Wednesday, November 18, 2009

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு புற்று நோய்

0 comments

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸுடன் இணைந்து உருவாக்கியவரான பால் ஆலனுக்கு புற்று நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பால் ஆலனுக்கு லிம்போமா என்ற வகை புற்று நோய் தாக்கியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் தொடர்பான ஹாட்கின்ஸ் நோய் அவரைத் தாக்கியது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார் ஆலன். தற்போது லிம்போமா புற்றுநோய் அவரைத் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

56 வயதாகும் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது அவரது உல்கான் நிறுவன இணையதளத்தில், இந்த மாதத் தொடக்கத்தில் ஆலனுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. தற்போது கீமோதெரபி கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்கான் நிறுவன தலைமை செயலதிகாரியும், சகோதரியுமான ஜோடி ஆலன் கூறுகையில், லிம்போமாவின் பொது வகையான பி செல் லிம்போமா ஆலனை தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

இது பால் ஆலன் குடும்பத்திற்கு கஷ்டமான செய்தியாக வந்துள்ளது. இருப்பினும் பால் முன்பு ஹாட்கின்ஸ் நோயை வென்றவர். எனவே இதையும் அவர் வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

பால் ஆலன் தற்போது நன்றாக உள்ளார். தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்றார்.

70களில் பில் கேட்ஸுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர் பால் ஆலன். மைக்ரோசாப்ட்
Paul Allen
நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுனராக 1983ம் ஆண்டு வரை இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். அந்த ஆண்டில்தான் அவருக்கு ஹாட்கின்ஸ் நோய் தாக்கியது.

கடந்த செப்டம்பர் மாதம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 400 அமெரிக்க பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்தைப் பிடித்தார் பாலன் ஆலன். அவரது சொத்து மதிப்பு 11.5 பில்லியன் டாலர்களாகும்.

பட்டாசுத் தொழிலில் உலக சந்தையில் போட்டியிட தமிழகம் முயற்சி

0 comments

இந்தியாவில் பட்டாசுத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு , இத்தொழிலில் உலகளவில் போட்டிபோடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

முதல்கட்டமாக இதற்கான விரிவான சர்வே ஒன்றை நடத்த மாநில அரசு  திட்டமிட்டுள்ளது. இந்த சர்வேயின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

சீனாவில் கூட பட்டாசு தொழிலுக்கென சிறப்பு பொருளாதார மண்டலம் இல்லை. ஆனால், தமிழகத்தில் தேவைப்பட்டால் இதற்கென சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும் அரசு தயாராக இருப்பதாக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பட்டாசுத் தொழிலின் மையமாக கருதப்படுவது சிவகாசியாகும். இங்கு சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்டுகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக அறிந்து, தயாரிப்பு திறனை கணக்கிட்டு அதற்கு தேவையான நிதி மற்றும் இதர ஆதரவையும் வழங்க அரசு தயாராகி வருகிறது.

சர்வேயின் அடிப்படையில், பட்டாசுத் தொழிலுக்கென தனி தொழிற்பேட்டை அமைக்கலாமா அல்லது சிறப்பு பொருளாதார மண்டலமே அமைக்கலாமா என்பது குறித்து அரசு முடிவு செய்யும்.

இதுகுறி்த்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிஜிதாமஸ் வைத்தியன் கூறுகையில், 'பட்டாசுத் துறையில் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் நாளுக்கு நாள் தேவை அதிகரிக்கிறது. பட்டாசு தயாரிப்பில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது, நம்முடைய உற்பத்திச் செலவு கணிசமான அளவு அதிகமாக உள்ளது.

எனவே, உலக சந்தையை எதிர்கொள்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனபதை அறிய ஆய்வு நடத்தப்பட உள்ளது. பட்டாசு ஏற்றமதியில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உண்டு. அவற்றை எதி்ர்கொள்வது குறித்தும் ஆராயப்படும்' என்றார்.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: ரூ.13 ஆயிரத்தை நெருங்குகிறது

0 comments

நவ. 17: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி பவுன் விலை ரூ.11,920 ஆக இருந்தது. இது நவம்பர் 2-ம் தேதி ரூ.12,104 ஆக அதிகரித்தது. இதன் மூலம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பவுன் விலை ரூ.12 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இப்போது ரூ.13 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 
 
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.12,840-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.1,605. திங்கள்கிழமை விலை: ஒரு பவுன் ரூ.12,784. ஒரு கிராம் ரூ.1,598. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில மாதங்களாக வெகுவாக அதிகரித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது என்கின்றனர் வியாபாரிகள். முதல் முறையாக, ஒரே மாதத்தில் பவுனுக்கு ரூ.900 அளவுக்கு உயர்வு ஏற்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts with Thumbnails