுட் ஷோர்ஸ் பகுதிக்கு மாற்றிவிட்டது.
இந்தியாவில் சென்னையில் இருந்த சோனி எரிக்ஸன் அலுவலகம் மூடப்படுகிறது. ஸ்வீடன் நாட்டில் உள்ள லுண்ட் நகருக்கு இந்த அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளால் சோனி எரிக்ஸன் நிறுவனத்தில் உள்ள 2000 பணியாளர்கள் வேலை இழக்கிறார்கள். வரும் 2010 ஆண்டு மூன்றாவது காலாண்டுக்குள் இந்த செலவுக்குறைப்பு நடவடிக்கை முடிந்துவிடுமாம்.
சென்னை அலுவலகம் மூடப்படுவதால் உள்ளூரில் 420 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள்.
சென்னையில் நாளை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஜி மொபைல் சேவை அறிமுகமாகிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வீடியோ கான்பரன்ஸிங் உள்ள பல நவீன வசதிகளை அளிக்கும் அடுத்த தலைமுறைக்கான மொபைல் சேவையை கடந்த பிப்ரவரி மாதமே அறிமுகப்படுத்தியது பிஎஸ்என்எல்.
ஆனால் இந்த திட்டம் வட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதுகுறித்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் விவரம் கேட்டும், பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களுக்குத் தெரியாது என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த திட்டத்தை சென்னையில் நாளை முதல் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கான தொடக்க விழா அண்ணாசாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த 3ஜி தொழில் நுட்பம் மூலம் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வீடியோ அழைப்பு தவிர இன்டர் நெட், டெலிவிஷன் நிகழ்ச்சிகள், திரைப்படம் போன்ற பல வசதிகளை அனுபவிக்க முடியும்.
இந்த 3ஜி தொழில் நுட்ப வசதியை தற்போதுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக அவர்கள் புதிய இணைப்பு எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.
பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.120 ரீசார்ஜ் செய்தும், போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தியும் 3ஜி தொழில் நுட்ப வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் பி.எஸ். என்.எல். நிறுவன வாடிக்கையாளர்கள் லோக்கலில் பேச நிமிடத்திற்கு ரூ.1-ம், எஸ்.டி.டி பேச ரூ.1.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக லோக்கலுக்கு நிமிடத்திற்கு ரூ.30 பைசா, எஸ்.டி.டி.க்கு ரூ.50 பைசாவும் இப்போதைக்கு குறைக்கப்படுகிறது. புதிய கட்டண திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸுடன் இணைந்து உருவாக்கியவரான பால் ஆலனுக்கு புற்று நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பால் ஆலனுக்கு லிம்போமா என்ற வகை புற்று நோய் தாக்கியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் தொடர்பான ஹாட்கின்ஸ் நோய் அவரைத் தாக்கியது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார் ஆலன். தற்போது லிம்போமா புற்றுநோய் அவரைத் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
56 வயதாகும் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது அவரது உல்கான் நிறுவன இணையதளத்தில், இந்த மாதத் தொடக்கத்தில் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. தற்போது கீமோதெரபி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்கான் நிறுவன தலைமை செயலதிகாரியும், சகோதரியுமான ஜோடி ஆலன் கூறுகையில், லிம்போமாவின் பொது வகையான பி செல் லிம்போமா ஆலனை தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது பால் ஆலன் குடும்பத்திற்கு கஷ்டமான செய்தியாக வந்துள்ளது. இருப்பினும் பால் முன்பு ஹாட்கின்ஸ் நோயை வென்றவர். எனவே இதையும் அவர் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
பால் ஆலன் தற்போது நன்றாக உள்ளார். தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றார்.
70களில் பில் கேட்ஸுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர் பால் ஆலன். மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுனராக 1983ம் ஆண்டு வரை இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். அந்த ஆண்டில்தான் அவருக்கு ஹாட்கின்ஸ் நோய் தாக்கியது.
கடந்த செப்டம்பர் மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 400 அமெரிக்க பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்தைப் பிடித்தார் பாலன் ஆலன். அவரது சொத்து மதிப்பு 11.5 பில்லியன் டாலர்களாகும்.
இந்தியாவில் பட்டாசுத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு , இத்தொழிலில் உலகளவில் போட்டிபோடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
முதல்கட்டமாக இதற்கான விரிவான சர்வே ஒன்றை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சர்வேயின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் கூட பட்டாசு தொழிலுக்கென சிறப்பு பொருளாதார மண்டலம் இல்லை. ஆனால், தமிழகத்தில் தேவைப்பட்டால் இதற்கென சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும் அரசு தயாராக இருப்பதாக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பட்டாசுத் தொழிலின் மையமாக கருதப்படுவது சிவகாசியாகும். இங்கு சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்டுகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக அறிந்து, தயாரிப்பு திறனை கணக்கிட்டு அதற்கு தேவையான நிதி மற்றும் இதர ஆதரவையும் வழங்க அரசு தயாராகி வருகிறது.
சர்வேயின் அடிப்படையில், பட்டாசுத் தொழிலுக்கென தனி தொழிற்பேட்டை அமைக்கலாமா அல்லது சிறப்பு பொருளாதார மண்டலமே அமைக்கலாமா என்பது குறித்து அரசு முடிவு செய்யும்.
இதுகுறி்த்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் வைத்தியன் கூறுகையில், 'பட்டாசுத் துறையில் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் தேவை அதிகரிக்கிறது. பட்டாசு தயாரிப்பில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது, நம்முடைய உற்பத்திச் செலவு கணிசமான அளவு அதிகமாக உள்ளது.
எனவே, உலக சந்தையை எதிர்கொள்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனபதை அறிய ஆய்வு நடத்தப்பட உள்ளது. பட்டாசு ஏற்றமதியில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உண்டு. அவற்றை எதி்ர்கொள்வது குறித்தும் ஆராயப்படும்' என்றார்.
நவ. 17: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி பவுன் விலை ரூ.11,920 ஆக இருந்தது. இது நவம்பர் 2-ம் தேதி ரூ.12,104 ஆக அதிகரித்தது. இதன் மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பவுன் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இப்போது ரூ.13 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.1,605. திங்கள்கிழமை விலை: ஒரு பவுன் ரூ.12,784. ஒரு கிராம் ரூ.1,598. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது என்கின்றனர் வியாபாரிகள். முதல் முறையாக, ஒரே மாதத்தில் பவுனுக்கு ரூ.900 அளவுக்கு உயர்வு ஏற்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்டர்நெட் தள முகவரிகளை இன்றளவிலும் ஆங்கிலத்தில் தான் அமைத்து வருகிறோம். இதனை மற்ற மொழிகளிலும் அமைத்து இயக்கும் காலம் விரைவில் வர இருக்கிறது.
இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் உண்மையிலேயே உலக மக்கள் அனைவரின் சொத்தா? ஆம், அதில் என்ன சந்தேகம். யாரும் இன்டர்நெட்டை அணுகலாம். தகவல்களைத் தேடலாம். அவர்கள் மொழியில் தளங்களை அமைக்கலாம். சில நாடுகள் இன்டர்நெட் இணைப்பினை மனிதனின் அடிப்படை உரிமையாகவும் தேவையாகவும் பிரகடனப்படுத்தி உள்ளதே. அப்படியானால் ஏன் இன்னும் இன்டர்நெட் தள முகவரிகளை ஆங்கிலத்தில் மட்டுமே அமைத்து வருகிறோம். அனைத்துலக மொழிகளில் ஏன் அமைக்கக் கூடாது? நல்ல, நியாயமான கேள்வி.
இன்டர்நெட்டை உலகளாவிய அளவில் 160 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பாதிப்பேருக்கு ஆங்கிலம் அந்நிய மொழியாகும். எனவே தான் காலத்தின் கட்டாயத்தில் இணைய முகவரிகளை ஆங்கிலம் அல்லாத மொழிகளிலும் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட்டின் 40 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு பெரும் திருப்புமுனையாகும்.
தொழில் நுட்ப வசதிக்காகத்தான் நாம் ஆங்கில எழுத்துக்களில் அமைத்துவருகிறோம். அடிப்படையில் இன்டர்நெட் தள முகவரிகள் எண்களில் தான் உள்ளன. நாம் அதனை மனதில் கொண்டு பயன்படுத்த முடியாது என்பதால் தான், ஆங்கிலச் சொற்களில், தொடக்க காலம் தொட்டு பயன்படுத்தி வருகிறோம். மற்ற மொழிகளில் பயன்படுத்தக் கூடாது; இப்படியே ஆங்கிலத்தில் இருக்கட்டும் என்று யார் சொல்வது? இன்டர்நெட் தளங்களின் பெயர்கள் எப்படி அமைய வேண்டும் என்பதனை Internet Corporation for Assigned Names and Numbers (Icann) என்ற அமைப்பு தான் வரையறை செய்து வருகிறது. இதுவரை ஆங்கிலத்தில் தான் வெப்சைட் முகவரிகள் இருக்க வேண்டும் எனக் கூறி வந்த இந்த அமைப்பு, அண்மையில் தென் கொரியா, சீயோல் நகரில் நடந்த கூட்டத்தில் மற்ற மொழிகளிலும் முகவரிகள் இருக்கலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டது.
இந்த மாற்றத்தை வரவேற்றவர்கள், இன்டர்நெட் செயல்பாட்டில் இது மாபெரும் தொழில் நுட்ப மாற்றமும் வரும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளில் முகவரிகள் அமைக்கப் பட்டால், இன்டர்நெட் இன்னும் பல கோடி மக்களைச் சென்றடையும். எந்த மொழியில் அமைக்கப்பட்டாலும், இன்டர்நெட் முகவரியின் இறுதிச் சொல் ..com, .gov, .co.uk, .cn போன்ற ஒன்றில்தான் முடிவடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் முதன் முதலில் அமெரிக்க நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டது. அங்கு ஆங்கில மொழி சொற்களில் தான் முகவரிகளை அமைத்தனர். அதுவே உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்டர்நெட் பயன்பாடு வேகமாகப் பரவி வரும் இந்நாளில், அதுவே பொருளாதார மேம்பாட்டின் ஓர் அங்கமாக இயங்கும் இந்நாளில், பிற மொழிகளையும் இன்டர்நெட் ஏற்றுக் கொள்வது அவசியம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த முடிவினை ஐகான் எடுத்துள்ளது. பிற மொழிகளில் முகவரிகள் அமைத்திட ஐகான் அமைப்பு இன்று முதல் விண்ணப்பங்களைப் பெற இருக்கிறது. அநேகமாக முதலில் சீன, அரபிக் மற்றும் ரஷ்ய மொழிகளில் இந்த முகவரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டு ஓரளவில் இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் ஐ–டி.என்.எஸ். என்ற நிறுவனம் தமிழ், சீனம், ஜப்பானிய மொழிகளில் இணைய முகவரியை அமைக்க முன்வந்து, அதனை விற்பனைக்கும் கொண்டு வந்தது. கம்ப்யூட்டர் ஒன்றில் பிற மொழிகளைப் பயன்படுத்த எண்ணம் உள்ளவர்கள், அதற்கான புரோகிராமினை இந்நிறுவனத்தின் தளத்தில் இருந்து இறக்கிப் பதிந்து கொள்ள வேண்டும். பின் தமிழில் டைப் செய்வதற்கான கீ போர்டு மற்றும் எழுத்து வகையினையும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முன் தேவைகளை அமைத்துக் கொண்டவுடன், இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்கியவுடன், கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம், முகவரியை வாங்கி, இந்நிறுவனம் உலகெங்கும் பல இடங்களில் நிறுவியுள்ள தன் சர்வருக்கு அதனை அனுப்பும். அந்த சர்வர்கள் அதனை ஆங்கிலத்திற்கு மாற்றி, அங்கிருந்து ஆங்கில முகவரி அடிப்படையில் தளங்களைப் பெற்று முகவரி தொடங்கிய கம்ப்யூட்டருக்கு இணைப்பினைத் தரும். தொடக்கத்தில் இது வெற்றி அடைந்தது; பின்னர் இந்த முயற்சி தமிழ் நாட்டில் உரம் பெறவில்லை. ஆனால் இப்போது ஐகான் அனுமதி தந்த பின்னர், தொழில் நுட்பம் எந்த வகையில் மாறப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த அனைத்து மொழி மாற்றம், இன்டர்நெட் பயன்பாட்டிலும், உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும்.