Saturday, November 7, 2009

அமெரிக்காவில் 27 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை!

0 comments


அமெரிக்கப் பொருளாதாரம்  சரியான திசையில் பயணிப்பதாக அதிபர் ஒபாமா சொல்லி வாய் மூடும் முன்பே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் காணாத உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது.


அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 190000 பேர் வேலை இழந்துள்ளனர்.


இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம்.

"நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்" என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.

50 கோடியைத் தாண்டியது தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை!

0 comments
இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மொத்தம் 509 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இது 3.03 சதவிகித உயர்வாகும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் தெரிவித்துள்ளது.


இந்த உயர்வின் மூலம் இந்தியாவின் டெலிடென்சிட்டி 43.5 சதவிகிதமாக உள்ளது.

கம்பியில்லாத தொலைபேசி மற்றும் மொபைல் இணைப்புகள் பெற்றுள்ளோர் எண்ணிக்கை மட்டும் 471.73 மில்லியனாக உள்ளது.

மொபைல் சேவையைப் பொறுத்தவரை முதலிடத்தில் இருப்பது தனியார் நிறுவனமான பார்தி ஏர்டெல் 110.5 மில்லியன் சந்தாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 86.11 மில்லியன் சந்தாரர்களுடன் இரண்டாம் இடத்திலும், வோடபோன் 82.84 மில்லியன் சந்தாரர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.


அனைத்து வசதிகளும் கொண்ட அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 58.75 மில்லியன் சந்தாதாரர்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.


டாடா நிறுவனம் 5-ம் இடத்தில் உள்ளது. இதன் சந்தாதாரர் எண்ணிக்கை 46.79 மில்லியன்.


பிராட்பேண்ட் இணைப்பு பெற்றுள்ளோர் எண்ணிக்கை 7.22 மில்லியன். அதேநேரம் லேண்ட்லைன் இணைப்பு பெற்றவர்களில் 37.31 மில்லியன் சந்தாதாரர்கள் அவற்றை திரும்ப சரண்டர் செய்துள்ளர்.

Friday, November 6, 2009

எஸ்எம்எஸ் கட்டணம் விரைவில் குறைகிறது

0 comments
ஒரு விநாடிக்கு ஒரு பைசா என்ற அளவுக்கு செல்போனில் பேசும் கட்டணம் குறைந்ததைத் தொடர்ந்து, எஸ்எம்எஸ் கட்டணமும் விரைவில் குறைகிறது. டொகோமோவை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விநாடி அடிப்படையிலான கட்டண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. எனினும், எஸ்எம்எஸ் கட்டணம் மட்டும் தேர்ந்தெடுத்த திட்டத்தைப் பொறுத்து 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. உண்மையில் எஸ்எம்எஸ் டெலிவரி செய்ய போன் நிறுவனத்துக்கு ஒரு பைசாவுக்கு குறைவான செலவே ஆகிறது. எனவே, எஸ்எம்எஸ் கட்டணம் முழுவதும் போன் நிறுவனத்தின் வருமானம்தான். அத்துடன், போன் பேச விநாடி அடிப்படையில் கட்டணம் வந்து விட்டதால், எஸ்எம்எஸ் அனுப்புவது பெருமளவு குறைந்து விட்டது. அனுப்ப வேண்டிய தகவலை போன் செய்தே சுருக்கமாக கூறி விடுவதை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இதனால், எஸ்எம்எஸ் கட்டணத்திலும் போட்டியைத் தொடங்க போன் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. புதியதாக வரவுள்ள நிறுவனங்களுக்கு முன்னதாக முந்திக் கொள்ள பழைய நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. எனவே, எஸ்எம்எஸ் கட்டணமும் ஒரு பைசா முதல் 10 பைசாவுக்குள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லே ஆஃப்... அதிர்ச்சியில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்!

0 comments


விண்டோஸ் 7 வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மீண்டும் ஆட்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இந்த வார இறுதிக்குள் மேலும் 1200 ஊழியர்களை நீக்க மைக்ரோசாப்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5000 பணியாளர்களை நீக்குவதாக அறிவித்த மைக்ரோசாப்ட், படிப்படியாக அதைச் செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் மேலும் சில ஊழியர்களை நீக்குவதாக நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.

இன்றைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இப்போதைய புதிய ஆட்குறைப்பில் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்களே எனத் தெரிய வந்துள்ளது.

இன்னொரு பக்கம் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் குறைந்த அளவு பணியாளர்களை புதிதாக நியமிக்கிறது மைக்ரோசாப்ட். ஆனால் லே ஆஃப் செய்யப்படும் ஊழியர் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவேயாகும்.

உறுதி செய்த மைக்ரோசாப்ட்:

இந்நிலையில் பணியாளர் நீக்கம் குறித்த செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதுவரை 800 பேர் நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதிப் பட்டியலில் இன்னும் கூடுதலான பணியாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும் இன்று வியாழக்கிழமை காலை அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 23-ம் தேதி நிலவரப்படி 91 ஆயிரம் நேரடி பணியாளர்கள் மைக்ரோசாப்டில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தப் பணியாளர்கள் இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

Thursday, November 5, 2009

நோக்கியா, சீமென்ஸில் 5,000 பணியாளர் குறைப்பு!

0 comments

முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான நோக்கியா மற்றும் சீமென்ஸில் 5,000 பணியாளர்கள் குறைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

நோக்கியா - சீமென்ஸ் நெட்வார்க்கில் உலகம் முழுக்க 64000 பணியாளர்கள் உள்ளதாகவும், இவர்களில் 7 முதல் 8 சதவிகித ஊழியர்கள் நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் நிலையில் சற்று முன்னேற்றம் தெரிந்தாலும், செலவுக் குறைப்பு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இந்த முடிவை மேற்கொண்டதாக நோக்கியா அறிவித்துள்ளது.

வரும் 2011-ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் யூரோ அளவுக்கு செலவுக் குறைப்பு செய்ய வேண்டியுள்ளதாம் இந்த நிறுவனங்கள். இந்த ஆண்டு 550 யூரோ அளவுக்கு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனவாம்.

ஐ.டி., பிபிஓ நிறுவனங்களில் சம்பளம் 16% வரை குறைப்பு

0 comments
சர்வதேச நிதி நெருக்கடியால் ஐ.டி., அவுட்சோர்சிங் நிறுவன ஆர்டர்கள் சரிந்துள்ள நிலையில், முன் அனுபவம் இல்லாத ஊழியர்கள் சம்பளத்தை நிறுவனங்கள் 16 சதவீதம் வரை குறைத்து விட்டன. சர்வதேச நிதி நெருக்கடியால் இந்தியாவின் ஆர்டர்கள் குறைந்து ஐ.டி., பிபிஓ நிறுவனங்களின் லாபம் பாதித்தது. இப்போது நிலைமை சீராகி வந்த போதிலும், புதிதாக பணியில் சேர்க்கப்படும் அனுபவமற்ற பட்டதாரிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட சம்பளம் இப்போது அளிக்கப்படுவதில்லை. ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் கம்ப்யூட்டர் சயின்ஸ், பொறியியல் பட்டதாரிகள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். டிசிஎஸ், இன்போசிஸ் உட்பட நூற்றுக்கணக்கான ஐ.டி., சேவைத் துறையில் வேலைக்காக விண்ணப்பிக்கின்றனர். ஐ.டி. நிறுவனங்களின் நிலைமை ஓராண்டுக்கு முன்பு இருந்ததைப் போல இல்லாததால், பாதிக்கு மேற்பட்டோருக்கு வேலை கிடைப்பதில்லை. படிப்பை முடித்து புதிதாக வேலை தேடுவோரின் சம்பளம் 10 முதல் 16 சதவீதம் வரை குறைந்து விட்டது.

போன் எண்ணிக்கை 50 கோடியாக உயர்வு

0 comments
நம்நாட்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம், அடுத்த ஆண்டு இறுதிக்கான இலக்கு 15 மாதங்கள் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது. செல்போன், லேண்ட்லைன் உட்பட அனைத்து வகை போன் இணைப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு இறுதிக்குள் 50 கோடியாக அதிகரிக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 30ம் தேதியே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது 15 மாதங்கள் முன்னதாக நடந்துள்ள சாதனை. ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி நம்நாட்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 49 கோடியே 40 லட்சமாக இருந்தது. இது செப்டம்பர் 30ம் தேதி வரை 50 கோடியே 90 லட்சமாக அதிகரித்தது. இது 3.03 சதவீத உயர்வு. அதன்மூலம், இப்போது 50 கோடிக்கு மேற்பட்டோரிடம் போன் உள்ளது. நாட்டின் 120 கோடி மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், 100 பேருக்கு 43 பேரிடம் இப்போது போன் உள்ளது. அதில் 40 பேரிடம் செல்போன் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் செல்போன் நிறுவனங்கள் 1.51 கோடி புதிய இணைப்புகளை அளித்துள்ளன. அதிக செல்போன் எண்ணிக்கையில் உலகிலேயே சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 2வது இடம் வகிக்கிறது. சீனாவில் 60 கோடி பேருக்கு மேல் போன் இணைப்பு வைத்துள்ளனர். விநாடி அடிப்படையில் கட்டணத்தை பெரும்பாலான நிறுவனங்கள் இப்போது அறிவித்துள்ளதால் போன் இணைப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts with Thumbnails