Tuesday, November 17, 2009

உலக மொழிகளில் இணைய முகவரி

0 comments

இன்டர்நெட் தள முகவரிகளை இன்றளவிலும் ஆங்கிலத்தில் தான் அமைத்து வருகிறோம். இதனை மற்ற மொழிகளிலும் அமைத்து இயக்கும் காலம் விரைவில் வர இருக்கிறது.
 
இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் உண்மையிலேயே உலக மக்கள் அனைவரின் சொத்தா? ஆம், அதில் என்ன சந்தேகம். யாரும் இன்டர்நெட்டை அணுகலாம். தகவல்களைத் தேடலாம். அவர்கள் மொழியில் தளங்களை அமைக்கலாம். சில நாடுகள் இன்டர்நெட் இணைப்பினை மனிதனின் அடிப்படை உரிமையாகவும் தேவையாகவும் பிரகடனப்படுத்தி உள்ளதே. அப்படியானால் ஏன் இன்னும் இன்டர்நெட் தள முகவரிகளை ஆங்கிலத்தில் மட்டுமே அமைத்து வருகிறோம். அனைத்துலக மொழிகளில் ஏன் அமைக்கக் கூடாது? நல்ல, நியாயமான கேள்வி.

இன்டர்நெட்டை உலகளாவிய அளவில் 160 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பாதிப்பேருக்கு ஆங்கிலம் அந்நிய மொழியாகும். எனவே தான் காலத்தின் கட்டாயத்தில் இணைய முகவரிகளை ஆங்கிலம் அல்லாத மொழிகளிலும் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட்டின் 40 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு பெரும் திருப்புமுனையாகும்.

தொழில் நுட்ப வசதிக்காகத்தான் நாம் ஆங்கில எழுத்துக்களில் அமைத்துவருகிறோம். அடிப்படையில் இன்டர்நெட் தள முகவரிகள் எண்களில் தான் உள்ளன. நாம் அதனை மனதில் கொண்டு பயன்படுத்த முடியாது என்பதால் தான், ஆங்கிலச் சொற்களில், தொடக்க காலம் தொட்டு பயன்படுத்தி வருகிறோம். மற்ற மொழிகளில் பயன்படுத்தக் கூடாது; இப்படியே ஆங்கிலத்தில் இருக்கட்டும் என்று யார் சொல்வது? இன்டர்நெட் தளங்களின் பெயர்கள் எப்படி அமைய வேண்டும் என்பதனை Internet Corporation for Assigned Names and Numbers (Icann) என்ற அமைப்பு தான் வரையறை செய்து வருகிறது. இதுவரை ஆங்கிலத்தில் தான் வெப்சைட் முகவரிகள் இருக்க வேண்டும் எனக் கூறி வந்த இந்த அமைப்பு, அண்மையில் தென் கொரியா, சீயோல் நகரில் நடந்த கூட்டத்தில் மற்ற மொழிகளிலும் முகவரிகள் இருக்கலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டது.

இந்த மாற்றத்தை வரவேற்றவர்கள், இன்டர்நெட் செயல்பாட்டில் இது மாபெரும் தொழில் நுட்ப மாற்றமும் வரும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளில் முகவரிகள் அமைக்கப் பட்டால், இன்டர்நெட் இன்னும் பல கோடி மக்களைச் சென்றடையும். எந்த மொழியில் அமைக்கப்பட்டாலும், இன்டர்நெட் முகவரியின் இறுதிச் சொல் ..com, .gov, .co.uk, .cn போன்ற ஒன்றில்தான் முடிவடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் முதன் முதலில் அமெரிக்க நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டது. அங்கு ஆங்கில மொழி சொற்களில் தான் முகவரிகளை அமைத்தனர். அதுவே உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்டர்நெட் பயன்பாடு வேகமாகப் பரவி வரும் இந்நாளில், அதுவே பொருளாதார மேம்பாட்டின் ஓர் அங்கமாக இயங்கும் இந்நாளில், பிற மொழிகளையும் இன்டர்நெட் ஏற்றுக் கொள்வது அவசியம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த முடிவினை ஐகான் எடுத்துள்ளது. பிற மொழிகளில் முகவரிகள் அமைத்திட ஐகான் அமைப்பு இன்று முதல் விண்ணப்பங்களைப் பெற இருக்கிறது. அநேகமாக முதலில் சீன, அரபிக் மற்றும் ரஷ்ய மொழிகளில் இந்த முகவரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டு ஓரளவில் இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் ஐ–டி.என்.எஸ். என்ற நிறுவனம் தமிழ், சீனம், ஜப்பானிய மொழிகளில் இணைய முகவரியை அமைக்க முன்வந்து, அதனை விற்பனைக்கும் கொண்டு வந்தது. கம்ப்யூட்டர் ஒன்றில் பிற மொழிகளைப் பயன்படுத்த எண்ணம் உள்ளவர்கள், அதற்கான புரோகிராமினை இந்நிறுவனத்தின் தளத்தில் இருந்து இறக்கிப் பதிந்து கொள்ள வேண்டும். பின் தமிழில் டைப் செய்வதற்கான கீ போர்டு மற்றும் எழுத்து வகையினையும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த முன் தேவைகளை அமைத்துக் கொண்டவுடன், இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்கியவுடன், கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம், முகவரியை வாங்கி, இந்நிறுவனம் உலகெங்கும் பல இடங்களில் நிறுவியுள்ள தன் சர்வருக்கு அதனை அனுப்பும். அந்த சர்வர்கள் அதனை ஆங்கிலத்திற்கு மாற்றி, அங்கிருந்து ஆங்கில முகவரி அடிப்படையில் தளங்களைப் பெற்று முகவரி தொடங்கிய கம்ப்யூட்டருக்கு இணைப்பினைத் தரும். தொடக்கத்தில் இது வெற்றி அடைந்தது; பின்னர் இந்த முயற்சி தமிழ் நாட்டில் உரம் பெறவில்லை. ஆனால் இப்போது ஐகான் அனுமதி தந்த பின்னர், தொழில் நுட்பம் எந்த வகையில் மாறப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த அனைத்து மொழி மாற்றம், இன்டர்நெட் பயன்பாட்டிலும், உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும்.

ஆசிய பசிபிக் நாடுகள் தேடலில் முதல் இடம்

0 comments
இன்டர்நெட் தேடல்கள் இன்று அறிவியல் தாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் சென்ற செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள் முன்னணியில் இருந்தன.

ஏறத்தாழ 3 ஆயிரத்து 60 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டவற்றைக் காட்டிலும் 33% கூடுதலாகும். சராசரியாக ஒரு பயனாளர் இந்த மாதத்தில் மேற்கொண்ட தேடல்கள் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தேடல்களில் 44% கூகுள் சர்ச் இஞ்சின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. இதன் வழியாக 1,700 கோடி தேடல்கள் நடந்தன. இது மொத்தத்தில் 44.1 % ஆகும்.

அடுத்ததாக Baidu.com என்ற தேடுதல் (21.3%)தளம் இடம் பெற்றுள்ளது.

மூன்றா வதாக யாஹூ 13.8% பங்குடன் 530 கோடி தேடல் களைக் கொண்டி ருந்தது. ஆனால் ஹாங்காங் மற்றும் தைவானில் அதிக தேடல்கள் யாஹூ தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டன.

மேலே தரப்பட்ட தேடல் தகவல்கள் அனைத்தும் 15 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொண்ட தேடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும். பொது இன்டர்நெட் மையங்கள் மற்றும் பிடிஏ சாதனங்கள் வழி மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.

25 வருட சிறை தண்டனை காப்பாற்றியது பேஸ்புக்

0 comments
பேஸ்புக் எனப்படும் சோஷியல் நெட்வொர்க் இணையதளத்தால் 25 வருட சிறை தண்டனையிலிருந்து தப்பியுள்ளார் ஒரு வாலிபர்.

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் ராட்னி பிராட்பர்டு. புரூக்லின் நகரில் உள்ள ஒருவரது வீட்டில் துப்பாக்கியுடன் நுழைந்து திருடியதாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். எனினும், குற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் அவர் பேஸ்புக் இணையதளத்தில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால் கைது செய்யப்பட்ட 13வது நாளில் பிராட்பர்டு விடுதலை செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக, அப்பகுதி மாவட்ட நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனா ப்ருனோ தெரிவித்துள்ளார். துப்பாக்கியுடன் திருட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டிருந்தால், அந்த இளைஞர் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்க வேண்டியிருக்கும் என வழக்கறிர் ராபர்ட் ரூலன்ட் தெரிவித்தார்.

இதுகுறித்து பிராட்பர்டு கூறுகையில் திருடியதாக கூறப்பட்ட நேரத் தில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஓட்டலுக்கு வராமல் போன என்னுடைய காதலியை திட்டிக் கொண்டிருந்தேன்என்றார்.

Related Posts with Thumbnails