Sunday, January 31, 2010

எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி

0 comments

கம்ப்யூட்டரில் மாநில மொழிகளில் எளிதாக தட்டச்சு செய்வதற்கு வசதியாக தமிழ் உட்பட 14 மொழிகளில் புதிய வசதியை கூகுள் இணைய தளம் தொடங்கியுள்ளது.

இந்த சாப்ட்வேரை பெங்களூரில் உள்ள கூகுள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் வடிவமைத்தது. அதன் மூலம் உலகம் முழுவதும் இந்திய சாப்ட்வேர் ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இதுபற்றி கூகுள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிரான்ஸ்லிட்ரேஷன் ஐஎம்இ என்று இந்த வசதி அழைக்கப்படும். ரோமன் கீபோர்டைப் பயன்படுத்தி 14 மொழிகளில் ஏதாவது ஒன்றில் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டச்சு செய்தால் போதும். தேர்வு செய்யும் மொழியில் அந்த வார்த்தை பதிவாகும். தட்டச்சு செய்யப்படும் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாக கொண்டு அதன் மூல மொழிக்கு இந்த சாப்ட்வேர் தானாக மாற்றிக் காட்டும். உதாரணமாக, ஆங்கிலத்தில் கே&ஏ&எம்&ஏ&எல் என அடித்தால் தமிழில் கமல் என வரும். இதுபோல் தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, கிரீக், பார்சி, பெங்காலி, அரேபிக் ஆகிய 14 மொழிகளில் இந்த சேவையைப் பெறலாம். இதற்கான சாப்ட்வேரை கூகுள் இணைய தளத்தில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியமில்லை. ஆப்லைன் முறையிலும் உபயோகிக்க முடியும் என்பதுதான் சாப்ட்வேரின் முக்கிய சிறப்பம்சம்.

Wednesday, January 27, 2010

'தமிழ்நேஷன்' மூடப்பட்டது

0 comments
தமிழர்களின் ஆவணக் காப்பகமாகத் திகழ்ந்த தமிழ்நேஷன் இணையத்தளமும் மூடப்பட்டுவிட்டது.

நேற்று முன்தினத்துடன் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக இந்தத் தளம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் முக்கிய இணையத்தளமாகத் திகழ்ந்தது தமிழ்நேஷன். அதன் பிறகும் கூட, தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

விடுதலைப் புலிகள் தொடர்பான நிகழ்வுகள் ஆவணங்கள் தவிர, தமிழரின் தொன்மைச் சிறப்பு, இலக்கிய வரலாறு, தமிழரின் அரசியல் சிறப்பு என பல பிரிவுகளை உள்ளடக்கிய தளமாக இருந்த தமிழ்நேஷன், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுரையாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்...' என்ற கனியன் பூங்குன்றனார் கவிதையைச் சொல்லி தனது இயக்கத்தை நிறுத்தியுள்ளது தமிழ்நேஷன்.

காரணம்???????

Monday, January 25, 2010

சீன வைரஸ் பரவல்-தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'

0 comments
கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.

இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.

இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சிமென்டெக்கின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜான் ஹாரிசன் கூறுகையில், மைக்ரோசாப்ட்டின் பலவீனமான பிரவுசர்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை செயலிழக்க வைக்கக் கூடிய வைரஸ்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த வைரஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6ஐ வெகுவாக தாக்குகிறதாம். 7 மற்றும் 8வது வெர்சனை தாக்கக் கூடிய வகையில் அந்த வைரஸ்களை வலுவாக்கும் முயற்சிகளிலும் 'ஹேக்கர்கள்' ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 100 முன்னணி இணையத் தளங்களில் இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இவை மிகவும் அபாயகரமானவை. பிரவுசர் வழியாக நுழைந்தவுடனேயே இது கம்ப்யூட்டரைத் தாக்கி விடும் என்றார்.

தற்போதைய புதிய சாப்ட்வேரால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் வைரஸ் தாக்குவதைத் தடுக்க முடியும் என மைக்ரோசாப்ட் கூறுகிறது.

மேலும், சில வகை வைரஸ்கள் மூலம் நமது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்கள் உள்ளிட்டவற்றை தொலை தூரத்திலிருந்தபடி உளவு பார்க்கும் வேலைகளையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளனராம் என்கிறார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாமர்.

சீனாவில் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் வைரஸ்-உளவு சாப்ட்வேர் தாக்குதலால், அங்கிருந்து தனது அலுவலகங்களை இடம் மாற்றப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

வைரஸ் தடுப்பு சாப்ட்வேரை நிறுவிக் கொள்ள தனது இணையதளத்திற்குச் செல்லுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

-தட்ஸ் தமிழ்

Friday, January 22, 2010

சென்னை: நோக்கியா ஊழியர்கள் போராட்டம்????????

0 comments
நோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

70 ஊழியர்களை திடீரென்று நிர்வாகம் நீக்கிவிட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பூந்தமல்லியை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நோக்கியா தொழிற்சாலை. இதில் சுமார் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 70 பேரை அண்மையில் எந்தவித காரணமும் இன்றி நோக்கியா நிர்வாகம் பணிநீக்கம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து அத்தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அந்த நிறுவன வளாகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமலிங்க ராஜூ: ஒரு 'ஐடி ராஜாவின்' எழுச்சியும் வீழ்ச்சியும்

0 comments

தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியையே உண்டாக்கியவர் ராமலிங்க ராஜு.

சத்யம் என்ற நிறுவனத்தை சர்வ சாதாரணமாகத் துவங்கிய ராஜு, மிகக் குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் 'ப்ளூ சிப்' நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியவர். மிகச் சில வருடங்களில் 2 பில்லியன் டாலர் நிறுவனமாக சத்யம் உருவானது ராஜுவின் அபார திறமையால்தான். சொல்லப் போனால் அவருக்கு நிகரான ஒரு கார்ப்பரேட் நிர்வாகியே இல்லை என்கிறார்கள்.

ராஜுவின் குடும்பத் தொழில் ரியல் எஸ்டேட் தான். அதனால்தான் சத்யம் என்ற ஐடி நிறுவனத்தைத் துவங்கிய பிறகு அவர் மேடாஸ் இன்ப்ரா என்ற ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனத்தையும் துவங்கினார். சத்யம் நிறுவனத்தின் நிதியை இந்த மேடாஸுக்கு அவ்வப்போது மாற்றினார்.

இன்னொரு பக்கம் சத்யம் நிறுவனப் பங்குகளின் விலையை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்க, இல்லாத லாபத்தை உருவாக்கிக் காட்டினார்.

2008ம் ஆண்டில் உலகம் முழுக்க ஐ.டி நிறுவனங்கள் பெரிதாக அடிவாங்க, அந்த நேரத்திலும் போலி லாபம் காட்டவும், சத்யம் நிறுவன பணத்தை மேடாஸுக்கு மாற்றவும் அவர் முயன்ற போதுதான் மாட்டிக் கொண்டார்.

அதுவரை அவரைப் பற்றி ஆஹா ஓஹோவென எழுதி பெரும் பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்த மீடியா, அப்படியே தூக்கிப் போட்டு உடைத்து அந்த பிம்பத்தை சுக்கு நூறாக்கியது.

பின்னர் எத்தனையோ கதைகள்... ஆதாரங்கள் ராஜுவைப் பற்றியும், ராஜுவுக்கு எதிராகவும்...

ஆனால்- இவற்றுக்கெல்லாம் அப்பால், 5 கண்டங்களில் 66 நாடுகளில் சத்யம் என்ற ஒரு பிஸினஸ் சாம்ராஜ்யத்தை ராஜு உருவாக்கியிருந்த விதம், அதில் அவர் காட்டிய முனைப்பும் வேகமும் ஒவ்வொரு தொழிலதிபரும், இளைஞரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அனுபவம்.

அவரது மேடாஸ் நிறுவனம் நிறுவனம் பற்றி பல்வேறு மாறுபட்ட செய்திகள் உலா வந்தாலும், ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை அந்த நிறுவனம் வென்ற விதம் வளரும் நிறுவனங்களுக்கு ஒரு பாடம் என்கிறார்கள்.

ராஜு பெற்ற அபார வெற்றியின் பின்னணி... அவரது வீழ்ச்சிக்கான காரணங்கள்... நிறுவனச் சட்டங்களை அவர் தனக்கு சாதகமாக வளைத்த விதம், நிறுவன பங்குதாரர்கள், ஊழியர்கள் கண்களை மறைத்து அவர் செய்த பிஸினஸ் ஜாலங்கள்... இவை அனைத்தையும் இப்போது 'The Double Life Of Ramalinga Raju!' என்று ஒரு புத்தகமாக எழுதியுள்ளார் கிங்ஷக் நாக்.

இவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ரெஸிடென்ட் எடிட்டர் ஆவார்.

ராஜூவைப் பற்றி இதுவரை மீடியாவில் வெளிவராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் கலக்கலாய் எழுதியிருக்கிறார் நாக்.

முழுசாகப் படிக்க இந்த புத்தகம் ஆன்லைனிலும் விலைக்குக் கிடைக்கிறது.

Tuesday, January 19, 2010

யுனிநார் வாடிக்கையாளர் ஒரே மாதத்தில் 12 லட்சம்

0 comments

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது சேவைகளைத் துவக்கிய யுனிநார் 2010 ஜனவரிக்குள் அகில இந்திய அளவில் 12 லட்சத்திறகும் அதிகமான சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் அதன் சந்தாதாரர் எண்ணிக்கை 2லட்சத்து 2ஆயிரமாக உள்ளது என யுனிநார் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது.


ஒரு நிமிடத்திற்கு லோக்கல் காலுக்கு 29 பைசாவும் எஸ்டிடி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு 49 பைசா கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 3ம் தேதி உ.பி (மேற்கு), உ.பி (கிழக்கு), பீகார், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் யுனிநார் சேவை தொடங்கியது. அதன் ஜி.எஸ்.எம் சேவை ஜனவரி மாத இறுதியில் துவக்கப்பட உள்ளது.


கடந்த ஆண்டின் கடைசி மாதத்தில் மட்டும் தமிழ்நாடு வட்டத்தில் 2 லட்சத்துக்கு அதிகமான சந்தாதாரர்களும் இந்திய அளவில் 12 லட்சத்துக்கு கூடுதலாகவும் சந்தாதாரர்கள் உள்ளனர்.

Thursday, January 7, 2010

'ஐ போனுக்கு' போட்டியாக கூகுளின் 'நெக்ஸஸ் ஒன்'

0 comments

ஆப்பிள் நிறுவனத்துக்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் தனது சொந்தத் தயாரிப்பான நெக்ஸஸ் ஒன் செல்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

பென்சிலை விட மெல்லிசாக உள்ள இந்த செல்போனகள் இரண்டு வித விலைகளில் கிடைக்கின்றன.

முதல் வகை செல்போன் விலை 179 டாலர். இதில் குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட்வொர்க்கைத்தான் பயன்படுத்த வேண்டும். இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் வாங்க வேண்டும். இடையில் வேறு நிறுவனத்துக்கு மாறக்கூடாது.

அடுத்த வகை போன் 529 டாலர். இதில் விருப்பப்பட்ட நெட்வொர்க்கை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஐபோன்களுக்கு எதிராக இந்த நெக்ஸஸ் ஒன்னை களமிறக்கியுள்ளது கூகுள்.

ஒரு கம்ப்யூட்டரில் இணைய தளம் மூலம் என்னென்ன வசதிகளெல்லாம் உங்களுக்குக் கிடைக்குமோ அத்தனையும் இந்த நெக்ஸஸ் ஒன்னில் கிடைக்கும் என்பதுதான் இதன் சிறப்பு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியேற திட்டம்

0 comments

தெலங்கானா பிரச்னை தொடர்கதையாக இருப்பதால், ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அலுவலகங்களை மாற்ற திட்டமிட்டுள்ளன.


ஆந்திராவின் ஐதராபாத்தில் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா மற்றும் எச்சிஎல் ஆகிய நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும், ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு பிரிவினரும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.


இதனால் கடந்த ஒன்றரை மாதமாக ஐ.டி.தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் அலுவலகங்களை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு மாற்றுவது குறித்து அந்நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.


"ஐதராபாத்தில் செயல்படும் டாப் 5 ஐடி நிறுவனங்கள், சென்னை, பெங்களூரில் வாடகைக்கு அலுவலகம் வேண்டும் என கேட்டுள்ளன" என ஸ்ரீராம் பிராப்பர்டிஸ் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்தார்.


"இரண்டு ஐடி நிறுவனங்கள் 100 அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தமாக லீசுக்கு வேண்டும் என தெரிவித்துள்ளன" என அக்ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டி பாபு தெரிவித்தார்.

Related Posts with Thumbnails