Tuesday, November 3, 2009

ஸ்ஸ்... அப்பாடா! நிம்மதிப் பெருமூச்சில் ஐடி நிறுவனங்கள்!

0 comments

இந்திய ஐடி நிறுவனங்கள் சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. காரணம், 'இப்போ முடியுமா... இன்னும் நாளாகுமா' என இழுத்துக் கொண்டே இருந்த அமெரிக்க பொருளாதார மந்த நிலை, மெல்ல மெல்ல மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருப்பதுதான்.

யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதைப் பார்த்த பிறகுதான், அமெரிக்கப் பொருளாதாரம் சரியான திசையில்தான் போகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார் அவர்.

அமெரிக்காவின் பெரிய ஐடி நிறுவனங்கள், மீட்சி நிலையை உறுதிப்படுத்தியுள்ளன. 2010 மத்தியில் மீண்டும் வழக்கமான வளர்ச்சி நிலைக்குத் திரும்பிவிடும் என்றும் இந்த நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

கார்ட்னர் என்ற ஆராய்ச்சி நிறுவனம், "2010-ல் ஐடி நிறுவனங்களின் உற்பத்தி செலவு மட்டும் 3.3 ட்ரில்லியன் டாலராக இருக்கும். இது நடப்பு ஆண்டை விட 3.3 சதவிகிதம் அதிகம்" என்று குறிப்பிட்டுள்ளது.

2010-ல் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைக்குத் திரும்பினாலும், ஏற்கெனவே 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட நஷ்டத்தை அவை ஈடுகட்ட வேண்டியிருப்பதால், 2012-ல்தான் லாபம் பார்க்க முடியும் என்றும் இந்த கணிப்புகள் கூறுகின்றன.

ஆனால் இந்திய ஐடி துறையைப் பொறுத்தவரை அமெரிக்காவில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தெரியத் துவங்கியபோதே, இங்கு சாதகமான நிலைமைகள் திரும்ப ஆரம்பித்துவிட்டன என்கிறார்கள்.

இன்போஸிஸ், டாடா கன்ஸல்டன்ஸி மற்றும் விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களின் நிகர லாப அளவு இந்த காலாண்டில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தன. இதன் விளைவு, இம்மூன்று நிறுவனங்களுமே, முதலீட்டுச் செலவை அதிகரித்துவிட்டன. சம்பள உயர்வையும் அறிவித்துள்ளன.

விப்ரோ நிறுவனம்தான் அதிக நம்பிக்கை தெரிவித்துள்ளது வரும் காலாண்டின் வர்த்தகம் குறித்து. அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 2.5 முதல் 3 சதவிகித வருவாய் உயர்வு நிச்சயம் இருக்கும் என்கிறது விப்ரோ. இது உண்மையில் மிகப்பெரிய விஷயம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆனால் விப்ரோவின் இணை தலைமை நிர்வாகி சுரேஷ் வாஸ்வானி, "எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பலம், விற்பனை போன்றவற்றின் அடிப்படையில் இந்த குறியீட்டளவை வெளிப்படுத்தியுள்ளோம். நிச்சயம் எங்களால் இதற்கு மேலும் சாதிக்க முடியும்" என்கிறார்.

நாட்டின் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், தனது இந்த காலாண்டின் வருமானத்தில் 58 சதவிகித பங்கு அமெரிக்காவிலிருந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இன்னும் வருகிற நாட்களில் அமெரிக்காவில் நிலைமை முழுமையாக சீரடையும்போது இந்த அளவு நிச்சயம் அதிகரிக்கும் என்கிறது அந்த நிறுவனத்தின் அறிக்கை.

நாஸ்காம் தலைவர் சோம் மித்தல் கூறுகையில், "இந்த நிதியாண்டின் முதல் பாதி எந்த பெரிய மாறுதலும் இல்லாமல்தான் முடிந்திருக்கிறது. ஆனால் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில் நல்ல மாறுதல் வரும். மேலும் இந்த காலகட்டம் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சி காணவேண்டும்," என்றார்.

சாம்சங்கின் ஆம்னியா!

0 comments
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம் ஆம்னியா-2 ஜிடி (18000) என்ற புதிய ரக செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகச் சிறந்த மல்டி மீடியா வசதிகள், யூஸர் இண்டர்ஃபேஸ், அதிவேக இணைப்புத்திறன் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும். விண்டோஸ் 6.1 தளத்தில் செயல்படும் ஆம்னியா-2 ஸ்டைல், மல்டிமீடியா மற்றும் வர்த்தக செயல்பாடுகளை ஒருங்கே வழங்கும். புத்தம் புதிய உயர் செயல்பாட்டுத்திறன் கொண்ட முழு தொடுதிரை போனாகும். இதில் டிஜிட்டல் தரத்திலான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் எடுக்க முடியும். விலை ரூ. 28,990.

ரிலையன்ஸ் மூலம் மைக்ரோசாஃப்ட் வசதி

0 comments
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் அங்கமான ரிலையன்ஸ் தகவல் மையம் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் தளத்தில் செயல்படும் சாஃப்ட்வேரை அளிக்கும் சேவையை அளிக்க உள்ளது. இதன்படி மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேரைப் பயன்படுத்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சாஃப்ட்வேர் தீர்வுகள், பயன்பாட்டு முறைகள், சேவைகளை ரிலையன்ஸ் மூலம் பெறலாம். இத்தகைய சேவையை கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் ரிலையன்ஸ் வழங்குகிறது.  இதன்படி இணையதளத்தில் புதிய தகவல்களை சேர்த்தல் (சர்வஸ் ஹோஸ்டிங்), தகவல்களை பதிவு செய்தல் (டேட்டா ஸ்டோரேஜ்), ஆவணக் காப்பகம் (ஆர்ச்சீவ்ஸ்) ஆகியன மட்டுமின்றி அன்றாட வணிக நடைமுறைகளுக்குத் தேவையான மின்ஞ்சல், இஆர்பி, தானியங்கி படிநிலை இயக்கம், ஆவண மேலாண்மை, தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடு, அறிக்கை தயார் செய்தல், அழிவிலிருந்து மீட்டல், ஃபயர்வால் சேவைகள் மற்றும் தானியங்கி பாதுகாப்பு மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த சேவை மையமாக இந்த மென்பொருள் தீர்வு அமைகிறது.  மைக்ரோசாஃப்ட் தயாரித்து அளித்துள்ள தொழில்நுட்பத்தை எளிதில் பெறுவதற்கு ரிலையன்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் செலவு குறையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா: 1000 பெண் ஆபரேட்டர்களை தேர்வு செய்யும் அரசு!

0 comments

நோக்கியா நிறுவனத்தில் வேலைக்கு சேர 1000 பெண்களை ஆபரேட்டர் ட்ரெயினியாக தேர்வு செய்கிறது தமிழக அரசு.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. மாத ஊதியம் ரூ. 4400 மற்றும் இலவச உணவுடன் ரூ. 1000-க்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ. சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும், என்று அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Posts with Thumbnails