கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது சேவைகளைத் துவக்கிய யுனிநார் 2010 ஜனவரிக்குள் அகில இந்திய அளவில் 12 லட்சத்திறகும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் அதன் சந்தாதாரர் எண்ணிக்கை 2லட்சத்து 2ஆயிரமாக உள்ளது என யுனிநார் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.
ஒரு நிமிடத்திற்கு லோக்கல் காலுக்கு 29 பைசாவும் எஸ்டிடி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு 49 பைசா கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 3ம் தேதி உ.பி (மேற்கு), உ.பி (கிழக்கு), பீகார், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் யுனிநார் சேவை தொடங்கியது. அதன் ஜி.எஸ்.எம் சேவை ஜனவரி மாத இறுதியில் துவக்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டின் கடைசி மாதத்தில் மட்டும் தமிழ்நாடு வட்டத்தில் 2 லட்சத்துக்கு அதிகமான சந்தாதாரர்களும் இந்திய அளவில் 12 லட்சத்துக்கு கூடுதலாகவும் சந்தாதாரர்கள் உள்ளனர்.
ஆப்பிள் நிறுவனத்துக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தனது சொந்தத் தயாரிப்பான நெக்ஸஸ் ஒன் செல்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
பென்சிலை விட மெல்லிசாக உள்ள இந்த செல்போனகள் இரண்டு வித விலைகளில் கிடைக்கின்றன.
முதல் வகை செல்போன் விலை 179 டாலர். இதில் குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட்வொர்க்கைத்தான் பயன்படுத்த வேண்டும். இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் வாங்க வேண்டும். இடையில் வேறு நிறுவனத்துக்கு மாறக்கூடாது.
அடுத்த வகை போன் 529 டாலர். இதில் விருப்பப்பட்ட நெட்வொர்க்கை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஐபோன்களுக்கு எதிராக இந்த நெக்ஸஸ் ஒன்னை களமிறக்கியுள்ளது கூகுள்.
ஒரு கம்ப்யூட்டரில் இணைய தளம் மூலம் என்னென்ன வசதிகளெல்லாம் உங்களுக்குக் கிடைக்குமோ அத்தனையும் இந்த நெக்ஸஸ் ஒன்னில் கிடைக்கும் என்பதுதான் இதன் சிறப்பு
தெலங்கானா பிரச்னை தொடர்கதையாக இருப்பதால், ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அலுவலகங்களை மாற்ற திட்டமிட்டுள்ளன.
ஆந்திராவின் ஐதராபாத்தில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா மற்றும் எச்சிஎல் ஆகிய நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு பிரிவினரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இதனால் கடந்த ஒன்றரை மாதமாக ஐ.டி.தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் அலுவலகங்களை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து அந்நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.
"ஐதராபாத்தில் செயல்படும் டாப் 5 ஐடி நிறுவனங்கள், சென்னை, பெங்களூரில் வாடகைக்கு அலுவலகம் வேண்டும் என கேட்டுள்ளன" என ஸ்ரீராம் பிராப்பர்டிஸ் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்தார்.
"இரண்டு ஐடி நிறுவனங்கள் 100 அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தமாக லீசுக்கு வேண்டும் என தெரிவித்துள்ளன" என அக்ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டி பாபு தெரிவித்தார்.
ஜாம்பியாவின் அரசு தொலைபேசி நிறுவனமான ஜாம்டெல்ஸை வாங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல்.
ஜாம்டெல் தனது 75 சதவிகித பங்குகளை விற்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச நிறுவனங்கள் அதை ஏலத்தில் எடுக்க போட்டியிட்டன.
இதில் இறுதி ஏலதாரர்களாக இந்திய அரசின் பிஎஸ்என்எல், அங்கோலாவின் யுனிடெல், லிபியாவைச் சேர்ந்த லாப் கிரீன்காம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றொரு இந்திய அரசு நிறுவனமான எம்டிஎன்எல்லும் இதற்கு முயற்சித்தது. ஆனால் இறுதி நேரத்தில் பின்வாங்கிவிட்டது.
ஏலத்துக்குப் பிறகு ஜாம்டெல் நிறுவனத்தின் 75 சதவிகித பங்குகள் எந்த நிறுவனத்துக்கு தரப்படும் என்பதை வரும் ஜனவரி 11-ம் தேதி ஜாம்பியா அரசு அறிவிக்கிறது.
3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.
இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.
இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.
இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ல் தனது ஆண்டு சம்பளமாக 1 டாலரை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதேபோல வருடாந்திர போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் 2009-ம் ஆண்டு அவருக்கு தரப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தை 1976-ல் நிறுவியவர் ஜாப்ஸ். இடையில் இந்த நிறுவனத்திலிருந்து விலகியவர் 1997-ல் மீண்டும் இணைந்தார். அன்று முதல் தனது சம்பளமாக ஆண்டுக்கு 1 டாலர் மட்டுமே பெறுகிறார் ஜாப்ஸ்.
உலகின் டாப் சிஇஓ என ஹார்வர்டு பிஸினஸ் ரிவிவ் அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ், 2009-ம் ஆண்டு தனது பயணப்படியாக 4000 டாலரை மட்டுமே பெற்றுள்ளார்.
இதற்கு முந்தைய ஆண்டில் இவர் பெற்ற பயணப்படி 871000 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஸ்டீவ் தலைமையில் இயங்கும் மற்ற நிர்வாகிகள் நால்வருக்கு தலா 1 லட்சம் டாலர் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் 5.5 மில்லியன் பங்குகள் உள்ளன. இது தவிர, வால்ட் டிஸ்னியிலும் அவருக்கு 7.4 மில்லியன் பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு மட்டும் 4.5 பில்லியன் டாலர்கள்.
ஸ்டீவின் காலத்தில்தான் ஆப்பிள் பங்குதாரர்களுக்கு மிக அதிகபட்ச வருவாய் கிடைத்தது.
காப்புரிமையை மீறிய மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ரூ.1,363 கோடி அபராதத்தை அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது எம்எஸ் ஆபீஸ் பேக்கேஜ். இதன் ஒரு பகுதியான ‘வேர்டு’ ஆவணங்களை உருவாக்குவதில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேர்டு சாப்ட்வேரில் அதன் காப்புரிமையை மீறி, தங்களது தயாரிப்பான எக்ஸ்எம்எல் எனப்படும் சாப்ட்வேரின் அம்சங்களையும் சேர்த்து விற்பனை செய்து வருவதாக கனடாவின் ஐ4ஐ இன்க், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம், வேர்டு சாப்ட்வேரின் காப்புரிமை மீறப்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.1363 கோடி இழப்பீடு தர உத்தரவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
‘‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செயலால், சிறிய நிறுவனமான ஐ4ஐ சந்தை மதிப்பு 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எம்எல் பிராண்ட் மதிப்பு குறைந்துள்ளதுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளது’’ என மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெக்சாஸ் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து மைக்ரோசாப்ட் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஐ4ஐ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14-ம் தேதி நடக்கப்போகிறதாம். இதனை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ ராசா இன்று டில்லியியில் அறிவித்துள்ளார்.
3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விடுவதன் மூலம் ரூ 25000 கோடியைத் திரட்டத் மத்திய அரசு திட்டமிட்டு, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் தரப்படவும் , ஏலத் தொகை மற்றும் ஏலத் தேதியை முடிவு செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு வை(eGoM) மத்திய அரசு அமைத்துள்ளது.
தேச நலன் கருதி எல்லைப்புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை செயலிழக்கச் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் கால அவகாசம் கோரியிருந்தது .
இதனால் இந்த ஆண்டு நடப்பதாக இருந்த 3 ஜி ஏலம் 2010-க்கு தள்ளிப் போனது.
இந்த நிலையில் 3 ஜி ஏலத் தேதி தொடர்பாக அமைச்சர்கள் கூட்டம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்தது. ஒருமணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ராசா, திட்டமிட்டபடி ஜனவரி 14-ம் தேதி ஏலம் நடக்கும் என்றும், அதற்குள் பாதுகாப்புத் துறை ஸ்பெக்ட்ரம் அலைகளை எல்லைப் புறங்களில் அப்புறப்படுத்திவிடுவதாக உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஏலத்தில் வெல்லும் 4 நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கியுள்ளது கூகுள் நிறுவனம். சமீபத்திய செய்திகளின்படி இன்டர்நெட் வருமானம் மூலம் கூகுள் சம்பாதித்த 1.6 பில்லியன் பவுண்டுகளுக்கு (1 பவுண்ட் = ரூ 76) வரி செலுத்தவில்லையாம்.
இதுகுறித்த செய்தியை சண்டே டைம்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
2008-ம் ஆண்டு பிரிட்டனில் சம்பாதித்த பணம் முழுவதையும் தனது அயர்லாந்து கிளைக்கு குறுக்கு வழியில் மாற்றி 450 மில்லியன் பவுண்ட் வரி செலுத்தாமல் சட்டப்பூர்வமாகவே தப்பித்துக் கொண்டது கூகுள்.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு செலுத்திய வருமான வரி 141519 டாலர்கள் மட்டும்தான் என்றும், அதுகூட விளம்பர வருவாய் மீதான வரி இல்லை என்றும் கூறியுள்ளது டைம்ஸ். பிரிட்டிஷ் வங்கிகளில் உள்ள தனது வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டிக்கு செலுத்திய வரிதானாம் இது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் லிபரல் டெமாக்கரடிக் கட்சியின் துணைத் தலைவர் வின்ஸ் கேபிள், "கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்த அளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். சம்பாதித்த பணத்துக்கு நேர்மையாக பணம் செலுத்துவதில் என்ன தயக்கம்? தனது சமூகப் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது கூகுள்" என்றார்.
"நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நேரத்தில் அதிக வருவாய் ஈட்டும் கூகுள் போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதால், அந்த வரிச் சுமை சாதாரண மக்களின் தொண்டையில் கத்தியாய் நிற்கும்" என்றும் கேபிள் கூறியுள்ளார்.
இணைய தளத்தில் வெளியிட காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்த கூகுள் நிறுவனம், விதிமீறலில் ஈடுபட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.6.72 லட்சம் அபராதம் செலுத்த பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
உலகின் முன்னணி இணைய தள சேவை நிறுவனம் கூகுள். அது உலகம் முழுவதும் அரிய புத்தகங்களை ஸ்கேன் செய்து அனைவரும் இணைய தளத்தில் படிக்கும் வசதி ஏற்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. ‘டிஜிட்டல் புக்’ என்ற பெயரிலான அந்த வசதிக்காக இதுவரை 1 லட்சம் பிரெஞ்சு மொழி புத்தகங்களை ஸ்கேன் செய்துள்ளது.
காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் வெளியிடக் கூடாது என்று கூகுளுக்கு பல பதிப்பகங்கள், நூலாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி புத்தகங்களை ஸ்கேன் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வந்தது.
இதை எதிர்த்து பிரான்ஸ் பதிப்பாளர் லா மார்டினர், அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த பாரீஸ் நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது. ‘டிஜிட்டல் புக் வசதிக்காக காப்புரிமை பெற்ற புத்தகங்களை ஸ்கேன் செய்தது சட்ட மீறல். அந்தப் பணியில் ஈடுபட்ட நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.6.72 லட்சத்தை கூகுள் அபராதமாக செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கு தொடர்ந்த லா மார்டினருக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் வழக்கு செலவு சேர்த்து ரூ.2.02 கோடி அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றி கூகுள் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் அப்பீல் செய்யும்’ என்றார்.
இதேபோல கூகுளின் ‘டிஜிட்டல் புக்’ வசதிக்கு அமெரிக்கா, ஜெர்மனி காப்புரிமை அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காப்புரிமை பெற்ற புத்தகங்களை இணைய தளத்தில் இடம்பெறச் செய்வதை கூகுள் கைவிடத் தவறினால் அவர்களும் வழக்கு தொடர்ந்து பல கோடி இழப்பீடு கோர திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்த தீர்ப்பு குறித்து பிரான்ஸ் பதிப்பக உரிமையாளர் சங்க அதிகாரி கூறுகையில், ‘‘இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. என்ன நினைத்தாலும் செய்யலாம் என்று உலகின் ராஜாவாக தன்னை நினைத்த கூகுளுக்கு சரியான பாடம் இது’’ என்றார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும்.
ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspxஎன்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
உலகிலேயே அதிக விலை கொண்ட செல்போனை இங்கிலாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 200 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட அதன் விலை ரூ.14.7 கோடி. லிவர்பூலைச் சேர்ந்த தங்க நிறுவனம் கோல்டு ஸ்டிரைக்கர் இன்டர்நேஷனல். அதன் ஆர்டரின் கீழ் ஸ்டாட் ஹியூஜஸ் என்ற நிறுவனம், உலகின் விலை உயர்ந்த செல்போனை தயாரித்துள்ளது. 3ஜி தொழில்நுட்பம் கொண்ட அந்த ஐபோனில் 200 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
முற்றிலும் 22 காரட் தங்கத்தில் தயாரானது. முன்பக்கத்தில் 136 வைரங்களும், 53 வைரங்களில் ஐபோன் நிறுவனமான ஆப்பிளின் லோகோவும் இடம்பெற்றுள்ளது. இந்த போனை தயாரிக்க 10 மாதங்கள் ஆகின. 7 கிலோ எடை கொண்ட உறுதியான கிரானைட்பேக்கிங்கில் அது விற்பனைக்கு அனுப்பப்பட்டது. கிரானைட் கற்களில் உலகின் மிகத் தரமானதாக காஷ்மீர் கோல்டு கிரானைட் கருதப்படுகிறது. அதில் இந்த பேக்கிங் செய்யப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் நாட்டின் நான்காவது பெரிய செல்போன் நிறுவனமான வாரிட் டெலிகாமை வாங்குகிறது இந்தியாவின் பார்தி ஏர்டெல்.
அபு தாபியைச் சேர்ந்த தாபி நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த வாரிட் மொபைல். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பங்களாதேஷ் மொபைல் போன் மார்க்கெட்டில் நுழைகிறது பார்தி ஏர்டெல்.
வாரிட் டெலிகாமின் 70 சதவிகித பங்குகளை பார்திக்கு விற்க சம்மதித்துவிட்ட தாபி நிறுவனம், இதற்கு முறைப்படி பங்களைதேஷ் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது.
கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பார்தி, படிப்படியாக 900 மில்லியன் டாலர் வரை பங்களாதேஷில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளது.
வாரிட் நிறுவனம் 2007-ல் பங்களாதேளஷில் கால்பதித்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக அந்நாட்டின் பெரிய செல்போன் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
பார்தி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவது, பங்களாதேஷ் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் இப்போது 52 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கம்ப்யூட்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான டெல் நிறுவனம் தனது மலேஷிய கிளையில் 700 பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த கிளையில் 4,500 பணியாளர்கள் உள்ளனர். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டர்கள், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேட்டஸ்ட் பாம் டாப் (Palm top) இங்கு தயாரிக்கப்படுகின்றன.
உலகமெங்கும் இந்த நிறுவனத் தயாரிப்புகளுக்கு நல்ல தேவை இருந்தாலும், சமீப காலமாக டெல் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. சர்வதேச மந்தத்தை சமாளிக்க முடியாத நிலையில் பல செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.
நிலைமையைச் சமாளிக்க வரும் ஜூலைக்குள் 700 ஊழியர்களை நீக்கிவிடுவதாக அறிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் டெல் நிறுவனத்தின் பினாங் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள். ஜனவரி தொடங்கி ஜூலைக்குள் இந்தப் பணி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜாஸ்மின் பேகம் அறிவித்துள்ளார்.
மேலும் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மட்டும் கம்ப்யூட்டர் தயாரிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை, சூளைமேடு வன்னியர் தெருவைச் சேர்ந்த கவுதமி என்பவர் சென்னை ஆற்காடு சாலையில் உள்ள கிருஷ்ணா அண்ட் கோ நிறுவனம் மீது மயிலாப்பூரில் உள்ள தெற்கு நுகர்வோர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கிருஷ்ணா நிறுவனம் தனக்கு கம்யூட்டர் சப்ளை செய்ததில் குறைபாடு உள்ளது. இதனால், தனக்கு ரூ.4 லட்சத்து 80,000 இழப்பு ஏற்பட்டது. என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருஷ்ணா நிறுவனம் பாதிக்கப்பட்ட கவுதமிக்கு இழப்பீடாக ரூ.20,000 வழங்க உத்தரவிட்டனர். கிருஷ்ணா அண்ட் கோ மேல் முறையீடு செய்தது. நீதிபதி எம்.தணிகாசலம், உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். கிருஷ்ணா அண்ட் கோ நிறுவனம் குறைபாடான கம்யூட்டரை சப்ளை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று தீர்ப்பளித்தது.???????????
முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனமான நோக்கியா, தனது பின்லாந்து கிளையின் ஊழியர்களில் கணிசமானோரை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
வருகிற 2010-ம் ஆண்டில் இந்த பணி நீக்கம் தொடங்கும் என்றும் ஆண்டு முழுவதும் 90 நாட்களுக்கு ஒருமுறை 20 சதவிகித ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா நிறுவனத்துக்கு பின்லாந்தில் சலோ என்ற நகரில் ஒரே ஒரு தொழிற்சாலை உள்ளது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள்.
"மார்க்கெட் நிலவரம் மோசமாக உள்ளது.இப்போதைக்கு எல்லா பணியாளர்களுக்கும் வேலை தருவது சாத்தியமல்ல. முதலில் நிறுவனத்தைக் காப்பதுதான் முக்கியமாக உள்ளது" என்றார் நோக்கியாவின் செய்தி தொடர்பாளர்.
வசூலாகாத கடனை சமாளித்து சொத்தாக மாற்றும் வகையில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு உதவும் ரேவிஷ் பி சர்வ் என்ற இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.வசூலாகாத கடன் நிர்வகிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனம் ரேவிஷ். அதன் சார்பில் www.reyvishbserve.com என்ற இணைய தளம் தொடங்கப்பட்டு உள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஆகியவை தங்களிடம் உள்ள வசூலாகாத கடன் விவரங்களை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.வசூலாகாத கடன்களை (என்பிஏ) சொத்தாக மாற்றும் வகையில் கடன் வசூலிப்பில் புதிய தொழில்நுட்பங்களை ரேவிஷ் பி சர்வ் இணைய தளம் அளிக்கிறது.
கடன் வசூலிப்பில் அவை வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த இணைய தளத்துடன் அரசு வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் தொடர்பு கொண்டுள்ளன. வசூலாகாத கடனுக்கான அசையும், அசையா சொத்துகளை சட்டரீதியாக பிரச்னையின்றி ஏலம் விட்டு என்பிஏ&வை குறைக்க ரேவிஷ் பி சர்வ் உதவுகிறது. கடன் வசூலிப்பு நடைமுறைகளை விளக்குவதுடன், சர்பாசி சட்டப்படி ஏலம் நடத்துதல், தீர்ப்பாய உத்தரவு பெற்று ஏலம் விடுதல், வங்கி சாரா நிதி நிறுவனங்களால் பறிமுதலான வாகனங்கள், சொத்துகளை ஆன்லைன் ஏலம் விடுதல் ஆகியவற்றிலும் ரேவிஷ் பி சர்வ் சிறந்து விளங்குகிறது.
செல்போன் நிறுவனங்களுக்கிடையிலான போட்டியின் ஒரு கட்டமாக வோடபோன் நிறுவனம் தனது இரு திட்டங்களுக்கான ரோமிங் கட்டணத்தைக் குறைத்துள்ளது.
போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீ பெய்ட் ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் இது பொருந்தும். வோடபோனின் டிராவல் பிளான் மற்றும் டிக்கெட் பிளான் ஆகிய இரு பிரிவுகளில் இந்த ரோமிங் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
டிராவல் பிளான் திட்டப்படி வாடிக்கையாளர்கள் இனிமேல் ஒரு நிமிடத்திற்கு 70 பைசா ரோமிங் கட்டணமாக செலுத்த வேண்டும். டிக்கெட் பிளான் திட்டத்தில், ஒரு விநாடிக்கு 1.5 பைசா செலுத்த வேண்டும்.
ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், ரூ. 61 ரீசார்ஜ் செய்து டிராவல் பிளானையும், ரூ. 62 ரீசார்ஜ் செய்து டிக்கெட் பிளானையும் பயன்படுத்தலாம்.
இந்த இரு திட்டங்களுக்கான வாலிடிட்டி ரீசார்ஜ் செய்யும் நாளிலிருந்து 365 நாட்களாக இருக்கும்.
பி.எஸ்.என்.எல். 3 ஜி மொபைல் போன் எண்களை ஏலத்தில் விட்டதில் சென்னையில் 8 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
அதிகபட்சமாக, ஒரு எண் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ கால் வசதி கொண்ட 3 ஜி சேவையை சமீபத்தில் பி.எஸ்.என்.எல். சென்னையில் அறிமுகப்படுத்தியது.
இந்த சேவையை தங்களுக்குப் பிடித்தமான பேன்ஸி எண்களுடன் பெற போட்டி போட்டனர் வாடிக்கையாளர்கள். எனவே வாடிக்கையாளரின் இந்த ஆர்வத்தை காசாக்கும் முயற்சியில் இறங்கிய பிஎஸ்என்எல், 292 'பேன்சி' எண்களை ஏலத்தில் விட முடிவு செய்தது.
ஏற்கனவே, 2 ஜி சேவைக்கான எண்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்த அனுபவம் பிஎஸ்என்எல்லுக்கு உண்டு.
எனவே 3 ஜி எண்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் ஒவ்வொரு பேன்சி எண்ணுக்கும் குறைந்த பட்ச தொகையாக ஆயிரம், 2,000, 3,000 என நிர்ணயிக்கப்பட்டு நூறின் மடங்காக ஏலம் கேட்க வேண்டும் என்று, நிபந்தனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஏலத்தில், 93 எண்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த, '3 ஜி' எண்கள் அனைத்தும் 94455 என துவங்குமாறு அமைந்துள்ளது.
இந்த ஏலத்தில் குறிப்பாக 94455 55555 என்ற எண் மட்டும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 99999 என முடியும் எண், 77 ஆயிரம் ரூபாய்க்கும், 56789 என முடியும் எண், 62 ஆயிரம் ரூபாய்க்கும், 66666 என முடியும் எண் 30,300 ரூபாய்க்கும், 12345 என முடியும் எண் 30 ஆயிரம் ரூபாய்க்கும், 94455 என முடியும் எண் 28 ஆயிரத்திற்கும், 11111 என முடியும் எண் 15 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டன.
இதன் மூலம், மூலம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
பெரும் சர்ச்சைக்கும் சந்தேகப் பார்வைக்கும் ஆளான டெலினார்- யூனிடெக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான யூனினார் தனது மொபைல் சேவையைத் துவங்கியது.
நார்வேயைச் சேர்ந்த நிறுவனம் டெலினார். இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக்கின் 74 சதவீதப் பங்குகளை சர்ச்சைக்குரிய முறையில் வாங்கியது இந்த நிறுவனம். பின்னர் யூனிடெக்கின் பெயரைப் பயன்படுத்தி பல பெயர்களில் இந்தியாவில் கூட்டாக மொபைல் சேவையைத் துவங்க லைசென்சுக்கு விண்ணப்பித்தது.
போட்டியிட்ட பிற நிறுவனங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்த நிறுவனத்துக்குதான் 2 ஜி அலைவரிசையை ஒதுக்கியது மத்திய தொலைத் தொடர்புத் துறை.
பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வெறும் ரூ.1651 கோடிக்கு யூனிடெக் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதுமட்டுமல்ல, 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெறும்வரை டெலினார் நிறுவனத் தொடர்பு பற்றி பேசாமல் இருந்த யூனிடெக், அலைவரிசை ஒதுக்கீட்டைப் பெற்ற பிறகு, அடுத்த சில வாரங்களுக்குள் டெலினாருடன் கூட்டணி சேர்ந்ததாக அறிவித்து, தனது 60 சதவிகித பங்குகளையும் டெலினாருக்கு மாற்றியது. யாரும் பிரச்சனை செய்யக் கூடாது என்பதால், யூனினார் என்ற புது நிறுவனத்தை கணக்கில் கொண்டு வந்தது.
இதனைக் கவனித்த இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் உளவுத் துறை யூனிடெக்கின் மொபைல் சர்வீசுக்கு அனுமதி தருவதை நிறுத்தி வைத்தன.
அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இது மிகமிக முக்கியாமானது. இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாதம் தலைவிரித்தாடும் பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் செல்போன் சேவையை நடத்தி வருகிறது இந்த டெலினார் நிறுவனம். இவர்களிடம் 2 ஜி அலைவரிசையை ஒப்படைத்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆவது என்று பாதுகாப்புத் துறை எழுப்பிய கேள்விக்கு கடைசி வரை பதிலே சொல்லவில்லை, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்.
மாறாக உயர்மட்ட அளவில் நடந்த பேரங்களுக்குப் பின் யூனினார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் தான் அமைச்சர் ராஜாவின் அலுவலகம் சிபிஐ சோதனைக்கு உள்ளானதும், ராஜா விசாரிக்கப்பட்டதும் நினைவிருக்கும்.
இப்போது அதே யூனினார் நிறுவனம் கோலாகலமாக தனது மொபைல் சர்வீஸைத் துவங்கியுள்ளது.
இந்த புதிய மொபைல் சேவையில் உள்ளூர் கட்டணம் வெறும் 29 பைசாதான். எஸ்டிடி கட்டணம் 49 பைசா.
எடுத்த எடுப்பிலேயே 7 தொலைத் தொடர்பு வட்டங்கள், 1000 டீலர்கள், ரூ 2620 முதலீடு என பிற நிறுவனங்களை ஆட்டம் காண வைக்கும் வேகத்துடன் வருகிறது யூனினார்.