Monday, January 25, 2010

சீன வைரஸ் பரவல்-தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'

0 comments
கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.

இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.

இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சிமென்டெக்கின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜான் ஹாரிசன் கூறுகையில், மைக்ரோசாப்ட்டின் பலவீனமான பிரவுசர்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை செயலிழக்க வைக்கக் கூடிய வைரஸ்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த வைரஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6ஐ வெகுவாக தாக்குகிறதாம். 7 மற்றும் 8வது வெர்சனை தாக்கக் கூடிய வகையில் அந்த வைரஸ்களை வலுவாக்கும் முயற்சிகளிலும் 'ஹேக்கர்கள்' ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 100 முன்னணி இணையத் தளங்களில் இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இவை மிகவும் அபாயகரமானவை. பிரவுசர் வழியாக நுழைந்தவுடனேயே இது கம்ப்யூட்டரைத் தாக்கி விடும் என்றார்.

தற்போதைய புதிய சாப்ட்வேரால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் வைரஸ் தாக்குவதைத் தடுக்க முடியும் என மைக்ரோசாப்ட் கூறுகிறது.

மேலும், சில வகை வைரஸ்கள் மூலம் நமது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்கள் உள்ளிட்டவற்றை தொலை தூரத்திலிருந்தபடி உளவு பார்க்கும் வேலைகளையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளனராம் என்கிறார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாமர்.

சீனாவில் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் வைரஸ்-உளவு சாப்ட்வேர் தாக்குதலால், அங்கிருந்து தனது அலுவலகங்களை இடம் மாற்றப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

வைரஸ் தடுப்பு சாப்ட்வேரை நிறுவிக் கொள்ள தனது இணையதளத்திற்குச் செல்லுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

-தட்ஸ் தமிழ்

Related Posts with Thumbnails