Monday, November 30, 2009

எஸ்எம்எஸ் கட்டணங்கள் 99 சதவிகிதம் குறைப்பு!!

0 comments

எஸ்எம்எஸ் கட்டணங்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 1 பைசா மட்டுமே என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

மொபைல் சர்வீஸ் நிறுவனங்களில் அழைப்புக் கட்டணத்தை விட அதிக காஸ்ட்லியானதாக இருந்தது எஸ்எம்எஸ்தான். ஆனால் இந்த எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைந்த அலைவரிசை இருந்தாலே போதுமாம். இதற்கான கட்டணம் ஒரு பைசாவுக்கும் குறைவுதான். ஆனால் பல நிறுவனங்கள் இன்றைக்கும் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை எஸ்எம்எஸ் கட்டணமாக வசூலித்துக் கொண்டு வருகின்றன.

இந்த உண்மையை பத்திரிகைகள் சமீபத்தில் வெளிக் கொணர்ந்தன. இதனால் தொலைத் தொடர்பு ஆணையம் ட்ராய், 'பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எம்எஸ் கட்டணத்தை அதிகளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது உண்மைதான். விரைவில் குறைத்துவிடுவோம்' என்று சமாளித்திருந்தது.

ஆனால் மக்களுக்கு உண்மை தெரிந்து கடும் கோபத்திலிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட ரிலையன்ஸ், நேற்று (29-11-2009) எஸ்எம்எஸ் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.

இந்த அறிவிப்பின்படி இனி 1 எஸ்எம்எஸ் 1 பைசா மட்டுமே. ஒரு நாள் முழுக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 1 செலுத்தினால் போதும். எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பித் தள்ளலாம். ஒரு மாதம் முழுக்க எல்லையில்லை எஸ்எம்எஸ் அனுப்ப ரூ 11 செலுத்தினால் போதுமாம்.

பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோனும் இப்போது எஸ்எம்எஸ் கட்டண யுத்தத்தில் களமிறங்குகின்றன.

நோக்கியா சென்னை 3 ஜி மொபைல் தயாரிப்பு தீவிரம்!

0 comments

சென்னை மற்றும் தமிழகத்தில் 3 ஜி செல்போன் சேவை விரிவாக்கப்பட்டு வருவதையடுத்து, முன்னணி மொபைல் கருவி தயாரிப்பு நிறுவனங்கள் 3 ஜி வசதி கொண்ட மொபைல் தயாரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

சென்னை அருகே பெரும் தொழிற்சாலைகளை அமைத்துள்ள நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் மற்றும் மோட்டாரோலா நிறுவனங்கள் இனி 3 ஜி மொபைலை அதிகம் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

நோக்கியாவின் புதிய ஆலை படப்பை அடுத்துள்ள ஒரகடத்தில் அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 3 ஜி மொபைல் உற்பத்தி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த நிறுவனத்தின் இன்னொரு ஆலையில் இப்போது 2 ஜி மொபைல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.


அடுத்த, ஆண்டு 3 ஜி ஏலத்தை மத்திய அரசு முடிக்கும் தறுவாயில் மேலும் அதிக மொபைல்கள் தேவைப்படும். எனவே இந்த தேவையைச் சமாளிக்க ரூ 300 கோடியை கூடுதலாக முதலீடு செய்கிறது நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க்.

மோட்டாரோலா நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் வழங்கும் அஸுர்

0 comments

வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.


இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.

முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.

கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு: கேட் தேர்வு ரத்து

0 comments

கமப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை உள்பட பல்வேறு தேர்வு மையங்களில் நடந்த கேட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக கேட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் முதன் முறையாக நவம்பர் 28ம் தேதி ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆனால் கம்ப்யூட்டர் சர்வர்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சென்னை, பெங்களூரு, லக்னோ, சண்டிகார் ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு ரத்தானது.

கேட் தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் , தேர்வு எழுத முடியாதவர்களுக்கு புதிதாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான புதிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும். இதுபோன்ற பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்படாமல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், கேட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வர் கோளாறால் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அடுத்த ஒன்பது நாட்களுக்கான தேர்வுகளில் தொடர்ந்து கலந்து கொள்ளலாம் என்றார்.

முன்னர், கேட் தேர்வு பேப்பர் - பென்சில் தேர்வாக நடந்து வந்தது. தற்போது அதை ஆன்லைன் தேர்வாக மாற்றி அமைத்ததால், அத்தேர்வு எழுதுபவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு முறையை மாற்றியமைத்ததால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கேட் தேரவு எழுதுபவர்கள் சதவீதமும் குறைந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Posts with Thumbnails